ஞாநி எழுதும் மாலுவின் டயரி (26) - பழகத் தெரிய வேண்டும்
ஞாநி எழுதும் மாலுவின் டயரி (26) - பழகத் தெரிய வேண்டும்
PUBLISHED ON : ஜூலை 11, 2016

ஒரு வாரமாக எல்லா இடத்திலும் இதே பேச்சுதான். அம்மா தன் சிநேகிதிகளுடன் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பா, டி.வி. பேப்பர் எல்லாம் பார்த்துவிட்டு 'ஒரே குழப்பமாக இருக்கிறது' என்கிறார். பள்ளிக் கூடத்தில் கூட என் சிநேகிதர்கள் எல்லாரும் இதைப் பற்றியேதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்வாதி பற்றித்தான் எல்லாப் பேச்சும்.
எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஸ்வாதியை யார் கொன்றார்கள், எப்படிக் கொன்றார்கள் என்று ஒரு துப்பறியும் கதை மாதிரி அதைப் பற்றி நான் யோசிக்க விரும்பவில்லை. அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம். ஸ்வாதி போல வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்காமல் இருக்க நாம் எல்லாம் என்ன செய்யவேண்டும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். எல்லா இடத்திலும் நிறைய போலீசை நிறுத்துவது, கேமரா வைப்பது எல்லாம், ஒரு குற்றம் நடந்த பின்னர் குற்றவாளியைப் பிடிக்க உதவியாக இருக்கலாம். ஆனால், குற்றம் நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்றுதான் நாம் யோசிக்க வேண்டும்.
பாலுவிடம் இதைப் பற்றிப் பேசினேன். அப்போது ஞாநி மாமாவும் கூட இருந்தார். பாலு சொன்னான், “அசலாக நடந்தது என்ன என்று நமக்குத் தெரியாது. ஸ்வாதி மீது அந்தப் பையனுக்கு விருப்பம் இருந்திருக்கிறது. அவர் அதை ஏற்கவில்லை. அதனால்தான் இப்படி”. 'அன்பு கொல்லுமா?' என்றேன். “அன்பு கொல்லாது. ஆனால் இன்னொருத்தரை தன் உடமையாக நினைத்து ஆக்கிரமிக்க நினைக்கும் மனம் கொல்லும்” என்றார் மாமா.
“எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று அழித்துவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது” என்றான் பாலு.
“உன் சிநேகிதன் கணேஷ் செய்த மாதிரியா?” என்றார் மாமா.
கணேஷ் எங்கள் வட்டத்தில் கொஞ்சம் போக்கிரித்தனமானவன். ஒரு தடவை பாலு கையில் அப்போதுதான் வாங்கியிருந்த ஐஸ்க்ரீம் இருந்தது. “எனக்குக் கொடு” என்று கணேஷ் கேட்டான். பாலு மறுத்துவிட்டான். உடனே கணேஷ் சட்டென்று பாலுவிடமிருந்த ஐஸ்க்ரீமை தட்டிவிட்டுத் தரையில் அது விழுந்ததும் காலால் தேய்த்துவிட்டான். நாங்கள் எல்லாரும் அதிர்ச்சி அடைந்தோம். “எனக்குக் கிடையாதுன்னு சொன்னே இல்ல. அப்ப இனிமே யாருக்கும் கிடையாது” என்று கொடூரமாகச் சிரித்தான் கணேஷ். அதிலிருந்து நாங்கள் யாரும் அவனுடன் அதிகம் பழகுவது இல்லை.
மாமா கேட்டதன் அர்த்தம் சட்டென்று எனக்குப் புரிந்தது. “எனக்குப் பிடித்த விஷயம் எனக்குக் கிடைக்காட்டி யாருக்கும் கிடைக்கக்கூடாதுன்னு நினைக்கறது சின்ன வயசுல இருந்தே மனசுல சிலருக்கு வந்துருதுங்கறீங்களா?” என்று கேட்டேன்.
“நிறைய விஷயம் சின்ன வயசுலயே ஏற்படற அனுபவங்கள்லருந்து உருவாகறதுதான். எது சரி, எது தப்புன்னு சொல்லித்தர, வழிகாட்ட ஒவ்வொரு வயசுலயும் யாராவது இல்லைன்னா, நிச்சயம் பின்னால சிக்கல்தான் ஏற்படும்” என்றார் மாமா.
அடுத்து மாமா இன்னொன்றைச் சொன்னார். “ சின்ன வயசுலயே நாம, பையன்களுக்கு பொண்ணுங்க கூட எப்படிப் பழகணும்னும் பொண்ணுங்களுக்குப் பையங்க கூட எப்படிப் பழகணும்னும் ஒழுங்கா எதுவும் சொல்லித் தர்றது இல்ல.”
'அப்ப எப்படி அதெல்லாம் கத்துக்கறோம்?' என்று கேட்டேன்.
“சுத்தி இருக்கற பெரியவங்களைப் பார்த்துக் கத்துக்கறீங்க. அப்பா அம்மாகிட்ட எப்படி நடந்துக்கறார்ங்கறதுதான் பாலுவுக்கு ரோல் மாடல். அம்மா எப்படி அப்பாகிட்ட நடந்துக்கறாங்க என்பதுதான் உன்னை மாதிரிப் பொண்ணுங்களுக்கு ரோல் மாடல். அடுத்து நீங்க பார்க்கற டிவி. சினிமா எல்லாம் ஆம்பளைன்னா இப்படி இருப்பான், பொண்ணுன்னா இப்படி இருக்கணும்னு நிறைய தப்புத் தப்பா சொல்லுது. இது எல்லாமா சேர்ந்துதான் கத்துக்கறீங்க” என்றார் மாமா.
'சரியா கத்துக்கறதுக்கு என்ன வழி? அது எதுவுமே இல்லியா?' என்று கேட்டேன்.
“எதையும் அப்பிடியே ஏத்துக்காம கேள்வி கேட்கப் பழகினாத்தான் எது சரி, எது தப்புன்னு நமக்கே தெரியவரும். அப்பா அம்மாகிட்ட நடந்துக்கற விதம் சரின்னு கேள்வி கேட்காம ஏத்துகிட்டா அதுல இருக்கற தப்பே நமக்குத் தெரியாம போயிடும். அதுதான் சரின்னு நம்ப ஆரம்பிச்சுருவோம். இந்த மாதிரிதான் பாக்கற டி.வி. சினிமா எல்லாத்தையும் அப்படியே நம்பாம, இதுல என்ன சரி, என்ன தப்புன்னு யோசிக்கக் கேள்வி கேட்கப் பழகணும். இதுல எல்லாம் சந்தேகம் வந்தா படிக்க நிறைய புத்தகம் இருக்கு. படிக்கப் படிக்க நிறைய விஷயத்துல தெளிவு வரும். படிக்கறதையும் கேள்வி கேட்டுப் படிக்க ஆரம்பிச்சா, நிஜமாவே நல்ல புத்தகம் எது, வேஸ்ட் எதுன்னு தெரியும். இப்படித்தான் தெளிவடையமுடியும்” என்றார் மாமா.
“இது எல்லாம் தொலை நோக்குல சரி. ஆனா உடனடியா என்ன செய்யறது?” என்றேன்.
“உடனடியா முதல் விஷயம் ஒவ்வொரு சிறுவனுக்கும் ஒவ்வொரு சிறுமிக்கும் ஒருத்தர் இன்னொருத்தரை மதிக்கக் கத்துக் குடுக்கணும். நீயும் என்னை மாதிரி இன்னொரு உயிர்; நீயும் என்னை மாதிரி சுயமா சிந்திக்கத் தெரிஞ்ச ஒரு ஆளு அப்படின்னு ரெண்டு பேரும் புரிஞ்சுக்கணும்.”
பாலு குறுக்கிட்டான். “மாமா. மாலு கேட்க வர்றது என்னன்னா, ஒரு பையன் வந்து மாலு கிட்ட ஐ லவ் யூன்னு சொன்னா மாலு என்ன செய்யறதுன்னுதான்” என்றான்.
மாமா சிரித்தார். “முதல் ஈசியான பதில், ஐ ஆல்சோ லவ் யூ. ஐ ஆல்சோ லவ் பாலு, ஐ ஆல்சோ லவ் ஜான்சன். நாம எல்லாரும் நல்ல சிநேகிதர்களா இருக்கலாம். அதுக்கு மேல ஒண்ணும் இல்ல. அப்படின்னு சொல்லலாம்.”
“ஆனா உன்கிட்ட வந்து சொல்ற பையன் யாருங்கறதப் பொறுத்து, இதே பதிலை அவனுக்குப் புரியற மாதிரி, அவனும் ஏத்துக்கற மாதிரி சொல்லவேண்டியிருக்கும். ஒரு பையனை டீல் பண்ற மாதிரி இன்னொருத்தனையும் டீல் பண்ண முடியாது. பொண்ணுங்களும் அப்படித்தான்” என்றார் மாமா.
உண்மைதான். ஒவ்வொரு நபரும் தனித்துவம் உடையவர்கள்தான். ஆனால் எனக்கு இப்போதைய பிரச்னையின் அடிப்படையே வேறு என்று தோன்றுகிறது என்று மாமாவிடம் சொன்னேன். “என்ன?” என்று கேட்டார்.
'நாங்களும் ஆண்களுக்குச் சமமானவர்கள்தான் என்பது இன்று எல்லாப் பெண்களுக்கும் தெரிந்துவிட்டது. ஆனால் இதை ஒப்புக் கொள்ள நிறைய ஆண்கள் இன்னும் தயாராக இல்லை என்பதுதான் பிரச்னை. ஒப்புக்கொண்டுவிட்டால் எந்தச் சிக்கலும் வராது. தன்னைப் போல இன்னொரு சிந்திக்கத் தெரிந்த மனிதப் பிறவி என்று புரிந்துவிடும்” என்றேன். “ரொம்ப சரி” என்றார் மாமா.
“சமம்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எங்கள் மூளை சைஸ் உங்களை விட, பத்து சதவீதம் பெரிசு” என்றான் பாலு.
“அதுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்ல. ஆண்களோட உடல் அளவு பெரிசு. அதனால மூளை சைசும் பெரிசு. அவ்வளவுதான். மத்தபடி நிறைய ஆராய்ச்சி செய்ததுல, இதை விட அது திறமையானதுன்னு ஒட்டு மொத்தமா எதுவும் இதுவரைக்கும் நிரூபிக்கப்படலை” என்றேன்.
“ஒரு விஷயத்தை அணுகற விதத்துல ஆணோட மூளைக்கும் பெண்ணோட மூளைக்கும் சில வேறுபாடுகள் இருக்கு. ஆண் எல்லாவற்றையும் பொருட்களாப் பார்க்கறான். பெண் அதே விஷயத்த அதுல சம்பந்தப்பட்ட நபர்கள் அடிப்படையில பார்க்கறா. இதான் ஆராய்ச்சில தெரிஞ்சது” என்றார் மாமா.
உடனே வாலு “ரொம்ப சரி. பாலு என்னை ஒரு பொருளா பார்க்கறான். மாலுதான் என்னை ஒரு உயிரா பார்க்கறா” என்றது. எல்லாரும் சிரித்தோம்.
வாலுபீடியா 1: ஆண் மூளைக்கும் பெண் மூளைக்கும் என்ன வித்யாசம் என்ற ஆராய்ச்சியின் முடிவுகள்:
1. ஆண் மூளையின் சைஸ் பெரியது. அதனால் பெண் மூளையை விட அதிக திறன் உடையது என்று அர்த்தம் இல்லை.
2. இடது பக்க மூளையை அதிகம் உபயோகிப்பவர்கள் ஆண்கள். பெண்கள் இரு பக்க மூளையையும் கலந்து உபயோகிப்பவர்கள். எனவே பெண்களுடைய அணுகுமுறையில் உள்ளுணர்வுக்குக் கூடுதல் அழுத்தம் இருக்கும். ஆண்கள் ஒரு வேலை முடிகிறதா என்று மட்டுமே யோசிப்பார்கள்.
3. பெண்களுக்குத் தகவல் தொடர்பு திறமைகள் ஆணை விட அதிகம். மனிதர்களை ஒருங்கிணைத்து வேலை செய்வதிலும் அவர்களுக்கு ஆற்றல் அதிகம். ஆண்களுக்கு எதையும் தெளிவாக வார்த்தைகளில் தெரிவித்தால் மட்டுமே புரியும். சமிக்ஞைகள், குறிப்புகளிலிருந்து புரிந்துகொள்ளும் ஆற்றல் பெண்ணுக்கே அதிகம்.
4. ஆண்கள் கணக்குப் புலிகள். ஒப்பிடும்போது கணிதத்தில் பெண்களின் மூளை ஆற்றல் குறைவானது.
5. அழுத்தமான சூழல் வந்தால் ஆண்கள் ஒன்று அதை எதிர்த்து சண்டையிடுவார்கள்.அல்லது நழுவி ஓடிவிடுவார்கள். பெண்கள் வளைந்து கொடுத்து அதைத் தம் வசப்படுத்தும் அணுகுமுறையை கையாள்வார்கள்.
6. மொழித் திறன் பெண்களுக்கே அதிகம். மூளையில் இதற்கான இடம் ஆணை விட அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது.
7. ஒரு இடத்துக்குப் போய் வரும் வழி, அந்த இடத்தின் தன்மையைப் புரிந்துகொள்வது போன்ற ஆற்றல்கள் ஆணுக்கே அதிகம்.
