PUBLISHED ON : செப் 26, 2016

டி.வி. ராமசுப்பையர் பிறந்ததினம் அக்டோபர் 2
(02.10.1908 - 21.07.1984)
சமூக மாற்றம், தெருவில் நின்று போராடி ஏற்படுத்துவது மட்டுமல்ல, பத்திரிகை வாயிலாகவும் ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர்தான், 'தினமலர்' நாளேட்டின் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர். நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டத்தில் தளியர் மகாதேவர் கோயில் என்னும் சிறு கிராமத்தில், பிறந்தவர். படிக்கும் காலத்திலேயே தன் சக தோழர்களுக்கு வழி காட்டியாகவும் ஆலோசகராகவும் இருந்தவர். அவர் பிறந்த சமூகத்தில் குடுமி வைத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால் சிறுவனாக இருந்த ராமசுப்பையருக்கோ அதில் விருப்பம் இல்லை. வீட்டிற்கு தெரியாமல் தோழர்களுடன் சேர்ந்து முடிவெட்டிக்கொண்டு, தன் தாத்தாவிடம் தைரியமாக நின்றார். அதே தைரியம்தான் ஜாதி மத வேறுபாடு பார்க்காமல், மனித குலத்துக்கு உழைக்க வேண்டும் என்ற உந்துதலை அவருக்குப் பிற்காலத்தில் கொடுத்தது.
எதையுமே மாற்றுச் சிந்தனையோடு அணுகும் முறையைக் கொண்டவர் ராமசுப்பையர். பரம்பரை தொழிலான விவசாயம், உப்பளம் இரண்டையும் விடுத்து, பத்திரிகை ஆரம்பித்தது அவரது சிந்தனையில் உதித்த புரட்சி என்றே சொல்லலாம். அப்போது கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. அங்கு தமிழர்கள் அதிகம். அந்தப் பகுதி தமிழகத்துடன் இணைவதுதான் நியாயம் என்று கருதினார் டி.வி.ஆர். மக்களும் அதையே விரும்பினர்.
அவர்களின் குரல் வெளியுலகிற்கு தெரியப்படுத்த ஆரம்பிக்கப்பட்டதுதான் 'தினமலர்'. 1951, செப்டம்பர் 6 முதல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியது 'தினமலர்'. கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்க தொடர்ந்து விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதினார். எல்லை மீட்பு போராட்டத்தை ஆதரித்தார். இதன் விளைவாக 1956ல் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னை தீர வழிவகை செய்தார்.
ஜாதி உயர்வு, தாழ்வு நீக்கப் பாடுபட்ட தமிழகத் தலைவர்களில் முக்கியமானவர். அரிஜன மக்களை ஒன்றிணைப்பதற்காக அந்த சமூக மக்களின் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வைத்து மாநாடு நடத்தினார். 1958ல் நாகர்கோவில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்தினார்.
இப்போது போல், அந்தக் காலத்தில் கல்வி எளிதில்லை. அறியாமை அகல, அனைவரும் படிக்க விரும்பிய டி.வி.ஆர். பல பிள்ளைகளின் படிப்பிற்குப் பண உதவி செய்தார். அந்த உதவியை 'வெளியில் சொல்லக் கூடாது' என்றார். குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடுவதில் அவர் மகிழ்ச்சி கொண்டார். கட்டாய இலவசக் கல்வி மாணவர்களுக்குக் கிடைக்கப் பாடுபட்டார்.
புண்ணியத் தலமான காசியில் பல்கலைக்கழகம் இருப்பது போல் அதற்கு நிகரான பெருமை வாய்ந்த ஒரு பல்கலைக்கழகம் கன்னியாகுமரியில் கொண்டு வரவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அவரின் அந்த விருப்பம் மட்டும் இன்றுவரை நிறைவேறவில்லை.
* கூடியவரை எளிய தமிழில் பேசுவது நல்லது என்பது அவரது கொள்கை. 'மக்களுக்குப் புரியாத கொடுந்தமிழ் தேவையில்லை' என்றார்.
* தமிழ் மொழியை சீர்திருத்தி, அதை முதன் முதலில் 'தினமலர்' பத்திரிகையில் நடைமுறைப்படுத்தினார்.
* சிறுவயதில் வடசேரியில் இருந்து மாட்டு வண்டியில் நாகர்கோவிலுக்கு படிக்கச் சென்றார். பிற்காலத்தில் தன்னுடைய மாவட்டத்திற்கு ரயில் வரக் காரணமாக இருந்தார்.
* 'சமூக சேவகர், மனித நேயம் படைத்தவர், தேசப்பற்று மிக்கவர்' என்று போற்றப்படும் டி.வி.ராமசுப்பையர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்க, அவரது நினைவு அஞ்சல் தலையை, மத்திய தபால் தந்தி துறை 2008, டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்டது.
