தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பானையில் நிரம்பும் மனிதநேயம்!

பானையில் நிரம்பும் மனிதநேயம்!

பானையில் நிரம்பும் மனிதநேயம்!


PUBLISHED ON : ஜூலை 08, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலையில் ஓவியா பள்ளிக்கு வரும்போது, ஒரு துணிப்பையை எடுத்துவந்தாள். மூன்று தெருக்களைக் கடந்து வந்தபோது, அங்கே பீரோ மாதிரி ஓர் அமைப்பு இருந்தது. கீழே பழைய ஷூக்களும் மேல் அடுக்குகளில் பழைய துணிகளும் கொட்டப்பட்டு இருந்தன. அல்லது அடுக்கி வைத்ததை, யாரோ தாறுமாறாக கலைத்துப் போட்டு வைத்திருந்தார்கள்.

ஓவியா, துணிப் பையில் இருந்து நான்கைந்து துணிகளை எடுத்து அந்த அடுக்கில் வைத்துவிட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

நான் அந்த அடுக்கையே பார்த்துக்கொண்டு இருந்தேன். பலர் அதைப் பயன்படுத்தியதற்கான தடயம் தெரிந்தது. ரொம்பவும் மோசமான துணிகள் ஓரம் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஜோடியற்ற ஒற்றைச் செருப்புகளும், ஷூக்களும்கூட இருந்தன. பழைய அயர்ன் பாக்ஸ் ஒன்றும், மேஜை விளக்கு ஒன்றும்கூட இருந்தன.

எனக்கு ஒரு கணம் மனம் கசிந்தது. இன்னொருபுறம் நிறைய கேள்விகள் எழுந்தன. ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வேண்டாத விஷயங்களைக் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகிறார்களா? அல்லது உண்மையிலேயே மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில், துணிமணிகளை வைத்துவிட்டுப் போகிறார்களா? இதனால் என்ன நடக்கும் என்று நினைக்கிறார்கள்? ஒருவகையில் இது ஏழ்மையை மேன்மேலும் வளர்க்கத்தானே உதவும்? ஏழ்மை ஒழிய இதுவா வழி?

உமா மிஸ்ஸிடம் இதைப் பற்றி பேச ஆரம்பித்தபோது, என் கேள்விகள் அவரை என்னவோ செய்திருக்க வேண்டும். என்னையும் ஓவியாவையும் பார்த்துக்கொண்டு இருந்தவர்,“இதையெல்லாம் வேற மாதிரி பார்க்கணும் கதிர். இந்தச் செயல்களுக்குப் பின்னால ஓர் உணர்வு இருக்கு. உண்மையிலேயே இன்னிக்கு அந்த உணர்வு காணாமல் போய்க்கிட்டு இருக்கு. நாம் மீட்டெடுக்க வேண்டிய உணர்வு. டில்லியில் 'மட்காமேன்' நடராஜன் இதைத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கார்.”

“மட்காமேன் அப்படின்னா என்ன மிஸ்?” ஓவியா.

“இந்தியில மட்கான்னா, மண் பானைன்னு அர்த்தம்.”

“அவர் என்ன செய்யறார் மிஸ்?” என் ஆர்வம் தாளாமல் கேட்டேன்.

“தினசரி மண்பானையில் தண்ணீர் கொட்டி வைக்கிறார். ஒண்ணு, ரெண்டு பானையில இல்ல, 70 பானைகள்ல கொட்டி வெக்கறார்.”

“ஓ!”

“டில்லி பத்தி சொன்னாதான் உங்களுக்கு இதனோட முக்கியத்துவம் புரியும். மழைன்னா கனமழை; வெயில்னா கொடுமையான வெயில். கோடை காலத்துல தகிக்கும். மக்கள் குடிக்க தண்ணியில்லாமல் தவிப்பாங்க. வசதியுள்ளவங்க, கடைகள்ல தண்ணிய வெல கொடுத்து வாங்குவாங்க. ரிக்ஷா காரங்க, கூலி வேலைக்குப் போறவங்க என்ன பண்ணுவாங்க... தவிப்பாங்க.

இதைப் பார்த்த நடராஜன் செஞ்ச எளிமையான வேலைதான், தண்ணிப் பானை வெக்கறது. நாலு வருஷத்துக்கு முன்னால், மூணு பானையோட ஆரம்பிச்சார். இன்னிக்கு 70 பானைகள் வெச்சிருக்கார். ஒவ்வொரு நாள் காலையும் 5 மணிக்கு தன்னோட வேன்ல கிளம்பிடுவார். ஒவ்வொரு பானையா தண்ணி நிரப்பிக்கிட்டே வருவார். தண்ணி தீர்ந்துடுச்சுன்னா, மக்களே அங்கே இருக்கிற எண்ணுக்கு போன் பண்ணி சொல்லுவாங்க. மீண்டும் வந்து தண்ணிய நிரப்புவார். தண்ணிப் பானை வெக்க சின்ன மேடை, எடுத்துக்குடிக்க டம்ளர்னு ஏற்பாடு செஞ்சுருக்கார். யாருடைய உதவியும் இல்ல. தன்னோட சொந்த செலவுல, கூட இருக்கிற ஒரு சில தன்னார்வத் தொண்டர்கள் உதவியோட, தெற்கு டில்லியில் இவரது தொண்டு நடந்துக்கிட்டு இருக்கு.

கேக்கறதுக்கு ரொம்ப எளிமையான விஷயமா தெரியும். என்ன பண்றார்? தினசரி தண்ணி வெக்கறார், அவ்வளவுதானேன்னு தோணலாம். ஆனால், அதை மத்தவங்க யாருமே செய்யணும்னு நினைக்கல. தண்ணியில்லாமல் தவிக்கும்போதுதான், இந்த மண் பானையோட மகத்துவம் புரியும்.

இதுதான் கருணை. அடுத்தவங்க கஷ்டப்படுவாங்களேன்னு மனசு கனியுது இல்லையா? இதுதான் ரொம்ப அடிப்படையான உணர்வு. சகமனுஷனைப் புரிஞ்சுக்கற பரிவு. இது தன்னெழுச்சியா வரணும். யார் என்ன கஷ்டப்பட்டாலும் கண்டும் காணாமல் போறது மனுஷத்தனம் இல்லை. அடுத்தவர் கஷ்டத்தை தன் கஷ்டமாகப் பார்க்கத் தெரியணும்.

ஓவியா துணிய வெச்சுட்டு வந்ததும், அந்த மாதிரியான உணர்வுதான். அதனால வறுமை ஒழிஞ்சுடுமா, வறுமையை மேலும் வளர்க்கறோமாங்கற கேள்வியெல்லாம் தவறானது. உண்மையில, உன்னால என்ன செய்ய முடிசுஞ்சுதுன்னு கேள்வி கேட்டுப் பார். அது போதும்.

ஒண்ணும் வேணாம். வெயில் காலத்துல தினசரி, உங்க வீட்டு மொட்டை மாடியில் சின்னதா ஒரு தட்டு வெச்சு, அதில தண்ணி ஊத்தி வையுங்க, போதும். எத்தனை காக்கா, புறாக்கள் வந்து தண்ணி குடிக்கும், தெரியுமா?

கருணைங்கறது ரொம்ப பெரிய உணர்வு. மனுஷனுக்கு ஆதாரமான உணர்வு. ஆனால், அதை ரொம்ப எளிமையா வெளிப்படுத்தலாம்.”

வார்த்தையால் வர்ணிக்க முடியாத இந்த உணர்வு என் மனசெங்கும் ஆட்கொள்ளத் தொடங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us