வலிமிகுதல் பகுதி (27) - வலிமிகாத வேற்றுமைத் தொடர்கள்
வலிமிகுதல் பகுதி (27) - வலிமிகாத வேற்றுமைத் தொடர்கள்
PUBLISHED ON : ஜூன் 24, 2019

ஒரு சொற்றொடரில் அமைந்துள்ள பெயர்ச்சொல், ஒரு வேற்றுமை உருபை ஏற்று, தான் வழங்கும் பொருளில் சற்றே வேறுபட்டு நிற்பது வேற்றுமைத் தொடர் ஆகும்.
தண்ணீர் கிடைக்கிறது. இந்தச் சொற்றொடரில் தண்ணீர் என்ற பெயர்ச்சொல் எழுவாயாக இருக்கிறது. கிடைத்தல் என்னும் வினை தண்ணீருக்கு உரியது. இது எழுவாய்த் தொடர்.
தண்ணீரைக் குடிக்கிறது. இங்கே தண்ணீர் என்ற பெயர்ச்சொல், ஐ என்ற வேற்றுமை உருபை ஏற்றுக்கொண்டது. தண்ணீர் என்பது அவ்வினையின் செயப்படுபொருள். இந்த வேறுபாட்டை ஐ என்ற வேற்றுமை உருபு தோற்றுவிக்கிறது. ஒரு பெயர்ச்சொல் வேற்றுமை உருபை ஏற்றுக்கொண்டது. வேற்றுமை உருபை ஏற்றுப் பயிலும் தொடர்கள் வேற்றுமைத் தொடர்கள் எனப்படும்.
வேற்றுமை உருபுகளுக்கு எண் வரிசை கொடுக்கப்பட்டு அவ்வெண்களாலேயே அழைக்கப்படுகின்றன. ஒன்று முதல் எட்டு வரையிலான வேற்றுமை உருபுகள் இருக்கின்றன. ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவை இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமை உருபுகளில் முக்கியமானவை.
வேற்றுமைத் தொடர்களில் எங்கெங்கு வலிமிகும்? எங்கெங்கு வலிமிகாது?
வள்ளி சிரித்தாள் - இதுதான் முதலாம் வேற்றுமைத் தொடர். இதற்கு எழுவாய்த் தொடர் என்ற பெயரும் உண்டு. முதலாம் வேற்றுமைத் தொடராகிய எழுவாய் வேற்றுமைக்கு வலிமிகாது.
தண்ணீரைக் குடித்தான் - ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வருகிறது. இதற்குக் கட்டாயம் வலிமிகும்.
உளியால் செதுக்கினான் - ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு பயில்கிறது. இது மூன்றாம் வேற்றுமைத் தொடர். இங்கே வலிமிகும் நிலைமை இல்லை.
பாட்டுக்குப் பொருள் - கு என்னும் நான்காம் வேற்றுமை உருபை ஏற்கிறது. இது நான்காம் வேற்றுமைத் தொடர் - இதற்குக் கட்டாயம் வலிமிகும்.
ஊரின் கிழக்கே - இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு பயில்வதால், இது ஐந்தாம் வேற்றுமைத் தொடர் - இங்கே வலிமிகுதல் இல்லை.
எனது புத்தகம் - அது என்னும் ஆறாம் வேற்றுமை உருபு பயில்கிறது. இது ஆறாம் வேற்றுமைத் தொடர் - வலிமிகுதல் இல்லை.
மலைக்கண் தோன்றியது- கண் என்னும் ஏழாம் வேற்றுமை உருபு பயில்கிறது. இது ஏழாம் வேற்றுமைத் தொடர். இங்கேயும் வலிமிகுதல் இல்லை.
கண்ணா கேள் - ஒன்றினை விளித்துக் கூறுவதால் இதனை விளி வேற்றுமை என்பர். இதற்கு எட்டாம் வேற்றுமைத் தொடர் என்றும் கூறுவர். விளித் தொடரும் இதுதான். இங்கும் வலிமிகுதல் இல்லை.
எட்டு வேற்றுமைகளில் ஐ, கு உருபுகள் பயிலும் இரண்டாம், நான்காம் வேற்றுமைத் தொடர்களில் கட்டாயம் வலிமிகும். பிற வேற்றுமைத் தொடர்களுக்கு வலிமிகுதல் இல்லை.
- மகுடேசுவரன்
