PUBLISHED ON : மார் 12, 2018

பொறி உள்ளான்
ஆங்கிலப் பெயர்: 'உட் சாண்ட்பைப்பர்' (Wood Sandpiper)
உயிரியல் பெயர்: 'டிரிங்கா கிளாரியோலா' (Tringa glariola)
பறவைக் குடும்பம்: 'ஸ்கோலோபாசிடே' (Scolopacidae)
வகை: வலசைப் பறவை (Migratory Bird)
காணப்படும் இடங்கள்:
சதுப்பு நிலங்கள், ஏரி, ஆறு, ஈரமான விவசாய நிலங்கள்
ஐரோப்பா, ஆசிய கண்டங்களின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து குளிர்காலத்தில் இந்தியாவிற்கு வலசை வரும் பறவை பொறி உள்ளான். மிகச்சிறிய இந்தப் பறவைகள், நெடுந்தொலைவு பறந்துவரும் திறனுடையவை. நீர்நிலைகள் அருகில் உள்ள பகுதிகளில் காணப்படும். புறாவைவிடச் சிறியதாக இருக்கும். வாலை ஆட்டியவாறு தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டு இருப்பது இதன் அடையாளம். உடலின் மேற்பகுதி பழுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடனும், அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும். கால்கள் மஞ்சள், பச்சை கலந்த நிறத்தில் இருக்கும். நீர்நிலைகளின் ஓரங்களில் உள்ள சிறிய முதுகெலும்பிகள், மண் புழு போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். அலகுகள் சேற்றில் இரை தேடுவதற்கு ஏதுவாக இருக்கும். விசில் சத்தத்தைப்போல விட்டுவிட்டுக் குரலெழுப்பும். உயரமாக வளர்ந்த புல்வெளிப் பகுதிகளில் சருகுகளைக்கொண்டு கூடு அமைத்து முட்டைகள் இடும். உலர்ந்த மரப்பொந்துகளிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும். குளிர்காலத்திற்குப் பிறகு இவை தங்கள் சொந்த இடத்திற்குச் திரும்பிச் சென்றுவிடுகின்றன.
அளவு: 23 செ.மீ.
எடை: 50 -- 100 கிராம்
இறக்கை அகலம்: 40 செ.மீ.
உணவு: புழு, பூச்சிகள்
இனப்பெருக்கப் பருவம்: மே முதல் ஆகஸ்ட் வரை
இனப்பெருக்க காலம்: 23 நாட்கள்
இடும் முட்டைகள்: 4
ஆயுட்காலம்: 10 ஆண்டுகள்
- ப.கோபாலகிருஷ்ணன்

