PUBLISHED ON : மே 12, 2025

கங்கை நதியின் கிளை நதியான ஹூக்ளி நதிக்கரையில், கோல்கட்டாவில், அமைந்துள்ளது இந்த வெள்ளைப் பளிங்கு மாளிகை.
1901ஆம் ஆண்டு ஒரு ராணி இறந்ததும், அவரின் நினைவாகக் கட்டப்பட்டது. இந்தியர்களிடமிருந்து ஐம்பது லட்சம் ரூபாய் நன்கொடை வசூலிக்கப்பட்டு, கட்டப்பட்டது. 1906ஆம் ஆண்டு இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர் அடிக்கல் நாட்ட, 1921ஆம் ஆண்டு மாளிகை கட்டி முடிக்கப்பட்டது.
ஆங்கிலேய, மொகலாய, வெனீசிய (இத்தாலி) கட்டடக் கலை பாணியின் அம்சங்களையும் கொண்டது இந்த மாளிகை. இதனைச் சுற்றிலும் 64 ஏக்கர் பரப்பளவில் கண்ணைக் கவரும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மாளிகையில் 25 கலைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இராயல் கலைக்கூடம், தேசத் தலைவர்களின் கூடம், ஓவியங்களின் கூடம், சிற்பங்கள், படைக்கலங்கள் கூடம் எனப் பல பிரிவு கூடங்கள் உள்ளன.
ஹைதர் அலி, திப்பு சுல்தான், ஜெய்சிங் உள்ளிட்ட மன்னர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும் இங்கே உள்ளன. ஆங்கிலேய மன்னர்கள், இந்திய வைஸ்ராய்களுக்கு எழுதிய கடிதங்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மாளிகையின் நடுவில் உள்ள மண்டபத்தில் அரசுக் கட்டிலில், ராணி அமர்ந்திருப்பது போல் ஒரு வெண்கலச் சிலை உள்ளது.
அந்த ராணி யார்? மாளிகை எது?
விடைகள்: விக்டோரியா மகா ராணி, விக்டோரியா மாளிகை