
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி
கண்களை மூடும்போது சில நிறங்கள் தெரிகின்றன. அது எவ்வாறு தோன்றுகிறது?
R.P.ஐஸ்வர்யா, 7ஆம் வகுப்பு , பி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்ன காஞ்சிபுரம்.
கண்களை மூடும்போது நிறங்கள் தெரிவது 'ஒளியறு காட்சிப்போலி' (Phosphene) எனப்படும். வெளிச்சம் ஏற்படும்போது ஒளிக்கதிர்கள் நம் கண்களின் விழித்திரையில் விழுவதன் மூலமாகக் காட்சி தோன்றுகிறது. அவ்வாறு இல்லாமல் இருளிலும், விழி மூடியிருக்கையிலும் தெரியும் காட்சிப் போலிதான் 'ஒளியறு காட்சிப்போலி'. விழி மூடிய நிலையிலும் கண்கள் மற்றும் மூளையின் பார்வைப் பகுதியில் இயக்கம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. கண்கள் திறந்து இருக்கும்போது விழித்திரையில் பதியும் ஒளிக்கதிர்கள், மூடிய நிலையிலும் விழித்திரையில் ஒளி தூண்டிய துடிப்பு என தவறாக மூளை விளங்கி அதனைக் காட்சிப்படுத்த முயலும்போதுதான் இவ்வாறு நிறங்கள் மற்றும் காட்சி தோன்றுகின்றன. திடீரென எழுந்து நிற்கும்போது, பின் மண்டையில் பலமாக அடி விழும்போது, தொடர்ந்து தும்மல் வரும்போது என பல உடல் இயக்கங்கள் ஒளியறு காட்சிப்போலியைத் தூண்டும். பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர்களுக்கு ஒளியறு காட்சிப்போலி தோன்றாது. 'மக்ஸ் க்னோல்' (Max Knoll) எனும் ஆய்வாளர் ஒளியறு காட்சிப்போலி குறித்து ஆராய்ச்சி செய்து முக்கோணம், ஸ்டார் வடிவம், சுழல் என பதினைந்து வகையான காட்சிகள் இவ்வாறு காட்சிப் போலியாக ஏற்படுகின்றன எனவும், கண்களின் குறிப்பிட்ட பகுதியைத் தூண்டுவதன் மூலம் இந்த வடிவங்களை நாம் மறுபடி மறுபடி காண முடிகிறது என்றும் கூறினார்.
இயற்கைப் பேரழிவுகளை விலங்குகளால் எப்படி உணர முடிகிறது?
நா.சோபனா, 10ஆம் வகுப்பு, வேலம்மாள் வித்யாலயா (சிபிஎஸ்இ), விரகனுர், மதுரை.
நிலத்தடி நீர் உயரும்போது மண் புழுக்கள் உணர்ந்து தப்பிக்கும் எனவும், மாறுபடும் காற்றழுத்த அளவை உணர்ந்து பெரும் புயலுக்கு முன்பு பறவைகள் பாதுகாப்பான இடத்திற்கு புலம் பெயரும் எனவும் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அதேபோல கடலில் பெரும் சூறாவளி ஏற்படுவதற்கு முன் சுறா மீன்கள் ஆழ்கடலில் சென்று ஒளிந்துகொள்கின்றன. சில விலங்குகளுக்கு அக ஒலியை (இன்ஃப்ரா சவுண்ட் / Infra Sound) கேட்கும் திறன் உண்டு. திமிங்கிலங்கள் இந்த அக ஒலியைக் கொண்டு கடலின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு தமக்குள் செய்திப் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளான பூமி அதிர்வு, சுனாமி, புயல் போன்றவை அக ஒலியை ஏற்படுத்துகின்றன. மனிதனின் கேள்வித் திறனுக்கும் அப்பால் உள்ள அலைநீளங்களில் வெளிப்படும் இந்த அக ஒலியை சில விலங்குகளால் உணர முடியும். இயற்கைப் பேரிடர் சமயத்தில் இயல்புக்கு மாறாக, கூடுதலாக அக ஒலி ஏற்படும்போது அதில் குழம்பி என்ன ஏது என்று தெரியாமல் பாதுகாப்புத் தேடி விலங்குகள் தப்பிக்க முயலும்.
காலப் பயணம் (Time Travel) என்றால் என்ன? அதற்கு வாய்ப்பு உண்டா?
சிவராம், 10ஆம் வகுப்பு, S.M.H.S பள்ளி, அருப்புக்கோட்டை.
நம்மால் ஒரு கோட்டில் முன்னே செல்ல முடியும்; பின்னே செல்ல முடியும். அதே கோட்டிலிருந்து பக்கவாட்டில் இடது வலது செல்ல முடியும். ஆகாயத்தில் மேலே கீழே செல்ல முடியும். அதாவது நாம் வாழும் வெளி (Space) மூன்று பரிமாணங்களைக் கொண்டது. நேரம் - காலமும் இதுபோன்ற நான்காவது பரிமாணம்தான் என நவீன இயற்பியல் காட்டுகிறது. எனவே முன்னும் பின்னும், இடதும் வலதும் மேலும் கீழும் செல்வதுபோல காலத்தில் முன்னும் பின்னும் செல்வதுதான் காலப் பயணம் (Time Travel).
இதுவரை அவ்வாறு போகமுடியும் என யாரும் சாதித்துக் காட்டவில்லை. அவ்வாறு பயணிக்க கொள்கை அளவில் கூட வழிமுறைகள் இதுவரை செய்யப்படவில்லை. மறுபுறத்தில் அவ்வாறு காலப் பயணம் போவது முடியவே முடியாது என அறிவியல் தத்துவார்த்த ரீதியாக நிறுவவும் இல்லை. எனவே காலப்பயணம் (Time Travel) போக முடியுமா முடியாதா என்பது இன்றைய அறிவியலை பொறுத்தவரை விடை தேட வேண்டிய புதிர்.
விஞ்ஞானிகள் அவர்களுக்கென ஒரு கற்பனையான செயற்கை வாழ்க்கையை (Synthetic life by artificial sequencing) அமைத்துக் கொள்வார்கள் என என் அப்பா என்னிடம் சொன்னார். இது உண்மையா?
R. கிருஷ்ணா, நேஷனல் பப்ளிக் ஸ்கூல், கோபாலபுரம்.
எந்த ஒரு சிறிய செயலிலும் பலரின் பங்களிப்பு நேரடியாக அல்லது மறைமுகமாக இருக்கும். சினிமாவில் வருவது போல தமக்கு மட்டும் தன்னந்தனியாக கற்பனையான செயற்கை உயிரி அமைப்பை (Synthetic life by artificial sequencing) விஞ்ஞானிகள் ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமில்லை. இன்று இருக்கும் உயிரி தொழில்நுட்பம் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது. இதைக்கொண்டு சில விஷயங்களைச் சாதிக்க முடியும் என்றாலும் செயற்கை உயிரை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்த தொழில்நுட்பம் அல்ல. தொழில்நுட்பம் இருக்கட்டும், செல்கள் இயக்கம் குறித்து இன்று நமக்குத் தெரிந்தவைகளை விட, தெரியாதவைதான் பன்மடங்கு அதிகம். ஆனால், நவீன அறிவியல் தொழில்நுட்பம் நமது சராசரி ஆயுளை அதிகரித்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 19- முதல் 20 ஆண்டுகள்தான் இந்தியாவில் சராசரி ஆயுள். இன்று 63க்கும் மேல். அதாவது சுமார் மூன்று மடங்கு ஆயுளை அதிகரித்துள்ளது நவீன அறிவியல் தொழில்நுட்பம். மருந்து மாத்திரையைவிட, தடுப்பூசி, பொது சுகாதாரம் முதலியவற்றிற்கு இதில் பெரும்பங்கு உண்டு என்கின்றனர் ஆய்வாளர்கள். ஒரு விதத்தில் பார்த்தால் பல ஆயிரம் ஆண்டுகள் இருந்த நிலையைவிட இன்று சராசரி ஆயுளைக் கூட்டியதும் 'செயற்கை'தான் அல்லவா? ஆனால் இந்தப் பயன் விஞ்ஞானிகளுக்கு மட்டும் போய்ச் சேரவில்லை; அனைவருமே பயனடைந்துள்ளோம்.

