sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 17, 2026 ,சித்திரை 4, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (39) - நானே ராஜா!

/

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (39) - நானே ராஜா!

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (39) - நானே ராஜா!

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (39) - நானே ராஜா!


PUBLISHED ON : அக் 10, 2016

Google News

PUBLISHED ON : அக் 10, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“நான்தான் இந்தியாவின் சக்ரவர்த்தின்னு அறிவிக்கலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்” என்றான் பாலு.

“ஜோக்கர் படம் பார்த்த எஃபெக்ட்டா?” என்றது வாலு. “இல்லையில்லை. நான் அமெரிக்காவின் சக்ரவர்த்தி பத்தி அவன்கிட்ட சொல்லிகிட்டு இருந்தேன். அதோட எஃபெக்ட்” என்றார் ஞாநி மாமா.

“அமெரிக்காவுக்கு ஏது சக்ரவர்த்தி? அங்கே மன்னராட்சியே இருந்தது இல்லயே?” என்று கேட்டேன். “ஜோஷுவா நார்ட்டன் என்று ஒருத்தர் 1859ல் தன்னைத் தானே அமெரிக்காவின் சக்ரவர்த்தி முதலாம் நார்ட்டன் என்று தன் 40ஆவது வயதில் அறிவித்துக்கொண்டார். 65ஆம் வயதில் இறக்கும்வரையில் அவர் அப்படியே சொல்லிக்கொண்டு இருந்தார்” என்றார் மாமா.

“அவர் சொன்னால் போதுமா? மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டாமா?” என்றேன். “சான் ஃபிரான்சிஸ்கோ மக்களுக்கு அவர் நல்ல பொழுதுபோக்காக இருந்தார். அவரிடம் காசு கிடையாது. பல ஓட்டல்கள் அவருக்கு தினமும் இலவசமாக சாப்பாடு போட்டன” என்றார் மாமா.

“சக்ரவர்த்தியாக அவர் என்னதான் செய்தார்?”

“அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார். மன்ற உறுப்பினர்களை எல்லாம் கைது செய்யும்படி ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த அறிவிப்புகளை எல்லாம் செய்தித்தாட்களுக்கு அவர் அனுப்பிவைத்தார். எல்லாரும் இதை ஒரு தமாஷாகக் கருதி வெளியிட்டார்களே தவிர, யாரும் அவர் சொன்னதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நகராட்சி ஆவணங்களில் அவர் மனநோயாளி என்றே குறிப்பிட்டிருந்தது” என்றார் மாமா.

“நாற்பது வயதில் சக்ரவர்த்தி'யாவதற்கு முன்னால் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?” என்று கேட்டான் பாலு. “அவர் இங்கிலாந்தில் பிறந்தவர். தென் ஆப்பிரிக்காவில் வளர்ந்தவர். அங்கே கொஞ்சம் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்ததும் அமெரிக்காவுக்கு வந்துவிட்டார். சீனாவிலிருந்து அப்போது அமெரிக்காவுக்கு அரிசி ஏற்றுமதி ஆகிக் கொண்டிருந்தது. சீனாவில் அரிசிப் பஞ்சம் வந்ததும் ஏற்றுமதியை நிறுத்திவிட்டது. இதனால் சான் ஃபிரான்சிஸ்கோவில் அரிசி விலை பல மடங்கு ஏறிவிட்டது. உடனே நார்ட்டன் ஒரு கப்பல் நிறைய அரிசியை தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் போட்டு விலைக்கு வாங்கினார். சான் ஃபிரான்சிஸ்கோவில் பெரும் லாபத்துக்கு விற்கலாம் என்பது அவர் திட்டம். ஆனால் அவர் கப்பல் வந்து சேர்ந்தபோது, இன்னும் நிறைய கப்பல்களில் அரிசி வந்து விட்டதால் அரிசி விலை இறங்கிவிட்டது. நார்ட்டன் பெரும் நஷ்டமடைந்து திவாலாகிவிட்டார். அதன் பிறகுதான் தன்னை சக்ரவர்த்தியாக அறிவித்துக் கொண்டார்” என்று விவரித்தார் மாமா.

”உலகத்தின் ஒரே ஏழை சக்ரவர்த்தி அவராகத்தான் இருக்கவேண்டும்” என்றான் பாலு.

“செத்தபோதும் பரம ஏழையாகத்தான் செத்தார். அவரிடம் மொத்தமாக ஐந்து டாலர்தான் இருந்தது. அநாதைகளை அடக்கம் செய்ய நகராட்சியே சவப் பெட்டி தருவது வழக்கம். அப்படி ஒரு சவப் பெட்டி தயாரானதும், பொதுமக்கள் பலருக்கு கோபம் வந்துவிட்டது. சக்ரவர்த்தியை நல்ல சவப் பெட்டியில் வைக்கவேண்டுமென்று நன்கொடை திரட்டினார்கள். தங்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்த அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் இறுதி ஊர்வலத்தில் 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்” என்றார் மாமா.

“அவர் உருப்படியாக எதுவும் செய்யவில்லையா?” என்றேன். “தெருக்களில் நடைபாதைகளைப் பார்வையிடுவார். பழுதானதை ரிப்பேர் செய்யச் சொல்லி உத்தரவிடுவார். போலீஸ்காரர்கள் ஒழுங்காக உடை உடுத்தியிருக்கிறார்களா என்று சோதிப்பார். எங்காவது சண்டை நடந்தால், சண்டை போடும் இரு தரப்புக்கும் நடுவே போய் நின்று கும்பிட்டு பிரேயர் சொல்லி அமைதிப்படுத்துவார். அவர் போட்ட உத்தரவுகளை யாரும் நிறைவேற்றியதில்லை. ஆனால் அவர் காலத்துக்குப் பின் சில யோசனைகள் செயல்படுத்தப்பட்டுவிட்டன” என்றார் மாமா.

“என்ன அவை?” என்றான் பாலு. “ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னோடியாக இருந்த லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பை உருவாக்கும்படி நார்ட்டன் சொன்னார். சான் ஃபிரான்சிஸ்கோவில் சில முக்கியமான இடங்களில் பாலங்கள் கட்ட உத்தரவிட்டார். இதெல்லாம் அவர் இறந்தபிறகு நிஜமாகவே நடந்தன.”

“ஆனால் அதற்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைதானே” என்றேன். ஆமாம் என்றார் மாமா.

“இந்த யோசனைகளை எல்லாம் அவர் சக்ரவர்த்தி என்று அசட்டுத்தனமாக சொல்லிக் கொள்ளாமல் பேசியிருந்தால், அவர் காலத்திலேயே கூட மற்றவர்கள் சீரியசாக எடுத்துக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு இல்லையா?” என்றேன்.

“அவர் அசட்டுத்தனமாக இருந்ததால்தான், இந்த பப்ளிசிட்டியே கிடைத்தது” என்றது வாலு.

“அப்படியானால் ஒருத்தர் ஒழுங்காக யோசனை சொன்னால் கவனிக்கமாட்டார்களா?” என்றேன். “பத்திரிகைகளுக்கு எழுதலாம். அரசு நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு எழுதலாம். நல்ல பத்திரிகை ஆசிரியர், நல்ல நிர்வாகிகள் எப்போதும் நல்ல யோசனைகளை யார் சொன்னாலும் எடுத்துக்கொள்வார்கள்” என்றார் மாமா.

“ஹைட் பார்க் மாதிரி யார் வேண்டுமானாலும் கருத்தைப் பொது இடத்தில் பேச இங்கே இடம் இல்லையே” என்றது வாலு. “உண்மைதான். லண்டன் ஹைட் பார்க்குக்கு ஒரு நீண்ட சரித்திரம் இருக்கிறது. அந்த பூங்கா இருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் தூக்கு மேடை இருந்தது. பொதுமக்கள் முன்னாலேயே தூக்கிடுவார்கள். தூக்குக் கைதி கடைசியாக தன் கருத்தை சொல்ல வாய்ப்பு தரப்படும். அந்த மரபைப் பின்பற்றித்தான் இன்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹைட் பார்க்கில் ஒரு மூலையில் யார் வேண்டுமானாலும் தான் விரும்புவதைப் பேசலாம் என்ற நடைமுறை இருக்கிறது. இந்தக் கருத்துச் சுதந்திர உரிமைக்காக 1872ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சட்டமே போட்டிருக்கிறார்கள். ஹைட் பார்க்கில் பேசுவதை, அடிதடி ஏற்பட்டால் ஒழிய போலீஸ் கூட தடுக்கமுடியாது” என்றார் மாமா.

“இந்த மாதிரி நம்ம ஊரிலும் ஒரு சட்டம் கொண்டு வரக் கூடாதா? பனகல் பார்க், ஜீவா பார்க், நடேசன் பார்க், நாகேஸ்வரராவ் பார்க் என்று எத்தனை பார்க்குகள் இருக்கின்றன” என்றேன்.

“பார்க் வேண்டாம். சென்னையில் பீச் இருக்கிறதே. காந்தி சிலைக்குக் கீழே இப்படி பேச ஏற்பாடு செய்யலாம்” என்றான் பாலு.

“வழக்கம் போல அதற்கும் நீ அரசியலில் குதித்து முதலமைச்சரானபிறகு உத்தரவு போட்டால்தான் உண்டு” என்றது வாலு. “இப்போதே உத்தரவு போடுகிறேன்” என்றான் பாலு. “சரித்திரத்தில் ஒரு நார்ட்டன் சக்ரவர்த்தி போதும் பாலு” என்றேன். மாமா சிரித்தார். “ஜனநாயகத்தில் நாம் எல்லாருமே சக்ரவர்த்திகள்தானே” என்றார்.

வாலுபீடியா 1



பொது இடங்களுக்கு செல்லும்போது அரசர் மாதிரி சீருடை அணிந்து வலம் வந்த நார்ட்டன், தான் பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவை திருமணம் செய்யப் போவதாகவும்

சொல்லிக் கொண்டிருந்தார். இதற்காக விக்டோரியாவுக்கு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார். நார்ட்டனை ஒரே ஒருமுறை போலீஸ் கைது செய்தது. பத்திரிகைகளும் பொது மக்களும் தலையிட்டதால் விடுவிக்கப்பட்டார்.

வாலுபீடியா 2



ஹைட் பார்க் மாதிரி பொதுமக்கள் யாரும் வந்து உரை நிகழ்த்தக் கூடிய பூங்கா ஏற்பாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், நைஜீரியா முதலிய நாடுகளில் உள்ளன.






      Dinamalar
      Follow us