PUBLISHED ON : ஜன 25, 2016

ஒரு சிங்கக் கூட்டத்தில் சிங்கக் குருளைகளும் இருந்தன. அதில் ஒரு குருளை, ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தது. அதன் வண்ணங்களால் கவரப்பட்டு, பட்டாம்பூச்சியைப் பிடிக்க விரட்டிச் சென்றது. தன் கூட்டத்தைப் பிரிந்து வெகு தூரம் வந்தும் பட்டாம்பூச்சியைப் பிடிக்கவே முடியவில்லை. சிங்கக்குட்டி களைத்துப்போய், தூங்கிவிட்டது.
அது விழித்துப் பார்த்தபோது, சுற்றிலும் ஆடுகள் நின்றுகொண்டு இருந்தன. ஏதோ ஓர் ஆட்டு மந்தையில் வந்து சேர்ந்திருக்கிறது அந்த சிங்கக் குருளை.
அதனோடு விளையாட ஏற்றவையாக அந்த மந்தையில் நிறைய ஆட்டுக் குட்டிகள் இருந்தன. சிங்கம் அங்கேயே தங்கிவிட்டது.
நாட்கள் கழிய, சிங்கம் மெள்ள வளர்ந்தது. ஆனால், ஆடுகளுக்கு நடுவே வளர்ந்ததால், அதற்கு ஆடுகளின் குணமே இருந்தது. சிங்கத்தின் உறுமல், ஆடுகளின் கத்தல் போலவே இருந்தது. ஆட்டுக் கூட்டம் பயந்து நடுங்கும்படி தன்னால் உறும முடியும் என்பதே அந்தச் சிங்கத்துக்குத் தெரியவில்லை.
பெரிய விலங்குகள் அந்த ஆட்டு மந்தையைக் கடந்து போனால், பிற ஆடுகளோடு ஆடாக அதுவும் ஒண்டி, மறைந்துகொண்டது. தான் ஒரு சிங்கம் என்பதையே அது உணரவில்லை!
ஒரு நாள், வயதான சிங்கம் ஒன்று அந்தப் பக்கமாக வந்தது. நம் சிங்கத்தைப் பார்த்து உறுமியது. சிங்கங்களின் இயல்பு, பதிலுக்கு உறுமுவது. ஆனால், நம் சிங்கமோ பயந்து பம்மியது.
ஆனால், சுற்றியிருக்கும் ஆட்டுக் கூட்டத்தைப் பார்த்த பெரிய சிங்கம், விஷயத்தைப் புரிந்துகொண்டது. உடனே சின்ன சிங்கத்தை, பக்கத்தில் இருந்த ஒரு குளக்கரைக்குக் கூட்டிப் போனது. நீருக்குள் தெரியும் சிங்கத்தின் உருவத்தைக் காட்டியது.
நீரில் தெரியும் பிம்பம், ஆடுகள் போல இல்லாமல், சிங்கத்தைப் போல இருப்பதை நம் சிங்கம் ஆச்சரியத்தோடு பார்த்தது. பெரிய சிங்கமோ இதற்கு உறுமிக் காட்டியது. அதைக் கேட்டு சின்ன சிங்கமும் உறுமிப் பார்த்தது. நான்கு ஐந்து முறை முயற்சி செய்தவுடன் சின்ன சிங்கத்துக்கும் உறுமத் தெரிந்துவிட்டது. அதன் உறுமல் சத்தத்தில் காடே அதிர்ந்தது.
அதைக் கேட்ட ஆட்டுக் கூட்டம் மிரண்டு சிதறி ஓடியது.
தன் கம்பீரமான உறுமலின் மூலம் தான் யார் என்று சிங்கத்துக்குப் புரிந்தது. காட்டின் ராஜா நானே என்கிற பெருமித உணர்வு ஏற்பட்டது. பெரிய சிங்கத்துடன் சேர்ந்து கம்பீரமாக நடக்க ஆரம்பித்தது.
இந்தக் கதையில் சில சொற்கள் சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. ஒரு விலங்கின் குட்டிக்கு சரியான தமிழ்ச் சொற்கள் அவை.
இன்னொரு சொல் பச்சை நிறத்தில் உள்ளது. உறுமல் என்கிற சொல். அது தப்பு. புலிதான் உறுமும். சிங்கம்? கர்ஜிக்கும். அதேபோல, விலங்குகளில் ஆண், பெண், குட்டி ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனிப் பெயர் உண்டு அவற்றையும் அறிந்துகொள்வோம்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் அப்படிச் சில சொற்களை அறிந்துகொள்வோம்.
அப்படியே கொஞ்சம் இங்லீஷையும் பார்த்துவிடலாம். குட்டிகளை எப்படிக் குறிப்பிடலாம்?
ஒட்டகம் (Camel - கேமெல்) - கன்று (Calf - காஃப்)
மனிதக் குரங்கு (Ape - ஏப்) -பேபி (Baby)
Dog டாக் (நாய்) - Pup (பப்)
கழுதை (Donkey - டாங்கி) - Colt/Foal (கோல்ட் / ஃபோல்)
Cat கேட் (பூனை) - Kitten (கிட்டன்)
யானை (Elephant - எலிஃபன்ட்) - Calf (காஃப்)
வார்த்தைகள் படிச்சாச்சு. இந்தப் பாடம் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறது. கவனித்தீர்களா? நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் இயல்பு எது என்று யோசித்திருக்கிறீர்களா? இல்லை, சிங்கமாக இருந்து அதை உணராமல், உங்களை நீங்களே ஆடு என்று குறைத்து மதிப்பிட்டு இருக்கிறீர்களா?
