தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சொற்களைப் பிரித்து அறிக

சொற்களைப் பிரித்து அறிக

சொற்களைப் பிரித்து அறிக


PUBLISHED ON : அக் 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

நாம் அறிந்த ஒரு சொல், பிரிக்கும்படியும் இருக்கும். பிரிக்க முடியாதபடி ஒரே சொல்லாகவும் இருக்கும்.

இன்று என்னென்ன சொற்களைச் சொன்னீர்கள் ? அல்லது கேட்டீர்கள் ? நினைவுபடுத்திப் பாருங்கள்.

காலையில் நாளிதழ் வந்திருக்கும். அதில் செய்தி படித்திருப்பீர்கள். நாளிதழ் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். அது நாள்+இதழ் என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கை. நாள்தோறும் வருகின்ற இதழ் என்னும் பொருள் தரும். நாள் என்பது ஒரு சொல். இதழ் என்பது ஒரு சொல். இரண்டும் சேர்ந்து புதுச்சொல் பிறந்தது. அது நாள்தோறும் வருகின்ற செய்தித்தாளைக் குறிப்பிட்டது.

இரண்டு சொற்கள் ஒன்றாகச் சேர்ந்து புதிய பொருள்தரும் சொல்லாகப் பிறக்கும். அடுத்து, செய்தி என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். செய்தி என்பது நாளிதழில் இடம்பெற்றது. நாட்டில் நடந்தவற்றைக் குறிப்பது. செய்தி என்னும் சொல் தனியாய்த் தோன்றியுள்ள ஒற்றைச் சொல்.

நாளிதழைப் போலவே செய்தித்தாள் என்பது இரண்டு சொற்களின் சேர்க்கை. செய்தி+தாள். செய்திகளைத் தாங்கிவரும் தாள். இது நாளிதழுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர். இவ்வாறு இரண்டு வெவ்வேறு சொற்களைச் சேர்த்து எண்ணற்ற புதுச்சொற்களை உருவாக்கலாம். கவிஞர்களும் எழுத்தாளர்களும் கலைச்சொல் ஆக்குவோரும் இவ்வாறுதான் புதிய புதிய சொற்களை உருவாக்குகிறார்கள். இந்த அடிப்படையை உணர்ந்துகொண்டால், நாமே புதிய புதிய சொற்களை உருவாக்கலாம்.

புதுச் சொற்கள் தோன்றும் வரைக்கும் நம் மொழி இளமையோடும் உயிர்ப்போடும் இருக்கும். உலகில் நாள்தோறும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றுக்கு இணையாக எல்லா மொழியிலும் சொற்கள் தோன்றுகின்றன.

தமிழிலும் நாம் எல்லாரும் புதிய சொற்களை உருவாக்க வேண்டும். அவ்வாறு புதிதாய்த் தோன்றும் சொற்களைப் பிரித்துப் பார்த்து, பொருள் காணும் ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். கைப்பேசி என்று ஒரு சொல்லைக் கண்டால், கை, பேசி என்று பிரிக்க வேண்டும். அப்போதுதான் “கையில் வைத்திருக்கும் பேசி” என்ற பொருள் உடனே விளங்கும்.

- காவிரி மைந்தன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us