PUBLISHED ON : செப் 18, 2023

ஒரு வீட்டில் ஒரு சிரிப்புப் பூனை வசித்து வந்தது. அதன் பெயர் சிரிக்கும் பூஸி. உணவுக்காக அங்கும் இங்கும் அலையும். பிறகு ஓய்வாகத் தூங்கும். ஆனால், எந்நேரமும் சிரித்தபடியே இருக்கும். இது பூஸியின் வழக்கம்.
இப்படியே போய்க்கொண்டிருந்தது, பூஸிக்கு அலுப்பாக இருந்தது. வெளியில் எங்காவது போகலாம் என்று நினைத்தது பூஸி.
வீட்டை விட்டு வெளியேறியது. ஊருக்கு வெளியே ஆட்கள் வசிக்காத பூட்டிய வீடு இருந்தது. பூஸி அந்த வீட்டுக்குள் நுழைந்தது.
ஆளில்லா வீட்டுக்குள் அனுபவம் கிடைக்குமா என்று நினைத்துச் சிரித்தபடி உள்ளே போனது பூஸி. சமையலறை, ஹால், முன்னறை என்று எல்லாப் பக்கமும் உலவியது. உள்பக்கமாக ஓர் அறை இருந்தது. இருட்டான அறை. அதன் நடுவில் ஒரு பெட்டி இருப்பதைப் பூஸி பார்த்தது.
பூஸிக்கு சிரிப்பு. ஆளே இல்லை... பெட்டி மட்டும் இருக்கிறது. அதுவும் அறையின் நடுவில் இருக்கிறது...
பெட்டிக்கு அருகே போனது பூஸி.
இந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கும் என்று யோசித்தது. பால் பாக்கெட்டுகள் இருக்குமா? பதப்படுத்திய மீன்? கேட்னிப்? சீஸ் கட்டிகள்?
பூஸிக்குச் சிரிப்பு வந்தது. நாம் என்ன தின்பண்டங்களை மட்டுமே யோசிக்கிறோம் என்று நினைத்தபடி பெட்டியைத் திறந்தது.
உள்ளே... காலியாக இருந்தது.
இப்போது பூஸிக்குப் பெரிதாகவே சிரிப்பு வந்தது.
'உள்ளே ஏதாவது இருந்தால், அது மட்டுமே இருக்கும். எதுவும் இல்லை என்றால், ஏதேதோ வைப்பதற்கான சாத்தியங்கள் உருவாகும்' என்று நினைத்தது. தன் தத்துவத்தை நினைத்துத் தானே சிரித்துக்கொண்டது.
தின்பதற்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், அதையும் விளையாட்டாக எடுத்துக்கொண்ட பூஸி உண்மையில் சிரிப்புப் பூனைதானே?

