ஞாநி எழுதும் மாலுவின் டயரி (38) - உனக்கும் கீழே உள்ளவர் கோடி
ஞாநி எழுதும் மாலுவின் டயரி (38) - உனக்கும் கீழே உள்ளவர் கோடி
PUBLISHED ON : அக் 03, 2016

“மழை ஆரம்பிச்சுடுச்சு. பயமா இருக்கு. போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் சென்னை முழுகிடுமோன்னு” என்றபடி நுழைந்தான் பாலு.
“போன வருஷம் மாதிரி இந்த வருஷம் ஆகாது” என்றேன். “நீ என்ன ரமணனுக்குத் தங்கச்சியா? இந்த தடவை அவ்வளவு மழை வராதுங்கறயா?” என்றான் பாலு. “மழை வரலாம். ஆனா, போன வருஷம் நாம தயாரா இல்லை. இப்ப தயாரா இருக்கோம்” என்றேன். “நாமன்னு யாரைச் சொல்ற? அரசாங்கத்தையா? நம்ம வீட்டையா?” என்று கேட்டார் ஞாநி மாமா.
“அரசாங்கம்தான் எதுவுமே செஞ்ச மாதிரி தெரியலயே. நம்ம ஏரியால எந்த மழை நீர் சாக்கடையையும் சரி செய்யல. லட்சுமணசாமி சாலையிலயும் ராமசாமி சாலையிலயும் புதுசா ரோடையே அடைக்கற மாதிரி அகலமான நடைபாதை போட்டு வச்சிருக்காங்க. மழை பெய்தால் அதுவே, தண்ணியை தொட்டி மாதிரி தெருவுல இந்த தடவை தேக்கிடுமோன்னு பயமா இருக்கு. நான் தயாரா இருக்கோம்னு சொன்னது நம்ம வீட்டைத்தான்” என்றேன்.
போன வருட மழையில் கீழ் வீடு முழுகிவிட்டது. அங்கிருந்த குடும்பத்தினர் வளர்ப்பு நாயோடு மாடிக்கு வந்து எங்களோடுதான் தங்கினார்கள். நான்கு நாட்கள் வெளியுலகத் தொடர்பே எங்களுக்கு இல்லை. போன் இல்லை. செல்போன் வேலை செய்யவில்லை. மின்சாரம் இல்லை. எனவே ரேடியோ, டிவி, இன்டர்நெட் எதுவும் இல்லை. மாடியிலிருந்து தெருவைப் பார்த்தால் பி.எம்.டபிள்யூ.கார் உட்பட பல கார்கள் தெருவில் முழுகி தலை மட்டும் வழுக்கை மண்டை மாதிரி வெளியே தெரிந்துகொண்டிருந்தன. எப்போதாவது தெருவில் மார்பளவு தண்ணீரில் போகிற யாராவது மாடி பால்கனியில் நிற்கும் எங்களிடம் பேசினால் தெரிவிக்கும் தகவல்கள்தான். அவர்களிலேயே யாராவது ஒருத்தர், ”அரை மைல் தள்ளி ஏதோ ஒரு கடை திறந்திருக்கிறது; ஏதாவது வாங்கி வரவேண்டுமா?” என்று முன்பின் தெரியாதபோதும் அன்போடு கேட்பார்கள். அப்போது வீட்டில் ஸ்டாக் இருந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள், காய்கறிகள், மெழுகுவத்திகள், தீப்பெட்டிகள் எல்லாம் வேகமாகத் தீர்ந்துவிட்டன. நான்காவது நாள் இதற்கு மேல் இங்கேயே இருந்தால், தண்ணீர் முதல் மாடிக்கும் வந்துவிடும் என்ற பயம் வந்தது. (அப்படி எதுவும் நடக்கவில்லை). எனவே எல்லாரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்துக் கொண்டு மார்பளவு தண்ணீரில் அரை மைல் தூரம் நடந்து மேடான தண்ணீர் தேங்காத உறவினர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
இந்த முறை வீட்டை தண்ணீர் சூழ்ந்து முற்றுகையிட்டால், பத்து நாள் வரை தாக்கு பிடிக்கிற மாதிரி உணவுப் பொருட்கள், மெழுகுவத்தி எல்லாம் ஸ்டாக் செய்து வைத்திருக்கிறோம். அதைத்தான் 'தயார் நிலை'யில் இருக்கிறோம் என்று மாமாவிடம் சொன்னேன். போன முறை எங்களுடன் ஞாநி மாமாவும் மாடியில் ஹவுஸ் அரெஸ்ட் ஆகிவிட்டார். பகல் எல்லாம் அரட்டை. அது போரடித்தால் கேரம் விளையாடுவோம். அப்புறம் வெளிச்சம் பிரச்னையானதால், பகலில் கேரம்; இரவெல்லாம் ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் பார்க்காமலே அரட்டை என்று நேரத்தைக் கழித்தோம்.
அப்போதுதான் கேரத்தைப் பத்தி எனக்கு ஓர் ஆச்சரியமான தகவல் தெரிய வந்தது. கேரம் விளையாட்டு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதுதான்னு ஆய்வுகள் சொல்வதாக மாமா சொன்னார். அதுவும் முதல் உலக யுத்தத்துக்கு கொஞ்சம் முன்னாலதான் அது பிரபலமாகி இருக்கிறது. இந்தியாவை ஆக்கிரமித்த போர்ச்சுகீசியர்கள் இங்கிருந்து அதை பிற நாடுகளுக்குக் கொண்டு போனார்களாம். கடைசியில 1889ல் அமெரிக்காவில் ஹென்ரி ஹச்கெல் என்ற பள்ளி ஆசிரியர் தான்தான் கேரம் போர்டை வடிவமைத்ததாகச் சொல்லி அதற்கு அங்கே காப்புரிமை (பேடண்ட்) வாங்கியிருக்கிறார்!
கேரம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்றால் ஏன் அதில் நிற வேறுபாடு இருக்கிறது என்று மாமாவிடம் கேட்டேன். கறுப்பு காயினுக்கு வெள்ளையை விட பாய்ண்ட் கம்மி. இது வெள்ளைக்காரர்கள் வேலை மாதிரிதானே தெரிகிறது? “நிறவெறி நம்மிடமும்தானே இன்னமும் இருக்கிறது. இங்கேயும் ஜாதிகளுக்கு அடுக்கு அடிப்படையில் வர்ணம் கொடுத்திருக்கிறோம் அல்லவா? மேலை நாட்டுக்காரர்கள் இங்கே ஆள வந்ததும், அந்த நிறப் பாகுபாடு இன்னும் வலிமையாகி இருக்கும்” என்றார் மாமா. நாங்கள் விளையாடும்போது எப்போதும் வெள்ளை, கறுப்பு இரு காயின்களுக்கும் சமமான பாய்ண்ட்தான் வைத்து விளையாடுவோம்.
என்னதான் கேரம் எங்களுக்கெல்லாம் பிடித்த விளையாட்டாக இருந்தாலும், தொடர்ந்து நான்கு நாட்கள் அதையே ஆடுவதும் போரடித்தது. இதை மாமாவிடம் சொன்னதும், “இந்த மழையில் இந்த வெள்ளத்தில் நமக்கு மேலே ஒரு கூரை இருக்கிறது. ரெண்டு வேளை உணவு இருக்கிறது. வீட்டுக்குள்ளாவது விளையாடிக் கொண்டிருக்கிறோம். இது எதுவும் இல்லாமல் லட்சக்கணக்கானவர்கள் கீழே வெள்ளத்திலேயே இருக்கிறார்கள். அதை நினைத்துப் பார்” என்றார். கண்ணதாசன் பாட்டைப் பாடிக் காண்பித்தார், “உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”.
அப்போதுதான் இந்தியாவைத் தாக்கும் புயல்கள் இதர இடங்களில் என்னவெல்லாம் நாசம் செய்கின்றன என்று அவரிடம் தெரிந்து கொண்டேன். “இயற்கை, சென்னையைத் தாக்குவது குறைவுதான். ஏரியை ஆக்கிரமிப்பது, வடிகால் கட்டாமல் குடியிருப்பு கட்டுவது என்று நம்முடைய நிர்வாகக் கோளாறினால்தான் அதிக பாதிப்பு.
அடிக்கடி சென்னை நோக்கி வரும் புயல்கள் எல்லாம் கடைசியில் திரும்பி ஆந்திரா, கொல்கத்தா, வங்க தேசம் என்று போய்விடுவதை நான் கவனித்திருக்கிறேன். கொல்கத்தாதான் அதிக அடி வாங்கும். அக்டோபர் மாதம் வந்தாலே ஆந்திரா, ஒடிசா, கொல்கத்தா, மேற்கு வங்கம், வங்க தேசம் எல்லாருக்கும் சிக்கல்தான். சுமார் 300 வருடம் முன்னால் 1737ல் இருந்து கொல்கத்தாவில் புயல்கள் செய்த சேதம் பற்றிப் பட்டியல் இருக்கிறது. அந்த வருடம் துறைமுகத்தில் 20 ஆயிரம் படகுகள் முழுகிவிட்டனவாம். நகரில் மட்டும் 3 ஆயிரம் பேர் செத்திருக்கிறார்கள். அப்புறம் 1864 அக்டோபர் 5 அடித்த புயலில் 60 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். இரு துறைமுகங்கள் அழிந்துவிட்டன. கொல்கத்தாவில் இருந்த 195 கப்பல்களில் 172 முழுகிவிட்டன. பத்து வருடம் கழித்து இன்னொரு புயல். இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் 80 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் முன்னெச்சரிக்கை தரும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால், இறப்பு குறைந்திருக்கிறது. ஆனால் சாலை கட்டடங்களுக்கு ஏற்படும் பாதிப்பு நீடிக்கிறது” என்றார் மாமா.
“மழை விட்டுடுச்சு. வெளியே போலாமா?” என்றது வாலு. “நாடகம் பார்க்கப் போகலாம்” என்றார் மாமா. “இந்த மழையில் நாடகம் நடக்குமா?” என்றான் பாலு. “அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் என்றுதான் அந்த காலத்திலேயே விளம்பரம் செய்வார்கள்” என்றார் மாமா. “விளம்பரமெல்லாம் சரி. பிராக்டிகலா முடியுமா?” என்றான் பாலு. “லண்டன்ல 64 வருஷமா தினசரி ஒரு நாடகம் நடந்துகிட்டே இருக்கு. மர்மக் கதாசிரியை அகாதா கிறிஸ்டி எழுதின மவுஸ்டிராப் 25 ஆயிரம் நிகழ்ச்சிகளைத் தாண்டிடுச்சு. மழை வெயில் குளிர் எதுக்கும் நாடகத்தை நிறுத்தல. அதுல ரெண்டு நடிகர்கள் தொடர்ந்து 11 வருஷம் நடிச்சிருக்காங்க. இப்ப வருஷா வருஷம் நடிகர்களை மட்டும் மாத்தறாங்க. காந்தி படத்தை எடுத்த ரிச்சர்ட் ஆட்டன்பரோ அதுல நடிச்சிருக்காரு” என்றார் மாமா.
“அகாதா கிறிஸ்டி இப்ப உயிரோட இருக்காங்களா?” என்று கேட்டான் பாலு. “இருந்தா அவங்களுக்கு இப்ப 125 வயசு. 84வது வயசுல காலமாயிட்டாங்க. கடைசி வருஷத்துல நாடகத்தைப் போய்க் கூட பார்த்தாங்க” என்றார் மாமா. “ஒருத்தர் இறந்ததுக்கு அப்புறமும் அவங்களோட படைப்பு உயிரோட இருக்கறதுதான் முக்கியமான மெசேஜ், இல்லையா மாமா?” என்றான் பாலு. “ஆமா. அது எல்லா விஞ்ஞானிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் என்ஜினியர்களுக்கும் டாக்டர்களுக்கும்தான் சாத்தியம்” என்றார் மாமா.
“நான் இதுல ஏதாவது ஒண்ணா நிச்சயம் ஆயிருவேன்” என்றான் பாலு. வாலு கமுக்கமாகச் சிரித்தது.
வாலுபீடியா 1: சர்வதேச கேரம் சங்கம் ஆரம்பிக்கப்பட்டதே சென்னையில்தான். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கேரம் போர்டுகள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வாலுபீடியா 2: அகாதா கிறிஸ்டியின் நாவல்கள் 2 பில்லியன் பிரதிகள் விற்றுள்ளன. 103 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஷேக்ஸ்பியருக்கும் பைபிளுக்கும் அடுத்தபடி அதிகமாக அச்சிடப்பட்டிருப்பது இவர் நாவல்கள்தானாம். 36ஆவது வயதில் இவர் திடிரென பத்து நாள் காணாமல் போனது சர்வதேசச் செய்தியாகிவிட்டது. எங்கே, ஏன், எதற்காகப் போனார் என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.
