தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அவலா கொன்றோ, மிசையா கொன்றோ!

அவலா கொன்றோ, மிசையா கொன்றோ!

அவலா கொன்றோ, மிசையா கொன்றோ!


PUBLISHED ON : டிச 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊரெல்லாம் 'ஆதார்' அட்டையைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. நாம் இரண்டு மாத்திரை குறைத்து, 'அதர்' பற்றிப் பேசுவோம்.

அதென்ன 'அதர்'?

ஒருவர் தளர்ச்சியில்லாமல், ஊக்கத்தோடு இருந்தாரென்றால், அவரை நன்மைகள் தேடிவரும் என்கிறார் திருவள்ளுவர்.

'ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும், அசைவுஇலா

ஊக்கம் உடையான் உழை.'

நன்மைகள் எப்படிச் செல்லும் என்றால், 'அதர் வினாய்'ச் செல்லுமாம், அதாவது, வழி கேட்டுக்கொண்டு செல்லுமாம், ஊக்கமுள்ள ஒருவர் நன்மைகளைத் தேடிச் செல்லவேண்டியதில்லை, 'இந்த ஊர்ல ஊக்கத்தோட ஒருத்தர் இருக்காரே, அவர் வீட்டுக்கு எப்படிப் போறது?' என்று பலரிடம் வழி கேட்டு நன்மைகளே அவரைத் தேடி வருமாம். என்ன அழகான காட்சி!

ஆக, 'அதர்' என்றால் வழி. அகநானூற்றில் 'கானமானதர்' என்று ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார் கபிலர். இதன் பொருள், கான (காட்டு) மான் (விலங்கு) அதர் (வழி), அதாவது, காட்டு விலங்குகள் செல்லும் வழி.

இன்னும் பல பாடல்களில், 'கல்லதர்' என்ற சொல்லைக் காண்கிறோம், இதன் பொருள், கல் அதர், கற்களால் அமைந்த வழி. கல்லதர் தரையில் இருக்கும், காலதர் சுவரில் இருக்கும்.

காலதர் என்றால், கால் (காற்று) + அதர், காற்று வரும் வழி, இப்போது நாம் 'ஜன்னல்' என்று பயன்படுத்தும் பிறமொழிச் சொல்லின் தூய தமிழ் வடிவம் அது.

'அதர்' போலவே இன்னோர் அழகிய, தூய தமிழ்ச்சொல், 'அவல்'. நாம் உப்புமா செய்து சாப்பிடும் அவல் இல்லை, இதன் பொருள், 'பள்ளம்.'

எடுத்துக்காட்டாக, அகநானூற்றில் குறுங்குடி மருதனாரின் பாடல் ஒன்று.

'இரும்பு திரித்துஅன்ன மா இரு மருப்பின்

பரல் அவல் அடைய இரலை தெறிப்ப...'

கார்காலம் வந்துவிட்டது. இரும்பைத் திரித்ததுபோன்ற பெரிய கொம்புகளை உடைய இரலை மான்கள், கற்களையுடைய பள்ளத்திலே துள்ளிக் குதிக்கின்றன.

புறநானூற்றில் ஒரு பாடலில் இதே சொல்லை மிக அழகாகப் பயன்படுத்துகிறார் ஔவையார்:

'நாடா கொன்றோ, காடா கொன்றோ,

அவலா கொன்றோ, மிசையா கொன்றோ,

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை, வாழிய நிலனே.'

ஒரு நிலம் நாடாக இருக்கலாம், காடாக இருக்கலாம், அவலாக (பள்ளமாக) இருக்கலாம், மிசையாக (மேடாக) இருக்கலாம், இவையெல்லாம் வெறும் புவியியல் தன்மைகள், அதை வைத்து ஓரிடத்தை நல்லது, கெட்டது என்று சொல்லிவிட இயலாது. அதற்குப் பதிலாக, அங்கே வசிக்கும் ஆண் மக்கள் நல்லவர்களாக இருந்தால், அவ்வூரும் நல்ல ஊராக இருக்கும்' என்பது ஔவையாரின் கருத்து.

அந்தக் காலம் ஆண்கள் சார்ந்த உலகமாக இருந்தது. அதனால் அப்படி எழுதியிருக்கிறார். இந்தக் காலத்திற்கு பொதுவாக இதை 'மக்கள்' என்றுதான் கொள்ளவேண்டும்.

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us