டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறிவைக்கும் இணையத் திருடர்கள்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறிவைக்கும் இணையத் திருடர்கள்
PUBLISHED ON : டிச 05, 2016

இணையம் வழியாக, இந்தியர்களின் வங்கிக் கணக்குக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து, அமெரிக்காவை சேர்ந்த ஹேக்கர்கள் திருடுவதாக, இணைய பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் ஒன்று, தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. மளிகைப் பொருட்கள் வாங்குவதில் இருந்து, மருத்துவம், பயணம் போன்ற செலவுகளுக்கு, ஆன்லைனில் பணம் பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த 26 வங்கிகளைக் குறிவைத்து, வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை, அமெரிக்க இணையத் திருடர்கள் திருடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஃபையர் ஐ (Fire eye) என்ற இணைய பாதுகாப்பு நிறுவன இந்திய இயக்குனர் விஷாக் ராமன் கூறியதாவது:
வங்கிகளின் பெயரில் போலியான இணைய முகவரியை இணையத்திருடர்கள் உருவாக்கியுள்ளனர். இதில், ஏமாந்து உள் நுழையும் வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக் கணக்கு எண், கடவுச் சொல் (பாஸ்வேர்டு), தற்காலிக கடவுச் சொல் (OTP) போன்றவற்றை நிரப்பியவுடன், திரையில் பிழை எச்சரிக்கை (Error - எரர்) தோன்றும். அதேசமயம், அந்த விவரங்கள், இணையத்திருடர்களுக்கு போய்விடும். எனவே, இணையம் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுதொடர்பாக, இந்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
