தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பல பெயர்களில் எழுதிய 'சிறுகதை மன்னன்'

பல பெயர்களில் எழுதிய 'சிறுகதை மன்னன்'

பல பெயர்களில் எழுதிய 'சிறுகதை மன்னன்'


PUBLISHED ON : மே 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிறப்பு : ஏப்ரல் 25, 1906

மறைவு :ஜூன் 30, 1948

அவரின் பெயர் சொ. விருத்தாசலம். நிறைய சிறுகதைகள் எழுதியதால், 'சிறுகதை மன்னன்' என்று போற்றப்பட்டார். இப்படி ஒரு பெயரில் எழுத்தாளர் இருந்தாரா? முற்றிலும் கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்று யோசிக்கும் முன், இது அவரின் உண்மைப் பெயர். அவர் எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர் 'புதுமைப்பித்தன்'.

தமிழ்ச் சிறுகதைகளுக்கென ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியவர். உலகச் சிறுகதைகளின் தரத்திற்குத் தமிழ்ச் சிறுகதைகளை உயர்த்தியவர்.

'நான் கண்டது, கேட்டது, கனவு கண்டது, காண விரும்புவது, காண விரும்பாதது ஆகிய சம்பவங்களின் கோவைதான் என் சிறுகதைகள்' என்று சொன்னவர்.

'இலக்கியம் என்பது எளிய மக்களின் வாழ்வைச் சொல்வது. ஏழைகளின் இன்னல்களை, துயரங்களை எழுத்தில் பதிவு செய்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். நடப்பதைச் சொல்வதுதான் என் வேலை. அதற்கு முடிவு தருவது என்னுடைய வேலை இல்லை' என்பது புதுமைப்பித்தனின் கருத்தாக இருந்தது.

100க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்த அவர், நிறைய கதைகளை மொழியாக்கமும் செய்திருக்கிறார். மாக்சிம் கார்க்கி, எர்னஸ்ட் டோலர், வில்லியம் ஷேக்ஸ்பியர், மாக்சிம் கார்க்கி போன்றோரின் கதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தார்.

அவரது கதைகள், அவர் வாழ்ந்த இடங்களான சென்னை, திருநெல்வேலியைக் களமாகக் கொண்டிருந்தன. அவரது நடையில் பேச்சுத்தமிழ், செந்தமிழ் இரண்டும் கலந்திருந்தன.

அவரின் வித்தியாசமான சிந்தனைகள் தான், அவரை எழுத்துலகில் தனித்துக் காட்டியது.

சில கவிதைகளையும் அவர் எழுதியுள்ளார். சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல், விசிறிமடிப்பு என பல புனைப்பெயர்கள் அவருக்கு.

திரைத்துறையில் ஈடுபாடு கொண்ட அவர், சில படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார். 'ஔவையார்' என்ற படத்துக்கு அவர் கதை வசனம் எழுத, ஒப்பந்தமானார். ஆனால் அவர் எழுதியவை படத்தில் இடம் பெறவில்லை. இதனால் கோபமுற்ற புதுமைப் பித்தன்,

'அவ்வை எனச் சொல்லி

ஆள்விட்டுக் கூப்பிட்டு

கவ்வக் கொடுத்தடித்தால்

கட்டுமா? - சவ்வாது

பொட்டுவச்சுப் பூச்சணிந்து

பூப்போல ஆடைகட்டும்

மொட்டைத் தலையனே கேளு!'

என்று கோபத்தில் திட்டி, கவிதையும் எழுதியிருக்கிறார்.

புதுமைப்பித்தன் பத்திரிகைகளிலும் பணியாற்றி உள்ளார். அவற்றில், தினமணி, தினசரி குறிப்பிடத்தக்கவை. 'தினமணி' நாளிதழ் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தார். இதழில் இலக்கிய மலர்களை தயாரித்துக்கொடுக்கும் பணியைச் செய்தார். நூல் விமர்சனமும் எழுதினார். 1936 முதல் 1943 வரை அந்தப் பணியைச் செய்தார்.

'ஐயா நான்

செத்ததுக்குப் பின்னால்

நிதிகள் திரட்டாதீர்

நினைவை விளிம்புகட்டி

கல்லில் வடித்து

வையாதீர் '

என்று கவிதை எழுதிய புதுமைப்பித்தன், 42வது வயதிலேயே காசநோய் வந்து இறந்தார். அந்நோய்க்கு செலவு செய்யக்கூட அவரிடம் போதிய பணம் இல்லை. உதவிகேட்டு நிறைய பேருக்கு கடிதம் எழுதும் அவலைநிலையில், அவரின் கடைசிக் காலம் கழிந்தது.

- த. சங்கர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us