
மன்னராட்சிக் காலத்தின் முக்கிய அடையாளம், கோட்டைகள். எதிரிகளின் படையெடுப்புகளில் இருந்து தங்கள் நாட்டைக் காப்பாற்ற, கோட்டை கட்டிக்கொள்வது மன்னர்களின் வழக்கமாக இருந்தது. இந்தக் கோட்டைகள் சில நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்த பிறகு, காலப்போக்கில் சிதிலம் அடைந்துவிடும். அவற்றின் பாழடைந்த பகுதிகள்தான் நமக்குப் பார்க்கக் கிடைக்கும்.
இதற்கு விதிவிலக்காக இருப்பது இங்கிலாந்தின் பெர்க் ஷயர் பகுதியில் அமைந்திருக்கும் விண்ட்சர் கோட்டை (Windsor castle)! இது, ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, அரச வம்சத்தினர் தொடர்ச்சியாக வசித்துவரும், உலகின் மிகப் பழமையான கோட்டை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது! மொத்தம் 13 ஏக்கர் பரப்பில் விரிந்து இருக்கும் இந்த மாபெரும் கோட்டைக்குள், கண்காணிப்புக் கோபுரங்கள், அரண்மனைகள், அரசவைகள், தேவாலயம் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.
இந்தக் கோட்டை கட்டப்படும் முன், பிரிட்டனை 'ஆங்கிலோ-சாக்சன்' என்ற வம்சம் ஆண்டுவந்தது. 'நார்மன்' என்ற இனக்குழுவைச் சேர்ந்த, வில்லியம் என்ற மன்னர், 1066ஆம் ஆண்டில் பிரிட்டனைக் கைப்பற்றினார். கிளர்ச்சியாளர்கள் தலை எடுக்காமல் இருக்க, கோட்டை கட்டிக் கண்காணிப்பைப் பலப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அதனால் வில்லியம் மன்னர், 1070ஆம் ஆண்டில் தேம்ஸ் நதிக் கரையில் விண்ட்சர் கோட்டையைக் கட்டத் தொடங்கினார். பதினாறு ஆண்டுகளில் கட்டி முடித்தார். அன்றிலிருந்து இன்றுவரை, இங்கிலாந்தின் 40க்கும் மேற்பட்ட அரசர்கள் அல்லது அரசிகளின் அதிகாரப்பூர்வ இல்லமாக இது இருந்துள்ளது. ஒவ்வொரு மன்னரின் காலத்திலும், இதன் அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
தற்போது, இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத், தனது தனிப்பட்ட ஓய்வு இல்லமாக இதைப் பயன்படுத்தி வருகிறார். வருடத்தின் பெரும்பாலான வார விடுமுறை நாட்களை ராணியார் இங்குதான் கழிக்கிறார். உலக நாடுகளின் தலைவர்களுக்கு ராணி விருந்தளிப்பது இங்குதான்.
கோட்டையின் சில இடங்களைப் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கிறார்கள். இங்கிலாந்து சென்றால் அவசியம் பார்க்க வேண்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் இந்தக் கோட்டை!

