PUBLISHED ON : ஜூன் 24, 2019

வாரத்திற்கு ஏழு நாட்கள் (ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி) என்பதை நீங்கள் அறிவீர்கள். வாரம் என்பதே வடசொல்தான். இதில், கிழமை என்பது தமிழ் வழக்கு. கிழமை, நாள் பெயரைக் குறிக்கும் பொருளில் வந்துவிட்டதால் 'வாரம்' என்றே எழுதுகிறோம்.
நாள் பெயர்கள் ஒவ்வொன்றும் வானிலுள்ள கோள்களின் பெயரைக் குறிக்கிறது. ஞாயிறு (சூரியன்), திங்கள் (நிலவு) என பெயர்களைக் கூறலாம். இந்த ஏழு பெயர்களில் புதனும், சனியும் வடசொற்கள். புதன் என்பது அறிவைக் குறிப்பதால், அதற்கு 'அறிவன்' என்று பெயர். கரிய கோள் என்பதால், சனிக்குக் 'காரி' என தமிழில் பெயரிட்டனர்.
இப்பெயர்களில் வியாழன் என்பது இலக்கணப் போலி. இதனை 'வியாழம்' என்பதே சரி. சொல்லில் முறையாக வரவேண்டிய எழுத்துக்கு மாறாக, வேறொரு எழுத்து வருவது இலக்கணப் போலி. கடைசி எழுத்து, இலக்கணப் போலியாக வந்தால் அதற்குக் 'கடைப்போலி' என்று பெயர்.
நலம், திறம், நிலம் போன்ற சொற்களை அறிவோம். அச்சொற்கள் நலன், திறன், நிலன் என வழங்கப்படுவதையும் காணலாம். அச்சொற்களின் கடைசி எழுத்தான 'ம்' என்பதற்கு மாறாக 'ன்' என்ற மெய்யெழுத்து வந்தது. அப்படி எழுத்து மாறி வந்தபோதும் அச்சொற்களின் பொருள் மாறவில்லை. நலம், நலன், திறம், திறன் என இரண்டுக்கும் ஒரே பொருள்தான். இதுதான் கடைப்போலி. வியாழம் என்ற சொல், வியாழன் என வழங்கப்படுவதும் இப்படித்தான்.
- தமிழ்மலை
