சரித்திரம் பழகு: ஃபர்கானாவில் இருந்து பாரத நாட்டிற்கு வந்தேன்
சரித்திரம் பழகு: ஃபர்கானாவில் இருந்து பாரத நாட்டிற்கு வந்தேன்
PUBLISHED ON : மார் 03, 2025

இன்றைய உஸ்பெகிஸ்தான் நாட்டில், ஃபர்கானா (Farghana) என்ற நகரை என் தந்தை ஷேக் உமர் மிர்ஸா ஆட்சி செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு, மகனாகிய நான் ஜஹீருத்தீன் முகம்மது 12 வயதிலேயே பட்டத்துக்கு வந்தேன்.
அப்பா ஆண்ட ஃபர்கானா எனக்குப் போதவில்லை. என்னுடைய மூதாதையர் ஆட்சிபுரிந்த, கொஞ்சம் தள்ளி இருந்த, சாமர்கண்ட் (Samarkand) என்னும் நகரையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கைப்பற்றினேன். ஆனால், ஃபர்கானாவைப் போரில் இழந்துவிட்டேன். பின்னர் சாமர்கண்டும் பறிபோயிற்று. ஆள்வதற்கு என்னிடம் நாடில்லை. மனம் தளராத நான், 1504இல், இன்றைய ஆஃப்கானிஸ்தான் நாட்டிலுள்ள காபூல் நகரைக் கைப்பற்றினேன். மூதாதையர் நாடும் இன்றி, தந்தையின் நாடும் இன்றி, ஏதோ ஒரு பகுதியான காபூலை ஆண்டு வந்தேன்.
அப்போதைய இந்தியா, செல்வச் செழிப்புமிக்க நாடு. அந்நியர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வளம் நிறைந்திருந்த நாடு. இருப்பினும், வட இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களிடையே ஒற்றுமையின்மை நிலவியது. எப்போதும் ஓயாத சண்டை. குறிப்பாக, டில்லியை ஆண்ட லோடி வம்சத்திற்கும், ராஜபுத்திரர்களுக்கும் அடிக்கடி போர் நடந்த வண்ணம் இருந்தது.
அப்போது டில்லியில் இப்ராஹிம் லோடியின் ஆட்சி இருந்தது. இவரது விரோதி, தௌலத்கான் லோடி. இவர்தான் டில்லியைத் தாக்கும்படி எனக்கு தூது அனுப்பினார். உடனே படையுடன் சென்று, அப்போது இந்தியாவின் பகுதியாக இருந்த லாகூரைக் கைப்பற்றினேன். டில்லியை நோக்கிப் புறப்பட்டேன். வழியில் பானிபட் என்னும் இடத்தில் இப்ராஹிம் லோடியின் படை என்னை எதிர்கொண்டது.
முதலாம் பானிபட் என அழைக்கப்படும் இந்த யுத்தம், 1526இல் நடந்தது. நான் வென்றேன். எங்கிருந்தோ வந்த நான், டில்லியைக் கைப்பற்றி, மன்னராக முடிசூடிக் கொண்டேன். ஆனால் நான்கு ஆண்டுகளே டில்லியை ஆட்சி செய்தேன். அதற்குப் பிறகு, எனது சந்ததியினர் இந்தியாவை இரண்டு நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர்.
ஜஹீருத்தீன் முகம்மது (Zahiruddin Mohammad) எனப்படும் என்னை, துருக்கிய மொழியில், 'புலி' என்றே அழைத்தனர்.
இந்தியாவில் மொகலாயர் ஆட்சிக்கு அடிகோலிய எனக்கு மற்றொரு பெயரும் உண்டு. அது என்ன?
விடை: பாபர் (Babur).