தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'கமகம' சுற்றுலா

'கமகம' சுற்றுலா

'கமகம' சுற்றுலா


PUBLISHED ON : மே 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் குமுளி, தேக்கடி பகுதிகள் இருக்கின்றன. மலைகளும் அடர்த்தியான பசுமையும் நிறைந்த இந்த இடத்தில் வாசனைப் பொருட்கள் விளைகின்றன. இந்தப் பகுதிக்கு 3 நாள் சுற்றுலா போவது என்று முடிவெடுத்தேன்.

திண்டுக்கல் வரை ரயிலிலும், பின்னர் நான்கைந்து மணிநேரம் காரிலும் பயணம். இரண்டு நபர்கள் தங்கக்கூடிய அறைகள் நாளொன்றுக்கு ரூ.1,500 வாடகையில் இங்கே கிடைக்கின்றன.

இங்கேதான் 'பெரியார் புலிகள் சரணாலயம்' இருக்கிறது. காலை 6 மணியில் இருந்து 4 மணி வரை அனுமதிக்கிறார்கள். வனத்துறை வாகனத்தில் சரணாலயத்தைச் சுற்றிப் பார்க்கலாம். ஒரு நபருக்கான கட்டணம் ரூ.60.

சரணாலயத்தின் முழு அமைப்பையும் பார்க்க முடிந்தது. வனவிலங்குகள் கண்ணில் படவில்லை என்றாலும், காட்டை முழுவதும் பார்த்த திருப்தி இருந்தது.

உள்ளே அழகிய ஏரி இருக்கிறது. அதில் படகுச் சவாரி போக முடியும். ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிகையிலான சவாரிகள்தான் அனுமதிக்கப்படுகின்றன. சரணாலயத்தை 7 மணிக்குள் அடைந்துவிட்டால் படகுச் சவாரி சாத்தியம். நாங்கள் போனது ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை. மறுநாள் சித்ரா பெளர்ணமி. ஆண்டின் அந்த ஒரு நாளில் மட்டும்தான் அந்தப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கண்ணகி கோவில், பொதுமக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்படும். லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். அதனால் சரணாலயத்தில் நிறைய கூட்டம். படகுச் சவாரிக்கு வாய்ப்பில்லாமல் போயிற்று.

சரணாலயத்திற்கு வெளியே தனியார்கள் திறந்த ஜீப்புகளில் இடுக்கியின் பல்வேறு இடங்களைச் சுற்றிக்காட்டுகிறார்கள். ஒரு நபருக்கு ரூ. 500 கட்டணம். மேடு, பள்ளம் நிறைந்த குறுகிய வழிகளில், வனவிலங்கு எதிர்ப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பயணித்தோம். காட்டெருமைகள் நிறைந்த பகுதி அது.

'காட்டெருமை என்ன செய்யும்?' என்று ஓட்டுநரிடம் கேட்டோம். '20 பேர் அமரக்கூடிய ஒரு வேனை ஒரு இடி இடித்து அப்படியே சாய்த்துவிடும்!' என்றார். தூரத்தில் காட்டெருமைகள் அமைதியாக மேய்ந்துகொண்டிருந்தன. பயம் கலந்த மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை அப்போது உணர்ந்தேன்.

கேரளம் என்றாலே வாசனைப் பொருட்களுக்குப் பெயர் போனது என்றாலும், இந்தியாவின் 'வாசனைப் பொருட்கள் மண்டலம்' எனும் அளவுக்கு தேக்கடி, குமுளி பகுதிகளில் வாசனைப் பொருட்கள் பயிரிடப்படுகின்றன. நிறைய தனியார் தோட்டங்கள் இருக்கின்றன. சுற்றுலா பயணிகள் சென்று பார்க்கும் வகையில் இவை பராமரிக்கப்படுகின்றன. 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, என்னென்ன வாசனைப் பொருட்கள், எப்படி விளைவிக்கப்படுகின்றன, பதப்படுத்தப்படுகின்றன என்பதை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அங்கு விளைந்த பொருட்களின் வாசனையை முகர்ந்து, நமக்குப் பிடித்ததை வாங்கியும் வரலாம்.

இஞ்சிச் செடியைப் போன்று ஆளுயரத்துக்கு குத்துச் செடிகள் வளர்ந்திருந்தன. இவற்றில்தான் ஏலக்காய் காய்க்கும் என்றார்கள்.

இலவங்க மரங்கள் நிறைய இருந்தன. அவற்றின் கிளைகள் பார்ப்பதற்குக் கொய்யா மரக் கொம்பு அளவில் இருக்கின்றன. அவற்றை வெட்டி, ஊறவைத்து, கணுக்களை நீக்கி, மேல் தோலை சுரண்டி எடுக்கிறார்கள். பிறகு கூரிய கத்தியால் 'லெதர்' தோலை உரித்து எடுப்பது போல மேல் அடுக்கை உரித்து எடுக்கிறார்கள். அதைச் சுருளாகச் சுற்றி ஒரே நாள் நிழலில் காயவைத்தால் மணக்கும் இலவங்கப் பட்டைகள் தயார். அந்த மரத்தின் இலைகளை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என யோசித்தேன். 'அட! பிரியாணிக்குப் பயன்படுத்தும் பட்டை இலை!' இலவங்க மரத்தில் இருந்துதான், பட்டை இலைகள் கிடைக்கின்றன என்பது எனக்கு அங்கு போனபின்னர்தான் தெரிந்தது.

கிராம்புச் செடியைக் காண்பித்தார்கள். அதன் பூக்காத மொட்டுகளைத்தான் கிராம்புகளாக நாம் பயன்படுத்துகிறோம்.

மிளகு, காபி, கோகோ, வெனிலா எனப் பலவகை வாசனைப் பொருட்கள் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. மிளகுக் காய்களைப் பழுத்த நிலையில் பறித்துக் காயவைத்தால் வெண்மிளகு, பழங்களைப் பறிக்காமல் அப்படியே விட்டுக் காய்ந்த நிலையில் பறித்தால் கருமிளகு என்றும் தெரிந்துகொண்டேன்.

வெனிலா கொடிகள் மரங்கள் மேல் படர விடப்படுகின்றன. வழக்கமாகப் பூக்கள் பூத்தவுடன் மகரந்தத்தை சூழ்வித்துடன் சேர்த்துக் காய் காய்க்க வைக்கும் வேலையைத் தேனீக்கள் செய்யும். காட்டு வெனிலாவில், ஒருவகை சிறிய தேனீதான் மகரந்தச் சேர்க்கையைச் சாத்தியப்படுத்தும்.

தோட்டப்பயிராக வெனிலாவை வளர்க்கும்போது, குறிப்பிட்ட ரக தேனீக்களுக்கு எங்கே போவது? நாமே நமது கைப்பட சூழ்வரை மகரந்தத்தைத் தணித்துவிட்டால்தான் காய் வைக்கும். தோட்டத் தொழிலாளர்கள் தேனீக்களாக மாறி, ஒவ்வொரு பூவிலும் மகரந்தச் சேர்க்கையை செய்கிறார்கள். இவர்களின் கடுமையான உழைப்பின் விளைவாக, பீன்ஸ் மாதிரி கொத்துக்கொத்தாக வெனிலா காய்க்கிறது.

காய்களை ஆவியில் வேகவைத்து உலர்த்தி வெனிலா எசன்ஸ் எடுக்கப்படுகிறது. இனி வெனிலா சுவையுள்ள ஐஸ்கிரீமோ, கேக்கோ சாப்பிடும்போது, வெனிலா தொழிலாளர்களின் உழைப்பை நினைக்காமல் இருக்க முடியாது.

ஏதோ ஒரு தூரப் பகுதியில் உற்பத்தி ஆகும் வாசனைப் பொருட்களை எனது உணவில் அன்றாடம் பயன்படுத்துகிறேன். அவை எப்படிப் பயிரிடப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டது மனதுக்கு நிறைவைத் தந்தது. வழக்கமாக சுற்றுலா கண்களுக்கு மட்டுமே விருந்து படைக்கும். இந்தச் சுற்றுலா நாசிக்கும் விருந்து படைக்கும் 'கமகம சுற்றுலா' வாக இருந்தது.

- நர்மதா பத்மநாபன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us