
'மாமா, நான் ஒரு கதை எழுதியிருக்கேன்' என்றான் வளவன்.
'அட, கதையா? அருமை!' என்றபடி, அவனுடைய கையிலிருந்த தாள்களை வாங்கிக்கொண்டார் அருமைராஜன். ஆவலுடன் படிக்கத்தொடங்கினார்.
அவர் படிக்கப்படிக்க, வளவன் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் என்ன சொல்லப்போகிறாரோ என்று ஆவலுடன் காத்திருந்தான்.
சில நிமிடங்களில் அருமைராஜன், கதையைப் படித்துவிட்டார். 'நல்ல, எளிமையான நடையிலே, அழுத்தமான கருத்தை எழுதியிருக்கே, கையெழுத்து முத்துப்போல இருக்கு, பாராட்டுகள்' என்றார்.
அருமைராஜன், ஒரு புத்தகத்தை அவனிடம் கொடுத்தார். 'உன்னோட முதல் கதைக்கு என்னோட பரிசு!' என்றார்.
வளவன் ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தை வாங்கிப்பார்த்தான். 'தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகள்' என்று அதில் எழுதியிருந்தது.
'இந்தத் தொகுப்புல இருக்கிற ஒவ்வொரு கதாசிரியரும், பெரிய மேதைங்க. அவங்க பல உத்திகளைப் பயன்படுத்திக் கதைகளை எழுதியிருப்பாங்க. அதையெல்லாம் நீ புரிஞ்சுக்கணும்; கத்துக்கணும். அப்போதான் உன்னோட கதைகள்ல பொருத்தமான உத்திகளைப் பயன்படுத்தமுடியும். இன்னும் நல்ல கதைகளை எழுதமுடியும்.'
சட்டென்று வளவனின் சிரிப்பு நின்றது. 'அப்படீன்னா இந்தக்கதை நல்லா இல்லையா மாமா?'
'அட, நான் அப்படிச் சொல்லலைடா' என்று அணைத்துக் கொண்டார் அருமைராஜன். 'இது உன்னோட முதல் கதை, இந்த வயசுக்கு இது அருமையான முயற்சி. ஆனா இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு நீ இன்னும் சிறப்பான கதைகளை எழுதணும்ல? அதுக்குத்தான் இந்தப் பரிசு!'
'உத்தின்னா என்ன மாமா?'
'உன்னோட கதையில வர்ற ஒருத்தர், எதுலயும் கவனமில்லாம ஓடிகிட்டிருக்கார். அதனால அவரால எதுலயும் ஜெயிக்கமுடியலை. சரியா?'
'ஆமாம் மாமா.'
'அவரைத் திருத்த நீ என்ன செஞ்சே?'
'நண்பர் ஒருத்தரை வெச்சு அவருக்கு அறிவுரை சொன்னேன்' என்றான் வளவன். 'வயல்ல சும்மா விதைகளைத் தூவினாப் போதாது. சரியான உரம் போடணும். தண்ணி பாய்ச்சணும், ஆடு, மாடு மேய்ஞ்சுடாம பார்த்துக்கணும். அப்பதான் பயிர் நல்லா செழிச்சு விளையும்ன்னு அவர் சொன்னதும், இவர் திருந்திடறார்.'
'ஆமா, வயல், விதை, உரம், தண்ணி, ஆடு, மாடு, பயிர்... இதெல்லாம் எல்லாருக்கும் தெரியற விஷயங்கள். அதாவது, நம்ம கண்முன்னாடி நாம பார்க்கக்கூடிய புலம்படு (Concrete) நிகழ்ச்சிகள். அவற்றை வெச்சு, வாழ்க்கையில ஜெயிக்கணும்ன்னா கவனம் தேவைங்கற கருத்தியல் (Abstract) நிகழ்ச்சியை நீ தெளிவாப் புரியவெச்சிருக்கே. இதுக்குப் பேர்தான் உத்தி. கையாளும் முறை, செயல்படுத்தும் முறை!'
'ஓ, அப்படியா மாமா? நான் இதையெல்லாம் படிச்சதில்லை.'
'படிக்காமயே உத்தியை அழகாப் பயன்படுத்தியிருக்கே. இன்னும் இந்தமாதிரி நல்ல கதைகளைப் படிச்சேன்னா, பலப்பல விஷயங்களைப் புரிஞ்சுக்குவே. மேலும் அருமையான கதைகளை எழுதுவே. அதுக்குதான் இந்தப் பரிசு!'- என்.ராஜேஷ்