PUBLISHED ON : பிப் 08, 2016
யானை உரசியதில் கார் வேகமாக ஆடியது. கண்ணன், 'விருட்' என்று எழுந்து உட்கார்ந்தான்.
கத்தப் போன ரவியின் வாயைப் பொத்தினான் கண்ணன். “டேய்… ஒத்தை யானைடா. கத்தித் தொலைக்காதே. அதுக்குக் கோவம் வந்துரும்” என்றான். கையை மட்டும் நீட்டி டிரைவரின் தோளைப் பிடித்து ஆட்டினான். கொட்டாவி விட்டபடியே கண்ணைத் திறந்த டிரைவரையும், 'உஷ்…' என்று எச்சரித்தான்.
யானையோ எதையும் கவனித்ததாகத் தெரியவில்லை. காரை, அது ஒரு பொம்மை போலவே நினைத்தது.
யானைக்கு அது விளையாட்டு. உள்ளே இருந்தவர்களுக்கோ உயிர் ஆபத்து.
டிரைவரின் கண்களில் பயம் நன்றாகத் தெரிந்தது. கண்ணன் மட்டும் தைரியமாக இருப்பது போல் தெரிந்தது. “மாட்டிக்கிட்டோம். பயந்து பிரயோஜனம் இல்லை” என்று கிசுகிசுப்பான குரலில் சொன்னான் கண்ணன்.
அவனே தொடர்ந்து, “அங்கிள், நான் ஒரு நியூஸ் படிச்சேன். கிராமங்களுக்குள்ள வந்த யானைகளை விரட்ட மிளகாய்ப் பொடியைத் தண்ணியில கலந்து தெளிச்சாங்களாம்…” என்றான்.
கண்ணனை ஒரு கொலைவெறிப் பார்வை பார்த்தார் டிரைவர். “இப்ப நான் போய் மிளகாய்ப் பொடி, ஸ்ப்ரேயர் மிஷின் எல்லாம் வாங்கிட்டு வரணுமா? அதை இந்த யானையோட தும்பிக்கைக்குள்ள அடிக்கப் போறியா?” என்றார்.
கண்ணன் உடலை வளைத்து, நெளித்து பின்புற இருக்கையின் கீழே கையை விட்டுத் துழாவினான்.
ராகினி, உடலைக் குறுக்கி, தூக்கத்தைத் தொடர்ந்தாள். “குமாரும் முழிச்சுக்கலைடா…” என்று கண்ணன் ஆச்சரியமாகச் சொன்னான்.
கண்ணனின் கையில் சிக்கியது, மிளகாய் வற்றல் பொட்டலம். தின்பதற்கு உபயோகப்படாது என்று கண்ணன் ஆத்திரத்தோடு வீசி எறிந்த அதே பொட்டலம்!
இவ்வளவு நேரத்தில் அந்த யானை, தங்களைத் தாக்க வரவில்லை என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது. ரவியின் முகத்தில் ஒரு தெளிவு. அவனது மூளை கச்சிதமாக வேலை செய்தது.
மெள்ள எக்கி, முதல் சீட்டில் சாய்ந்து காரின் டேஷ் போர்டைத் திறந்தான். 'க்ளிக்.' உள்ளே இருந்த தீப்பெட்டியை ரவியின் இரு விரல்கள் கவ்விப் பிடித்தன.
கண்ணன், ரவி ஆகிய இரண்டு ஜீனியஸ் மூளைகள், திறமையாகச் செயல்பட ஆரம்பித்தன.
மிளகாய் வற்றல் பொட்டலத்தைப் பிரித்தான் கண்ணன். நடுங்கும் விரல்களால் ஒரு தீக்குச்சியை எடுத்து உரசினான் ரவி. எரியும் குச்சியைப் பொட்டலத்துக்குள் போட்டான். மிளகாய் புகைய ஆரம்பித்தது. கார நெடி, காருக்குள் பரவியது. கதவை கொஞ்சூண்டு திறந்தான் கண்ணன். புகை கிளம்பும் மிளகாய் வற்றல் பையை வெளியில் போட்டான். கதவை மறுபடி அடைத்தான்.
யானை முதலில் பிளிறியது. தொடர்ந்து, 'ஹுச்சுக்' என்று ஓர் ஒலி எழுப்பியது. பிறகு, முறக் காதுகளை அசைத்தபடி, தலையைப் பெரிதாக ஆட்டியபடி, துதிக்கையைத் தூக்கியபடி…
அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தது.
யானையின் பிளிறல் சத்தத்தில் ராகினியும் குமாரும் திடுக்கிட்டு விழித்தார்கள்.
“என்னப்பா சத்தம்?” என்றாள் ராகினி.
“யானை தும்மிச்சு, அவ்வளவுதான்” என்றான் ரவி சிரிப்பை அடக்கிக்கொண்டு.
இருட்டுக்குள் அசைந்து போகும் யானையைப் பார்த்து, அழுவது போல் ஆனாள் ராகினி. “நாமளாவது காருக்குள்ள இருக்கோம். தப்பிச்சோம். ஜோவும் ஷீலுவும் காட்டுக்குள்ள எந்த அனிமல் கிட்ட மாட்டிக்கிட்டாங்களோ…” என்றாள்.
“நாம, ஒண்ணா இருப்போம்னு நம்ம வீட்டுல நினைச்சுட்டு இருப்பாங்க” என்றான் குமார்.
ஜோவின் வீட்டில், டிவியில் செய்திகள்… “வழக்கமாக கோடையில்தான் மேகமலை வனப் பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் ஏற்படும். இம்முறை முன்னதாகவே அந்தப் பகுதியில் இயற்கைச் சீற்றம் நிலவுகிறது. அங்கே கனமானது முதல் அதிக கனமானது வரை மழை வரை பெய்யக் கூடும். நிலச்சரிவு சம்பவங்கள் அதிகமாக நடக்கலாம். சாலைகள் துண்டிக்கப்படலாம். மேகமலை அடிவாரப் பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள். தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப் பட்டிருக்கும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் அங்கே செல்ல தடை விதிக்கப் பட்டிருக்கிறது…”
“ஐயய்யோ…” என்றார் ஜோவின் அம்மா.
“பதறாதேம்மா… கண்ணனோட அப்பா வந்துட்டிருக்கார். மேகமலைக்குப் போறோம்” என்றார் ஜோவின் அப்பா. அவருக்கும் பதற்றமாகத்தான் இருந்தது. வாசலைப் பார்த்தார்.
பள்ளத்தில் இருந்த தலை, கண்ணைத் திறந்ததும், ஜோவும் ஷீலுவும் நடுங்கிப் போனார்கள். அடுத்த விநாடியே பள்ளத்தில் இருந்து எகிறினான் ஜோ. ஷீலுவின் கையைப் பிடித்தான். இழுத்துக்கொண்டு பாய்ந்தான். எதிரில் என்ன இருக்கிறது என்பதைக் கவனிக்கக் கூட நேரம் இல்லை. இருவரும் இடித்து விழுந்த இடம் ஒரு பெரிய மரப் பொந்து.
அதில் மறைந்து உட்கார்ந்து பள்ளத்துக்குள் பார்த்தார்கள்.
“பாப்பா, கத்தாதே… மனிசன்தேன். உசிருள்ள மனிசன்…” பள்ளத்தில் இருந்து குரல் வந்தது. பேசியது, அந்தத் தலைதான்!
ஜோவுக்கு பயம் குறைந்தது.
பள்ளத்தில் சிக்கி இருந்த அந்த ஆள் பேச்சைத் தொடர்ந்தார். “தம்பி, என் கை மண்ணுக்குள்ள மாட்டிக்கிச்சு. இல்லேன்னா நானே வெளிய வந்திருப்பேன். உதவி பண்ணு” என்றார்.
அடர்ந்த வனாந்திரத்தில், அந்த இருட்டில், அவர்கள் சந்திக்கும் முதல் மனிதர்.
பொந்தில் இருந்து இருவரும் வெளியே வந்தார்கள். குரங்கு சுற்றிச் சுற்றி வந்தது. விறுவிறு என்று செயல்பட்டார்கள் ஜோவும் ஷீலுவும்.
மெள்ள அந்த மனிதரின் கை விடுபட்டது. அவரும் பரபர என்று இயங்க ஆரம்பித்தார். சில நிமிடங்கள். வெளியில் வந்துவிட்டார்.
“நீங்க எப்பிடிப்பா இந்த நேரத்துல இங்கே வந்தீங்க?” என்றார்.
ஜோ பேச வாயைத் திறந்த உடனேயே கை அமர்த்தினார். “சுற்றுலா வந்தவங்க வழி தப்பி வந்துட்டீங்க… அதானே?” என்றார்.
உடல் எங்கும் மண் ஒட்டி இருந்த அவரது தோற்றம் இருட்டுக்கு இடையிலும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. “பயப்படாதீய. கவலப் படாதீய. நாங்க இங்க வாழுற பழங்குடிக. எம்பேரு எளில்ராஜா. காட்டுப் பூச்சின்னு கூப்டுவாக. எனக்கு இந்தக் காடு முழுசும் கைரேகை மாதிரிப் பளக்கம். மணலாறு, வென்னியாறு, எரவங்கலாறு, வட்டப்பாற, மகாராஜா மெட்டு, மகரசோதி மலெ, பொத்தப்புல்லு மேடு, வெள்ளிமலெ, அரசடி… எல்லாம் அத்துப்படி. ஒங்களப் பத்திரமா ஒங்க வூடு கொண்டு சேக்க வேண்டியது என் வேலெ” என்றார்.
அவர் வேட்டியை, நாட்டியம் ஆடப் போகிறவர் போலக் கட்டி இருந்தார். இடுப்பில் அரைஞாண் கயிறு போல, பெரிய கயிறு. அதில் ஒரு குடுவை செருகி இருந்தது. இன்னொரு பக்கம் உறை போல ஏதோ இருந்தது.
ஷீலு சிரித்துக்கொண்டே, “ஐயா, 'பயப்படாதீய', 'பளக்கம்', 'வூடு'ன்னெல்லாம் பேசுறீங்க. ஆனா, அது எங்களுக்குப் புரியுது” என்றாள்.
எழில்ராஜா சிரிக்கவில்லை. இடுப்பில் இருந்த உறைக்குள் இருந்து ஒரு கத்தியை உருவினார்.
ஜோ, திடுக்கிட்டான்.
“ஒங்களக் காப்பாத்திருவேன். ஆனா, அதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்னு சொல்ல முடியாது. நாள் கணக்கு கூட ஆவலாம். ஏன்னா, இந்த முறை ஏதோ கணக்கு சரியில்லாம மள பேஞ்சிருக்கு. நெலச் சரிவும் தாஸ்த்தியா (அதிகமாக) இருக்கு. அதான், இப்பேர்ப்பட்ட நானே மாட்டிக்கிட்டேன். ஒங்களுக்கு எந்த ஆவத்தும் வராமப் பாத்துக்கிருவேன். எங்கூட இருக்குற வரைக்கும் நடக்குறதைக் கவனிங்க. சந்தோசமா இருங்க. மொதோ, ஒங்க கூட்டாளியளக் கண்டுபிடிக்கணும்” என்றார்.
உண்மையிலேயே ஆபத்து வராதா? சந்தோஷமாக இருக்க முடியுமா? மற்றவர்களோடு சேர முடியுமா? எல்லாம் சந்தேகமாகத்தான் இருந்தது.
ஜோ மூச்சை ஆழமாக இழுத்து விட்டான். அந்த அடர்ந்த இருட்டையே அவன் சுவாசிப்பது போலத் தெரிந்தது.
“இந்த இடம் ரொம்ப அழகா, மர்மமா இருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றான்.
அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது.
'ஹ்ளீ ஹ்ளீ ஹ்ளீ…'
மனிதனா, பேயா, வேறு ஏதுமா என்று இனம் கண்டுபிடிக்க முடியாத சிரிப்புச் சத்தம்.
(தொடரும் )
- ரமேஷ் வைத்யா
