PUBLISHED ON : அக் 14, 2016

கொற்கை பாண்டியரின் 'செழியன்' பெயர் பொறித்த வெள்ளி நாணயத்தை தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்குழு தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார். மதுரையில் வசிக்கும் நண்பர் ஒருவர் கிரேக்க நாணயம் என்று சிறிய வெள்ளித்துண்டுகளைக் கொடுத்ததாகவும், அதனை சென்னை கொண்டுவந்து, சுத்தம் செய்து, நீண்ட நாட்கள் ஆய்வு செய்தபின், இரண்டு வெள்ளித் தகடுகளில் ஒன்று சங்ககால வெள்ளி நாணயம் என்பது உறுதியானதாக தெரிவித்துள்ளார்.அந்த நாணயத்தின் முன்புறம், மன்னரின் தலையும், அதன் மேல் ஒரு கிரீடமும் உள்ளது. அந்த கிரீடத்தை அழகு செய்யும் ஒரு நீண்ட குஞ்சம், நெற்றியிலிருந்து பின் நோக்கி, பின்புறம் கழுத்து வரையில் உள்ளது. முகத்திற்கு எதிரே, மேலிருந்து கீழாக நான்கு எழுத்துக்கள், தமிழ்பிராமி எழுத்து முறையில் பொறிக்கப்பட்டுள்ளன.முதல் எழுத்து, 'செ' இரண்டாவது எழுத்து, 'ழி' மூன்றாவது எழுத்து 'ய' நான்காவது எழுத்து, 'ன்' சேர்த்து படிக்கும்போது. “செழியன்” என்ற பெயர் வருகிறது.நாணயத்தின் நடுவில் ஒரு மனிதன் தலையை குனிந்து கொண்டு நிற்கிறான். அவன் முன் காலுக்கு அருகில் பானை போன்ற ஒரு சின்னம் உன்னது. அந்த மனிதனின் இடுப்பிலிருந்தும், தோள் பட்டையின் கீழ் 2 கைகளுக்கு இடையிலிருந்தும் கயிறுகள் மேல் நோக்கி செல்வது போல் அச்சாகியுள்ளது.கடலில் முத்துக் குளிப்பவர்களைத் தான் இதுபோன்று கயிறுகளை கட்டி படகிலிருந்து கடலுக்குள் இறக்குவார்கள்.அசோக பேரரசர் தன் கல்வெட்டில் கூறியுள்ள, 'தம்பிரபருணி' நாடு, கொற்கைப் பாண்டியர்களது நாடு தான் என்பதை, வருங்கால கண்டுபிடிப்புகள் உறுதி செய்யும் காலம் வருகிறதோ எனக் கருதுவதாக அவர் கூறினார்.
