
தூதுவளை
ஆங்கிலப் பெயர்: 'தாய் நைட்ஷேட்' (Thai Nightshade)
தாவரவியல் பெயர்: 'சோலானம் டிரைலோபாட்டம்' (Solanum trilobatum)
தாவரக் குடும்பம்: 'சோலானாசியே' (Solanaceae)
வேறு பெயர்கள்: தூதுவேளை, கூதளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம்
தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் பரவலாகக் காணப்படும் சிறுசெடி தூதுவளை. ஈரப்பதம் உள்ள இடங்களில் புதர்போலவும், கொடியாகவும் செழித்து வளரும். கொடிகளில் சிறிய, கூர்மையான முட்கள் இருக்கும். இலை கரும்பச்சை நிறத்தில் மென்மையான முட்களுடன் காணப்படும். ஊதா நிறத்தில் பூக்கள் பூக்கும். உருண்டையான பச்சை நிறக் காய்கள், பழுத்ததும் சிவப்பு நிறத்தில் மாறும். இலையும், வேரும் கசப்புச் சுவையுடன் இருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
மருத்துவக் குணங்கள் நிறைந்தது. இயற்கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இலையை உலர்த்திப் பொடியாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆஸ்துமா, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும். கோழை, மலச்சிக்கலை அகற்றும், பசியைத் தூண்டும்.
பயன்படும் பாகங்கள்: இலை, பூ, காய், பழம், வேர்
- கி.சாந்தா

