
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி
பல் சொத்தையானால் வலி இருக்கிறது. எலும்பு போல இருக்கும் பற்களுக்கு உணர்ச்சி இருக்கிறதா?
சுபாஷ் கண்ணா, மேல்நிலை இரண்டாம் ஆண்டு, புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, மதுரை.
பல் சொத்தையானால் ஏற்படும் வலி பல்லில் ஏற்படும் வலியல்ல; ஈறுகளில் ஏற்படும் வலி. ஈறுகளில் உள்ள நரம்புகள்தான் வலியுணர்ச்சியை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. எலும்புகளில் நரம்புகள் இல்லை என்பதால் எலும்பில் வலி ஏற்படாது. ஆனால், பற்களின் மேலே உள்ள ஓட்டுக்குக் கீழே, நரம்பும் ரத்தமும் சதையும் சேர்ந்த பகுதி உள்ளது. இங்கே உள்ள நரம்புகளால் பல்லில் உண்டாகும் வலி போன்ற உணர்ச்சியை உணர முடியும்.
தூங்கும்போது சிலர் குறட்டை விடுகிறார்கள். தூக்கத்தில் மட்டும்தான் குறட்டை வருமா?
கே.வினோதா, மேல்நிலை முதலாம் ஆண்டு, விவேக் வித்யாலயா மெட்ரிக், கிணத்துக்கடவு.
குறட்டை விடுகிறார் என்றால் அவர் நன்றாகத் தூங்குகிறார் என நாம் பொருள் கொள்கிறோம். ஆனால் அது உண்மை அல்ல. குறட்டையுடன் தூங்குபவர்களின் தூக்கம், 'பழுதுபட்ட தூக்கம்' என தூக்கவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சரியாக மூச்சுவிட முடியாமல் போகும் நிலையே குறட்டை என்பதால், ஆழ்ந்த தூக்கம் சாத்தியமில்லை.
மூச்சு விடும்போது வாய் வழியாக காற்று உள்ளே சென்று, வாயின் மேற்கூரையின் வழியே, நுரையீரலை அடைகிறது. வாயின் உட்புறம் நாக்கு பிணைந்து, உள்நாக்குப் பகுதி சுருங்கி மடங்கக்கூடியதாகவும் இருக்கும். இதில், காற்று புகும் வழி சுருங்கும்போது
தொண்டைப் பகுதியில் குறட்டை ஒலி எழும்பும். காற்றுப் பகுதி மேலும் சுருங்கச் சுருங்க தசை பகுதி அதிர்வுறுவது கூடுவதால் குறட்டை சப்தம் அதிகமாகும்.
விழிப்பு நிலையில், நாக்கின் உள்பகுதியைப் பிணைக்கும் தசைகள் தளர்வாக இருக்காது; எனவே காற்று வழி தடைபடாது. ஆனால் உறக்கத்தில் இந்தப் பகுதி தளர்ச்சி கொள்ளும். எனவே தான் தூங்கும்போது மட்டும் குறட்டை வருகிறது.
இடி சத்தத்திற்கு முன்பாகவே மின்னல் ஒளி பூமிக்கு வருகிறது. ஆகவே, மனிதன் பாதிக்கப்படுவது இடியிலா அல்லது மின்னலிலா?
கிருத்திகேசன், இயந்திரப் பொறியியல் துறை, தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர்.
காற்றில் கையை அசைத்தால் ஒலி எழும்புவது போல, இடி என்பது மின்னல் பாயும்போது காற்றில் ஏற்படும் விரிசலால் ஏற்படும் ஒலியாகும். மின்னல் என்பது உயர் அழுத்தத்தில் இருக்கும் நிலை மின்சாரம் (Static Electricity). எனவே மின்னலில் இருந்து பாயும் மின்சாரத்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது என்றாலும், சிலசமயம் மிகு ஒலியான இடியும் கூட பாதிப்பை ஏற்படுத்தும்.
நடக்கும்போது கைகள் முன்னும் பின்னும் செல்கின்றன. நாம் கையை அசைப்பது எதற்காக?
சி.சுபிட்ஷா, 7ம் வகுப்பு, ஸ்ரீ ஞானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருக்கோவிலூர், விழுப்புரம்.
கைகளை முன்னும் பின்னும் அசைக்காமல் நடந்துதான் பாருங்களேன். லெஃப்ட் ரைட், லெஃப்ட் ரைட் என்று விறைப்பாகத்தான் நடக்க முடியும். சாதரணமாக நாம் நடக்கும்போது அவ்வாறு விறைப்பாக நடப்பதில்லை. உடலின் பல்வேறு பாகங்கள் அங்கும் இங்கும் திரும்பும்போது, நமது உடலின் புவி ஈர்ப்பு மையமும் அங்கும் இங்கும் நகரும். அவ்வாறு நகரும்போது நாம் கீழே விழும் வாய்ப்பு உண்டு. எனவே, புவி ஈர்ப்பு மையத்தைச் சமன் செய்து, கீழே விழாமல் இருக்கவே கைகளை முன்னும் பின்னும் நாம் அசைக்கிறோம்.

