தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மனத்தடையே உயர்வுக்கு முட்டுக்கட்டை!

மனத்தடையே உயர்வுக்கு முட்டுக்கட்டை!

மனத்தடையே உயர்வுக்கு முட்டுக்கட்டை!


PUBLISHED ON : அக் 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மீனா நாராயணன்

1905 - 1954


தயக்கம் தவிர்!

எங்கள் பள்ளியில் பல்வேறு மாணவர் தலைவர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கும் முறை உண்டு. விளையாட்டுச் செயலர், கலாசாரச் செயலர், ஒழுக்கத்துக்கான செயலர் என்று விதவிதமான செயலர்கள் உண்டு. பள்ளி மாணவர் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு மட்டும் தேர்தல் உண்டு. எட்டாம் வகுப்பில் இருந்து கலாசாரச் செயலர் தேர்வு செய்யப்படுவார்.

என் பெயரையும், இன்னும் இரண்டு மாணவர்கள் பெயர்களையும் எங்கள் வகுப்பு ஆசிரியை, தலைமை ஆசிரியருக்குப் பரிந்துரை செய்யப் போவதாகச் சொன்னார். நான் பின்வாங்கி விட்டேன். பள்ளியில் எந்த விழா நடந்தாலும், அதில் மாணவர்களைப் பாட்டுப்பாட வைக்கவும், கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் நான் ஓடியாடி வேலை செய்யவேண்டும். விருந்தினர்களை அழைத்து வரவும், மரியாதை செய்யவும் கூப்பிடுவார்கள். என்னால் இதெல்லாம் செய்ய முடியும் என்று தோன்றவே இல்லை.

வகுப்பு ஆசிரியர் இரண்டு மூன்று முறை, என்னை வற்புறுத்திப் பார்த்தார். அப்புறம் கேட்கவில்லை. உமா மிஸ்ஸிடம் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. அவர் தான் காரணம் கேட்டார்.

“என்னால எப்படி வேலைசெய்ய முடியும்னு யோசனையா இருக்கு மிஸ்!”

“செஞ்சு பார்த்தா தானே, வேலை என்னன்னே தெரியும்? கல்சுரல் செக்ரடரியா இருந்தா தானே எல்லா ஆசிரியர்களோடும் பேசிப் பழகி, வெளிவட்டாரப் பழக்கங்களையும் ஏற்படுத்திக்க முடியும்?”

எனக்குப் பதில் தெரியவில்லை. ஒரு பக்கம் ஆசையாகத்தான் இருந்தது.

“முன்னேற்றத்துக்குத் தயக்கம் பெரிய எதிரி, கதிர். மீனா நாராயணனைப் பத்தி கேள்விப்பட்டிருக்கியா?”

“யார் மிஸ் அவங்க?”

“இந்தியாவின் முதல் பெண் ஒலிப்பதிவுப் பொறியாளர். இப்போதான், அவங்களைப் பத்திய செய்திகள் அதிகமா வெளியே தெரிய ஆரம்பிச்சிருக்கு. அவங்களைப் பத்தி படிக்கும்போதுதான், எவ்வளவு ஆச்சரியமா இருக்குத் தெரியுமா?”

“ஒலிப்பதிவு பொறியாளர்னா?”

“இன்னிக்கு இதெல்லாம் ஒரு விஷயமாகவே தெரியாது. ஊமைப் படங்கள் கேள்விப்பட்டிருக்கியா?”

“ஆரம்ப காலத்துல சார்லி சாப்ளின் படங்கள் அப்படி இருக்கிறதைப் பார்த்திருக்கேன்.”

“கரெக்ட். அதற்குப் பிறகு வந்த திரைப்படங்கள்ல, வசனங்கள், பாடல்கள் எல்லாம் வந்துச்சு. இந்தப் படங்களை 'டாக்கி'ன்னே சொல்வாங்க. தமிழ்நாட்டுல 1930களிலேயே இந்த அலை அடிக்க ஆரம்பிச்சுது. குரலையும் பாடல்களையும் ஒலிப்பதிவு செய்யறதுக்கு புனே, மும்பை, கோல்கட்டான்னு தான் போக வேண்டியிருந்தது.

அந்தச் சமயத்துல தமிழ்நாட்டுலேயே ஓர் ஒலிப்பதிவுக் கூடம் ஆரம்பமாச்சு. அதுக்கு 'ஸ்ரீனிவாசா சினிடோன்'னு பேர். நாராயணன்னு ஒருத்தர் அதை ஆரம்பிச்சார். அதுல, பொத்தார்னு ஓர் ஒலிப்பதிவுக் கலைஞர் மும்பையிலே இருந்து வந்தார். அவருக்கு உதவியாளராக நாராயணன் தன்னோட மனைவி மீனாவைச் சேர்த்துவிட்டார்.

கொஞ்சம் நினைச்சுப் பாரு. 1930கள்ல பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குவாங்க. வேலைகள் செய்யறதே பெரிய விஷயம். அதுலேயும் சினிமா துறைக்குள்ளே வரவே பலரும் தயங்குவாங்க. அந்தத் தயக்கத்தையெல்லாம் உதறிட்டு, மீனா நாராயணன் மிக முக்கியமான ஒலிப்பதிவாளரா மாறி இருக்காங்க.”

“ஓ! அதுக்காக படிச்சாங்களா மிஸ்?”

“இல்லை. வெறும் அனுபவம் தான். பொத்தார் கிட்ட ரெண்டு ஆண்டுகள் உதவியாளராக இருந்து, மீனா அத்தனை தொழில்நுட்ப நுணுக்கங்களையும் கத்துக்கிட்டாங்க.

பின்னாடி, அவங்களே முழுநேர ஒலிப்பதிவாளரா மாறி, 9 திரைப்படங்களுக்கு ஒலிப்பதிவு செஞ்சிருக்காங்கன்னா, பார்த்துக்கோயேன். இதெல்லாம் தன்னால செய்ய முடியுமா, கத்துக்க முடியுமானெல்லாம் அவங்க தயங்கலை. பின்வாங்கலை. ஒதுங்கிப் போகவும் இல்லை.

புதிய துறையாச்சேன்னு பயப்படவும் இல்லை. தயக்கத்தை உதறினாங்க. இன்னிக்கு உலகமே அவங்களோட பங்களிப்பைக் கொண்டாடுது.

எப்போதும் சவால்கள்தான் வாய்ப்புகளைத் தரும். அதை ஏத்துக்கத் தயங்கக் கூடாது. முயற்சி செஞ்சு பார்க்க வேண்டும். யார் கண்டா, நீங்களும் இன்னொரு சாதனையாளரா மாறலாமே!”

எனக்குச் சட்டென விழிப்பு வந்தது போலிருந்தது. நானே என் காலைக் கட்டிக்கொண்டு, ஓடத் தயங்குவது தெரிந்தது. வெளியே இருக்கும் தடைகளைவிட, மனத்தடை தான் மிகப்பெரிய எதிரி என்பதைப் புரிந்துகொண்டேன்.

கல்சுரல் செக்ரடரி பதவிக்கு என் பெயரைப் பரிந்துரைக்கச் சொல்லி, வகுப்பு ஆசிரியரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

“தமிழ்மொழியும், இசையின் போக்கும் அறியாதவர்கள் ஒலிப்பதிவு செய்வதால், ஒலிப்பதிவில் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. நிறைய தமிழ்ப் படங்கள் மோசமாக இருப்பதற்கு இதுவே காரணம். அந்தக் குறையைப் போக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியதால், ஒலிப்பதிவில் சற்று சிரத்தையுடன் கவனம் செலுத்தினேன்; இரண்டே ஆண்டுகளில் அந்தத் துறையில் தேவையான அனுபவம் கிடைத்து விட்டது.”

- மீனா நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us