PUBLISHED ON : செப் 26, 2016

உலக இதய நாள் செப்டம்பர் 29
'லப்... டப்... லப்... டப்...' என்று சொன்னாலே இதயம் துடிக்கும் ஒலிதான் நினைவில் வரும். மார்பின் இடது பக்கத்தில் அமைந்துள்ள இதயம், இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, உடல் முழுவதும் ரத்தத்தை பரவச் செய்கிறது. இப்படி ஓய்வின்றி நமக்காக இயங்கிக்கொண்டு இருக்கும் இதயத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டாமா?
இந்தியாவில் மாரடைப்புக்குப் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்குக் கூட இதயநோய் வரத் தொடங்கியுள்ளது என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. மாரடைப்பு வராமல் பாதுகாத்துக்கொள்ள நம்மால் நிச்சயம் முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மாதிரி பயம் யாருக்குமே இருந்திருக்காது. வாகனத்தின் இன்ஜின் போலச் செயல்படும் மனித இதயத்தைச் சீராகப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும்.
இன்றைய ஃபாஸ்ட்ஃபுட் கலாசார உலகில் என்ன வேலை செய்தாலும் மன அழுத்தமின்றி செய்யப் பழகிக்கொண்டாலே லப்... டப்...
சத்தம் சீராக இருக்கும். இதன் விளைவாக உயரும் ரத்த அழுத்தம் மாரடைப்பைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது. உடல் பருமனும் அதிகமாகச் சேரும் கொழுப்பும் மாரடைப்பு வருவதற்கு இன்னொரு காரணம். நொறுக்குத் தீனிகளாக உண்ணும் உணவுப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். இதயத்திற்குப் பகை, புகை! இதயத்தின் செயல்பாடுகளை புகைப் பழக்கமும் கடுமையாகப் பாதிக்கிறது.
தற்போது பெரும்பாலான நோய்கள் ஏற்பட சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயும் காரணமாக இருக்கிறது. முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்துக்கேற்ற உடல் எடையைப் பராமரிப்பது என ஆரோக்கியத்தைப் பராமரித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இதயத்தில் இடமிருக்காது!
இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு கூறுகிறது.
உலகம் முழுவதும் 17.3 மில்லியன் மக்கள் மாரடைப்பால் இறக்கிறார்கள். அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29%
உலக இதய நோயாளிகளில் இந்தியர்கள் சதவீதம் 60%
