தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மகர மெய்யீற்றுப் புணர்ச்சி

மகர மெய்யீற்றுப் புணர்ச்சி

மகர மெய்யீற்றுப் புணர்ச்சி


PUBLISHED ON : ஜூலை 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

சொற்புணர்ச்சியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. ஒரு சொல்லின் கடைசி எழுத்து எப்படி இருக்கிறதோ, அதற்கேற்ப அச்சொல் தன்னையடுத்து வருகின்ற சொல்லோடு புணரும். அவ்வாறு புணரும்போது, வல்லெழுத்து மிகுவது, உடம்படுமெய் தோன்றுவது, இனமெய்யெழுத்து தோன்றுவது என்று பலவும் நிகழும். அவ்வாறு எதுவும் நிகழ்வதற்குத் தேவையின்றி, இயல்பாகப் புணர்வதும் உண்டு.

அத்தகைய புணர்ச்சிகளில், மெய்யெழுத்துகளில் முடியும் சொற்கள் எவ்வாறு புணர்கின்றன என்பது தனிப்பாடம். அவற்றில் ம் என்னும் மெய்யெழுத்தில் முடிகின்ற சொற்கள் யாவும், எவ்வாறு புணர்கின்றன என்பதைப் பார்ப்போம்.

ம் என்னும் மெய்யை 'மகர மெய்' என்று சொல்வோம். அந்த மகர மெய்யானது, ஒரு சொல்லின் ஈற்றெழுத்தாக வரும்பொழுது அதை, “மகரமெய்யீறு” என்பார்கள். மகர மெய்யீற்றுச் சொற்கள் எவ்வாறு புணர்கின்றன என்பதைப் பார்க்கப் போகிறோம். அதாவது, ம் என்ற எழுத்தில் முடிகின்ற சொற்கள், தன்னை அடுத்து வரும் சொல்லோடு எவ்வாறு புணர்கின்றன? தமிழில் ம் என்று முடியும் சொற்கள் மிகுதியாக உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மகர மெய்யீற்றுச் சொல்லை அடுத்து, உயிரெழுத்தில் தொடங்கும் சொல் வந்தால் என்னாகும்?

மரம் என்ற சொல் மகரமெய்யீற்றுச் சொல். இதை அடுத்து உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லான இலை வருகிறது என்று கொள்வோம்.

மரம் + இலை. முதலில் மகர மெய்யீறு (ம் என்ற எழுத்து) மறையும்.

மர + இலை என்று நிற்கும். மர என்பது இப்போது உயிரீற்றுச் சொல் (ர=ர்+அ)

இப்போது உயிரீற்றுச் சொல்லான பிறகு, வருமொழியோடு புணர்கையில், உடம்படுமெய் தோன்றும். (இ,ஈ,ஐ ஆகிய உயிர் எழுத்துகளில் முதல் சொல் முடியும்போது, ய் என்னும் உடம்படுமெய் தோன்றும். பிற உயிர் எழுத்துகளுக்கு வ் என்னும் உடம்படு மெய் தோன்றும். எ என்னும் எழுத்தில் முடியும் போது ய், வ் ஆகிய இரண்டும் தோன்றும்)

மர + வ் + இலை = மரவிலை. இங்கே வ் என்பது உடம்படுமெய்.

இதே சொல்லையடுத்து வல்லினத்தில் தொடங்கும் சொல் வந்தால் என்ன செய்வது ?

மரம் + கிளை. இங்கும் மேற்சொன்னவாறு மகர மெய் மறையும்.

மர + கிளை என்று நிற்கும். வருமொழி வல்லினம் என்றால், வல்லொற்று மிகும்.

மரக்கிளை.

வருமொழி வல்லினம் என்னும்போது, வேறு சில இடங்களில் மகர மெய்யானது இனமெல்லினமாய்த் திரிந்துவிடும்.

குடம் + குடமாய் = குடங் குடமாய். க்குக்கு ங் என்பது இன மெல்லினம்.

தினம் + தினம் = தினந்தினம். த்துக்கு ந் என்பது இன மெல்லினம்.

மகரமெய்யீற்றுச் சொல்லையடுத்து வருமொழி மெல்லின, இடையின எழுத்தில் தொடங்கினால், மகர மெய்யீறு கெடுவதோடு (ம் மறைவதோடு) நின்று இயல்பாகவே புணரும்.

மரம் + வேர் = மர வேர்

இடம் + நெருக்கடி = இடநெருக்கடி

ஆக, மகரமெய்யீற்றுப் புணர்ச்சியில், மகரமெய்கெடல், உடம்படுமெய் தோன்றல், வல்லொற்று மிகல், இனமெய்யாய்த் திரிதல், இயல்பாய்ப் புணர்தல் ஆகிய பல்வேறு புணர்ச்சி முறைகளையும் மனத்திற்கொள்ள வேண்டும்.

மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்

என்பது நன்னூலின் 219ம் நூற்பா.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us