PUBLISHED ON : ஜூன் 20, 2016

இசை இன்பத்திற்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. ஒலியின் ஒழுங்கு செய்யப்பட்ட வடிவமே இசை. இசை என்ற சொல்லுக்கு இசைதல் என்று பொருள். மனிதனை மட்டுமல்ல மற்ற உயிரினங்களையும் இசையச் செய்கிற ஓர் அரிய விஷயம்தான் இசை.
இந்துஸ்தானி, கர்நாடகம், கஜல், மேற்கத்திய இசை, கிராமிய இசை என எத்தனையோ இசை வகைகள் உள்ளன. இந்திய இசை, இன்னிசையை (Melody) அடிப்படையாகக் கொண்டது. ராகம், தாளம் இரண்டுக்கும் இதில் முக்கியத்துவம் இருக்கும். மேற்கத்திய இசை, கோர்வை இசையை (Harmony) அடிப்படையாகக் கொண்டது.
இந்துஸ்தானி: வட இந்திய இசை வடிவம். அரேபிய, பாரசீக இசைக் கலப்பினால் உருவானது.
கர்நாடக இசை: தென்னிந்திய இசை வடிவங்களில் முக்கியமானது. 'பண்ணிசை' எனப்படும் இந்த இசை ராகம், தாளம் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற ஏழு ஸ்வரங்களும் 'ஸரிகமபதநி' என்ற எழுத்துகளால் குறிக்கப்படுகின்றன. தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மூலகர்த்தாக்கள் என்று கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு கர்நாடக இசை மும்மூர்த்திகள் என்று பெயர். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர்நாடியாக உள்ளன.
கஜல்: இந்த இசை வடிவம் உருது மொழியில் பாடப்படுவது. சந்தப் பாடல்களான இந்த இசை வடிவம், பெரும்பாலும் மெல்லிய உணர்வுகளைப் பாடுவதாக இருக்கும்.
கிராமிய இசை: கிராம மக்கள் தாங்களாகவே பாடி உருவாக்கிய இசை வடிவம். தொட்டில் முதல் சுடுகாடு வரை கிராமியப் பாடல்கள் பாடப்படுகின்றன.
கிராமியப் பாடல் வகைகள்
இறைவணக்கம், நலுங்கு, தாலாட்டு, ஆரத்தி, ஊஞ்சல், நோன்பு, மசக்கை, சடங்கு, ஒப்பாரி போன்றவை குறிப்பிட்ட விசேஷங்களில் பாடப்படுவை.
புதிர்ப்பாட்டு, பழமொழிப் பாட்டு, கும்மிப் பாட்டு, கோலாட்டம் போன்றவை உற்சாகத்திற்காகப் பாடப்படுபவை.
உழவுப் பாட்டு, நடவுப் பாட்டு, ஏற்றப் பாட்டு, தெம்மாங்கு போன்றவை வேலைகளைச் செய்யும்போது பாடப்படுபவை.
இறைவணக்கப் பாட்டு, மழைப் பாட்டு, பிரார்த்தனைப் பாட்டு, வேதாந்தப் பாட்டு, புராணப் பாட்டு போன்றவை வேண்டுதல்களுக்காகப் பாடப்படுபவை.
பழந்தமிழ் இசைக் கலைஞர்கள்
பாணர், பொருநர், கூத்தர்
* பாணர், பொருநர் - ஆண் இசைக் கலைஞர்கள்
* கூத்தர் - ஆண், பெண் இசைக் கலைஞர்கள்
* விறலியர், பாடினியர் - பெண் இசைக் கலைஞர்கள்
பாணர்
* வாய்ப்பாட்டிலும் இசைக் கருவிகளை இசைப்பதிலும் வல்லவர். இசைப் பாணர் - வாய்ப்பாட்டு பாடுபவர்கள்.
யாழ்ப்பாணர் - என்பவர்கள் யாழ் என்னும் இசைக்கருவியை மீட்டுபவர்கள்.
பொருநர்
* பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும் வல்லவர். இவர்களில் மூன்று வகையினர் உண்டு. ஏர்க்களம் பாடுவோர் -- உழைக்கும் மக்களுக்காகப் பாடுகிறவர்கள். போர்க்களம் பாடுவோர் - - போர்க்களங்களில் மன்னர் மற்றும் படை வீரர்களுக்காகப் பாடுவோர்.பரணி பாடுவோர் - மன்னர்களின் போர்க்கள வெற்றி குறித்தும், அவர்களின் வீர தீரச் செயல்கள் குறித்தும் பாடுவோர்
கூத்தர்
* பாடிக்கொண்டே ஆடுவதில் வல்லவர். இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் கதைக்கேற்ற உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
இசைக்கருவிகளின் வகைகள்
நரம்புக் கருவிகள் (தந்தி வாத்தியங்கள் - Chordophones)
யாழ், தம்புரா, வீணை, வயலின்
துளைக் கருவிகள் (காற்று வாத்தியங்கள் - Aerophones)
புல்லாங்குழல், நாதசுரம், கிளாரினெட்
தோற்கருவிகள் (கொட்டு வாத்தியங்கள் - Membranophones)
தவில், மிருதங்கம், கஞ்சிரா
கனக் கருவிகள் (கஞ்சக் கருவிகள் / Idiophones)
ஜால்ரா, குழித்தாளம், ஜலதரங்கம்
தமிழ் இசைக் கருவிகள்
முரசு, பறை, எக்காளம், உடுக்கை
நினைத்துப் பாருங்கள், இன்றும் நாம் இசை இல்லாமல் ஒரு நாளாவது இருந்திருக்கிறோமா?
