PUBLISHED ON : செப் 12, 2016

தலைப்பே வித்தியாசமாய் இருந்தாலும் இது நிச்சயம் நாம் எல்லோரும் அறிந்த மரம்தான். அதுவும் வயல் ஓரங்களில் வீட்டுத் தோட்டத்தில், மலைப்பகுதிகளில் இப்படி எங்கும் பயிர் செய்யக் கூடியது. ஆம், வாழை மரத்துக்குத்தான் கதலி என்றொரு பெயர் உண்டு.
சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களில் வாழை விளைகிறது. வாழை மரத்தின் எல்லா பகுதிகளும் மனிதனுக்கு பயன்தரக்கூடியது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழை பயன்பாட்டில் உள்ளது.
நார், பூத்தொடுக்கவும், ஆடைகள், பைகள், மிதியடிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது. பூ, தண்டு, காய் ஆகியவை சமையலில் உணவாக சேர்த்துக் கொள்ளப்படுகிறது. எளிதில் கிடைக்கக் கூடிய இதன் கனி சத்து மிகுந்தது. வைட்டமின் சி, பி6 நிறைந்துள்ளது. ஜீரணத்துக்கு உதவுகிறது. காய், பூ துவர்ப்பு சுவை. கனி இனிப்புச் சுவை. வாழை இலையில் உணவு சாப்பிடுவதை நம்முன்னோர் வழக்கமாக கொண்டிருந்தார்கள். காரணம் வாழை இலை உணவுப் பண்டங்களில் உள்ள எண்ணெயை கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது.
