PUBLISHED ON : மே 28, 2018
முன்னே ஒட்டும் அசைக்கேற்ப, வடமொழியில் ஒரு சொல்லுக்கு எதிர்ச்சொல் உருவாகும் தன்மையைப் பற்றிப் பார்த்தோம். அவ்வகையில் பல சொற்களை நாம் வடமொழி என்று கண்டு பிடிக்கலாம்.
அதிர்ஷ்டம் என்ற சொல்லை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். “அவனுக்கு அதிர்ஷ்டம் இருக்கு…” என்று சொல்கிறோம். அதிர்ஷ்டம் என்ற சொல்லில் 'ஷ்' என்னும் எழுத்து பயின்றிருப்பதால், அது வடமொழி என்பது தெளிவாகத் தெரிகிறது. அதிர்ஷ்டம் என்ற சொல்லை 'அதிட்டம்' என்று தமிழில் எழுதுவார்கள்.
அதிர்ஷ்டம் என்பதன் எதிர்ச்சொல் என்ன? துரதிர்ஷ்டம். அதிர்ஷ்டம் என்ற சொல்லோடு துர் என்ற முன்னொட்டு சேர்ந்தால் அது எதிர்ச்சொல்லாகிவிடுகிறது. துர் என்பது தீதுப்பொருள் தரும் வடமொழி முன்னொட்டு என்கிறார் தமிழ் அகரமுதலி தொகுத்த மு. சண்முகம் பிள்ளை. ஏேதனுமொரு சொல்லை முன்னொட்டி எதிர்ச்சொல்லாக்குவது தமிழில் பெருவழக்காக இல்லை என்பதை அறிவோம்.
'ஷ்' என்ற வடவெழுத்து பயில்வதாலும், துர் என்ற முன்னொட்டு சேர்த்தால் எதிர்ப்பொருளுடைய சொல் கிடைப்பதாலும் 'அதிர்ஷ்டம்' என்ற சொல் வடசொல் என்று அறிகிறோம். அதிர்ஷ்டம் என்பதற்கு நற்பேறு, ஆகூழ் ஆகியவை தமிழ்ச்சொற்கள். துரதிர்ஷ்டம் என்பதற்கு கெடுபேறு, போகூழ் என்பவை தமிழ்ச்சொற்கள்.
ஒரு சொல்லின் எதிர்ச்சொல் துர் என்று தொடங்கினால் அது வடசொல் என்று கருதலாம். அப்படி என்னென்ன சொற்கள் துர் என்ற முன்னொட்டினால் எதிர்ச்சொற்கள் ஆகின்றன என்று பார்ப்போம்.
பாக்கியம் என்ற சொல்லுக்குத் துர்ப்பாக்கியம் என்பது எதிர்ச்சொல். பலன் என்ற சொல்லுக்குத் துர்ப்பலன் என்பது எதிர்ச்சொல். இவ்வாறே புத்தி, அபிமானம், சுலபம் ஆகியவற்றுக்கான எதிர்ச்சொற்கள் துர் என்னும் முன்னொட்டினால் கிடைக்கின்றன. துர்ப்புத்தி, துரபிமானம், துர்லபம் போன்றவை அச்சொற்களாம்.
துர் என்ற வடமொழி முன்னொட்டினைச் சில தமிழ்ச்சொற்களோடும் சேர்த்துச் சொல்வது வழக்காக இருக்கிறது. கதி - துர்க்கதி, குணம் - துர்க்குணம், குறி - துர்க்குறி, நடத்தை - துர்நடத்தை போன்ற சிலவற்றைக் காண்க. இவற்றில் குறி, நடத்தை போன்றவை தமிழ்ச்சொற்களே. கதி, குணம் போன்ற சொற்கள் இருமொழியிலும் வேர்த்தன்மையோடு பயில்கின்றன.
இப்போது துர் என்ற முன்னொட்டைக்கொண்டு எதிர்ச்சொற்களை அடையும் வடசொற்களையும் அவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்களையும் பார்ப்போம்.
அதிர்ஷ்டம் (நற்பேறு, ஆகூழ்) - துரதிர்ஷ்டம் (கெடுபேறு, போகூழ்)
பாக்கியம் (நல்வினைப்பேறு) - துர்ப்பாக்கியம் (தீவினைப்பேறு)
கதி (நடத்தை) - துர்க்கதி (கெட்ட நடத்தை)
பலன் (பயன், விளைவு) - துர்ப்பலன் (தீவிளைவு)
புத்தி (நன்மதி) - துர்ப்புத்தி (கெடுமதி)
அபிமானம் (பற்று) - துரபிமானம் (தகாப் பற்று)
சுலபம் (எளிதில் பெறவல்லது) - துர்லபம் (அரிதாய்ப் பெறத்தக்கது)
துர்க்குணம் - தீய பண்பு
துர்க்குறி - தீய அறிகுறி
துர்நடத்தை - கெட்ட நடத்தை
மகுடேசுவரன்
