
மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
கிராபீனை வீட்டிலேயே செய்ய முடியும் என்கிறார்களே?
செ.சந்தோஷ்குமார், 8ஆம் வகுப்பு, ஆயிர வைசிய பதின்மப் பள்ளி, பரமக்குடி, இராமநாதபுரம்.
மின்தடை ஏதுமின்றி மிகு மின் கடத்தியாகச் செயற்படும் கிராபீன் (Graphene) என்பது, வெறும் கரிதான். வைரம், கிராபைட், ஃபுலரின் போல கிராபீனும் கார்பனின் புறவேற்றுமை (allotrope) வடிவங்களுள் ஒன்று. கரிம அணுக்கள் ஆறுபக்க வடிவில் பிணைக்கப்பட்டு காகிதம் போல ஒரே ஒரு தளத்தில் அமைந்த வடிவம்.
ஒரு மி.மீ. தடிமனில் சுமார் 3 மில்லியன் கிராபீன் அடுக்குகளை அடுக்கி வைக்கலாம். உறுதி, எஃகுவை விட நூறு மடங்கு அதிகம். ஒரே ஓர் அணு தடிமன் மட்டுமே கொண்டிருக்கும் இந்தப் பொருளை, பல்வேறு நானோ தொழில்நுட்பங்களில் பயன்படுத்துகின்றனர்.
வீட்டிலேயே இதைத் தயாரிக்கலாம்
வேண்டிய பொருட்கள்:
மிக்சி, பாத்திரம் கழுவும் சோப்பு (surfactant), பென்சில் கிராபைட்.
செய்முறை
1. பென்சிலில் உள்ள கரிப் பொருள்தான் கிராபைட் என்பதால் அதை எடுத்துக்கொள்ளவும்.
2. கிராபைட் துகள்கள், சிறிதளவு பாத்திரம் கழுவும் சோப்பு, சிறிதளவு நீர் முதலியவற்றை மிக்சியில் அரைக்கவும்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ட்ரினிடி கல்லூரி ஆய்வாளர் ஜோனதன் கோல்மன் (Jonathan Coleman) மற்றும் அவரது குழுவினர் இணைந்து இந்தப் புதுமுறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் கடைசியில் கிடைக்கும் கலவையில் முழுமையாகக் கிராபீன் மட்டும் இருக்காது. பயன்படுத்திய கிராபைட் துகளின் தன்மை, சோப்பின் தன்மை மற்றும் அளவு சார்ந்தே கிராபீன் உருவாகும் விகிதம் அமையும். வீட்டிலேயே தயாரிக்கலாம் என்றாலும் இவற்றைப் பிரித்தெடுப்பது எளிதல்ல.
கடல் மட்ட அளவை எப்படி நிர்ணயிக்கிறார்கள்?
அ.மாணிக்கம், 9ஆம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.
கடற்கரைக்குச் சென்று ஸ்கேல் வைத்துக் கடலின் உயரத்தை அளக்க முடியாது. நொடிக்கு நொடி உயரம் ஏறி இறங்கும் கடலலைகள், மாற்றம் காணும் கடலேற்ற இறக்கம் (tides), சூரியன், நிலவு கோள்களின் காரணமான ஏற்ற இறக்கங்கள் எல்லாம் சேர்ந்து கடலின் உயரத்தை அளப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
கடல்மட்டத்தை அளவிட, கடலின் உள்ளே குழாய் ஒன்றைச் செங்குத்தாகச் செலுத்துவார்கள். அந்தக் குழாய் கீழே திறந்து இருப்பதால் கடல் நீர் புகுந்து உள்ளே கிணறுபோல இருக்கும். காற்றின் சலனம், கடலலைகள் ஏதும் அந்தக் கிணறு போன்ற குழாய் அமைப்பின் உள்ளே இருக்காது. எளிதில் குழாயில் எவ்வளவு ஆழத்தில் நீர் மட்டம் இருக்கிறது என அளந்துவிடலாம். பல நாட்கள் அளந்து கிடைக்கும் சராசரி அளவையே, சராசரி கடல் மட்டம் என்கிறோம்.
மனிதர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதுபோல், விலங்குகளின் ஆயுட்காலத்தை நீட்டிக்க வழி உண்டா?
ம.ரவீந்திரகுமார், சேலம்.
நோய், விபத்து, வேட்டையாடுதல் போன்ற பல்வேறு ஆபத்துகளைச் சந்தித்து, சமாளித்தே விலங்குகள் வாழ்கின்றன. இவற்றை எல்லாம் பொறுத்தே விலங்குகளின் ஆயுட்காலம் அமைகிறது. வேட்டையாடும் விலங்காக இருந்தாலும், அதற்கு ஏற்படும் உணவுப் பற்றாக்குறை அதன் ஆயுட்காலத்தைக் குறைக்கும்.
மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்ததற்கு முதல் காரணம், விவசாயம். விவசாயத்தின் மூலம் உணவுப் பற்றாக்குறையைப் பெருமளவு தீர்க்க முடிந்துள்ளது. இரண்டாவது காரணம், தடுப்பூசி போன்ற மருத்துவ முன்னேற்றங்கள். இதன்மூலம், கொடிய நோய்களில் இருந்து தப்பிக்க முடிந்துள்ளது.
வன உயிர்க் காப்பகங்களில், மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகளின் ஆயுட்காலம், காட்டு விலங்குகளைவிட கூடுதலாக உள்ளது என, சமீபத்தில் நடந்த ஆய்வு கூறுகிறது. பற்றாக்குறையற்ற உணவு, நோய்க்கு மருத்துவம், வேட்டையாடப்படுவதில் இருந்து பாதுகாப்பு போன்றவை கிடைத்தால், விலங்குகளின் ஆயுட்காலம் கூடும் என்கிறது இந்த ஆய்வு.
விவசாயத்தில் அடுத்த கட்ட வளர்ச்சி என்னவாக இருக்கும்?
செ.புவனா, 10ஆம் வகுப்பு,லட்சுமிபுரம், தூத்துக்குடி.
நுண்மை விவசாயம் (Precision agriculture) என்பது எனது கணிப்பு. வெப்பநிலையில் கூடுதல் நீர் தேவைப்படுகிற பயிருக்கு, தேவையான நீரை மதிப்பீடு செய்து நீரை அளிப்பது, நுண்மை விவசாயத்தின் ஒரு கூறு.
மின்னணு சாதனங்கள் கொண்டு மண்ணின் ஈரப்பதத்தை முதலில் அளவிட வேண்டும். பின்னர், பயிரின் நீர்ச்சத்தை அறிய எளிய கருவிகள் தேவை. அதே போல பயிருக்குத் தேவையானபோது மட்டுமே உரம் இடுதல் என எல்லாவற்றையும் நுண்மையாகச் செய்தல் சாத்தியம்.
அதேபோல பயிரைத் தாக்கும் பூச்சிகள், அந்தப் பூச்சிகளை உண்ணும் உயிரிகள் என, உயிரினச் சங்கிலி உள்ளது. அந்தச் சங்கிலியைப் புரிந்துகொண்டு விவசாயத்தைச் செய்தல் மற்றொரு பகுதி. புதிய உணர்விக் கருவிகள் பயன்படுத்துதல் மற்றும் தேவைக்கு அதிகமாக இடுபொருட்களைப் போடாமல் தேவை அறிந்து சூழலியல் அறிவுடன் மேற்கொள்ளப்படும் விவசாயமே நுண்மை விவசாயம்.