PUBLISHED ON : செப் 24, 2018

அரசவால் ஈ பிடிப்பான்
ஆங்கிலப் பெயர்: 'இந்தியன் பாரடைஸ் ஃபிளை கேச்சர்' (Indian Paradise Fly Catcher)
உயிரியல் பெயர்: 'டெர்ப்சிபோன் பாரடைசி' (Terpsiphone paradisi)
எப்பொழுதும் பாடிக் கொண்டிருக்கும் அழகிய சிறு பறவை. 'கிரீச்… கிரீச்…' என்று குரலெழுப்பியபடி பறக்கும். வெள்ளை, பழுப்பு கலந்த சிவப்பு நிறங்களில் இருக்கும். தோட்டங்கள், அடர்ந்த காடுகளே இதன் வாழ்விடம். கருப்பு நிறத் தலையில், கிரீடம் போன்ற நீண்ட கொண்டையும், உடலைவிட மிக நீண்ட அழகிய வாலும் இதன் அடையாளம். பெண் பறவைகளுக்கு வால் குட்டையாக இருக்கும். கால்களில் மூன்று விரல்கள் முன்புறமும், ஒரு விரல் பின்புறமும் அமைந்திருக்கும். பூச்சிகளே இதன் முக்கிய உணவு. எனவே உழவனின் நண்பன் எனலாம்.
புல், சருகு, சிலந்தி வலைகளைக் கொண்டு கிண்ண வடிவில் கூடு கட்டும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை இனப்பெருக்க காலம்.
3 முதல் 4 முட்டைகள் வரை இடும். முட்டைகளை 15 நாட்களுக்கு அடைகாக்கும். ஆண், பெண் பறவை இரண்டும் குஞ்சுகளைப் பராமரிக்கும். இந்தியா, வங்கதேசம், பூடான், சீனா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இவை பரவலாகக் காணப்படுகின்றன.
நீளம்: 20 செ.மீ.
வால் நீளம்: 30 செ.மீ.
எடை: 20 கிராம்
வாழ்நாள்: 10 ஆண்டுகள்
- கிருபா நந்தினி
