தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஞாநி எழுதும் மாலுவின் டயரி - நமக்கு ஏன் வால் இல்லை!

ஞாநி எழுதும் மாலுவின் டயரி - நமக்கு ஏன் வால் இல்லை!

ஞாநி எழுதும் மாலுவின் டயரி - நமக்கு ஏன் வால் இல்லை!


PUBLISHED ON : பிப் 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த மாலு, பாலு, ஞாநி மாமா, இன்னும் நிறைய பேர் என்னை வாலு வாலுன்னு பேர் வெச்சுக் கூப்பிடறாங்க. கேட்டா, நான் வால் இருக்கற எலிங்கறாங்க. நான் எலி இல்ல. மவுஸ் (Mouse). மவுசுக்கு வால் கெடையாது. வயர் (wire)தான் உண்டு. அது கூட என்னை மாதிரி வை-ஃபை(Wi-fi) மவுசுக்கு கிடையாது. அப்பறம் என்னை ஏன் வாலுன்னு கூப்பிடணும் ? மனுஷங்களுக்குத்தான் வால் இருந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஏன்னா, நீங்க எல்லாரும் குரங்கிலிருந்துதான் உருவாகி வந்திருக்கீங்க. எனக்கு ஒரு சந்தேகம். இல்லையில்லை. இரண்டு சந்தேகம்.

ஒண்ணு, ஏன் இப்ப மனுஷங்களுக்கு வால் இல்ல ? (மாலுவுக்கும் பாலுவுக்கும் வால் இருந்தா எனக்கு பாக்க ஜாலியா இருக்குமே!) ரெண்டாவது சந்தேகம், ஏன் இப்பல்லாம் குரங்குங்க அப்பிடியே குரங்காவே இருக்கு? அதிலருந்து ஏன் மனுஷங்க வர்றதில்ல?

மேலே இருப்பது என் டயரியில் வாலு கிறுக்கி வைத்திருப்பது. இப்படித்தான் அடிக்கடி என் டயரியில் பாலுவும் வாலுவும் ஏதாவது எழுதி வைப்பார்கள். தனி டயரி எழுதச் சொன்னால் எழுத மாட்டார்கள். 'நீதான் நிறைய பக்கம் அப்பப்ப காலியா விட்டிருக்கியே. அதில் நாங்கள் எழுதிக் கொள்கிறோம்' என்பார்கள். ஓ.கே.

நமக்கு வால் இல்லையே என்று வாலு வருத்தப்படுகிறது. எனக்கு வருத்தம் இல்லை. வால் இருந்தால் முதல் கஷ்டம் இப்போது போல வசதியாக உட்கார முடியாது; படுக்க முடியாது. டிரஸ் டிசைன் எல்லாம் வேறு மாதிரி செய்யவேண்டி இருக்கும். வாலை சுருட்டி சைட் பாக்கெட்டில் போட்டுக்கொள்கிற மாதிரி ஏதாவது செய்யவேண்டி வரும். சைக்கிள், கார், பஸ், ரயில், விமானம் என்று எல்லாவற்றையும் புது டிசைனில் செய்யவேண்டி வரும்! எல்லாவற்றை விட முக்கியம், வால் இருந்தால், பழையபடி நாலு காலில் நடக்க வேண்டியதாகிவிடும்.

வாலை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நாம் மரங்களில் ஏறித் திரிந்த குரங்குகளாக இருந்த காலத்தில் வால் நிறைய பயன்பட்டிருக்கும். கிளைகளைச் சுற்றிப் பிடித்துக் கொள்ள அது ஒரு கை மாதிரி இருந்திருக்கும். நான்கு கால்களில் நடக்காமல், அதில் இரண்டை மட்டும் கையாகப் பயன்படுத்த வசதியாக, மனிதன் இரண்டு காலில் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்ததில் இருந்துதான் நமக்கு வால் தேவையில்லாமல் போய்விட்டது. ஆனால் பழைய ஞாபகத்தில் இன்னமும் முதுகெலும்பின் கடைசியில் குட்டியாக ஒரு வால் எலும்பு இப்போதும் இருக்கிறது!

“இதெல்லாம் எப்போது நடந்தது மாலு?” என்று என் தோளுக்குப் பின்னால் எட்டிப் பார்த்து, நான் எழுதுவதைப் படித்துவிட்டு கேட்கிறான் பாலு.

“டேய். அதெல்லாம் மில்லியன், பில்லியன் வருடங்களுக்கு முன்னால் நடந்தது என்கிறார்கள்.”

“மில்லியனுக்கு எத்தனை ஸீரோ? ஒரு பில்லியன்னா எத்தனை மில்லியன்?”

“அதெல்லாம் வாலுபீடியாவில் போய் பார்த்துக்கொள். ரொம்ப வருஷம் முன்னாடியே மனிதர்களுக்கு வால் இல்லாமல் போயாச்சு. அவ்வளவுதான்.”

“அப்ப, குரங்கு விஷயம்?

அதுக்கு ஏன் இன்னும் வால் இருக்கு? அது ஏன் இன்னும் மனுஷனாகலேன்னு வாலு கேட்டுச்சே?”

முதலில் குரங்கிலிருந்து நாம் உருவானோம் என்பதே முழு உண்மையில்லை. குரங்குகள், மனிதர்கள் எல்லாரும் அதற்கு முன்னால் இருந்த ஓர் உயிரினத்திலிருந்து உருவானோம் என்பதுதான் சரியான உண்மை. அதிலிருந்து ஒரு கிளை குரங்காகவும் இன்னொரு கிளை மனிதராகவும் உருவாகியிருக்கிறோம். இப்படி இரண்டும் உருவாக அடிப்படையாக இருந்த அந்த உயிரினம் பிறகு அழிந்து போய்விட்டது.

குரங்கு- (மங்க்கி - Monkey) என்று மொத்தமாக சொன்னால் குழப்பம்தான். அதில் நிறைய வகை இருக்கிறது. ஆப்ரிக்கா, ஆசியா இங்கெல்லாம் இருக்கும் குரங்கு வகைக்கு ஓல்ட் வேர்ல்ட் மங்க்கி (Old world monkey) என்று பெயர். தென் அமெரிக்கா மத்திய அமெரிக்கா பகுதிகளில் இருந்தது நியூ வேர்ல்ட் மங்க்கி (New world monkey). இந்த இரண்டு குரங்கும் 40 மில்லியன் வருடங்கள் முன்னால் ஒரே உயிரினத்திலிருந்து தோன்றியவையாம். அப்புறம் 25 மில்லியன் வருடங்களுக்கு முன்னால், ஓல்ட் வேர்ல்ட் மங்க்கி ஒரு பிரிவாகவும், ஏப் (Ape) எனப்படும் மனிதக் குரங்குகள் இன்னொரு பிரிவாகவும் அடுத்து உருவாகியிருக்கின்றன. இந்த 'ஏப்'பில் பல பிரிவுகள்! சிம்பன்சி (Chimpanzee), கிப்பன்ஸ்( Gibbons), உராங் உட்டான் (Urang utan). அப்படி இன்னொரு பிரிவுதான் மனுஷங்க! இப்போது ஆராய்ச்சியில் சிம்பன்சி குரங்கின் 'டி.என்.ஏ'வும் ( D.N.A) மனிதர்களின் 'டி.என்.ஏ'வும் 98.4 சதவிகிதம் ஒரே மாதிரி இருப்பதாக சொல்கிறார்கள். அந்த மீதி 1.6 சதவிகிதத்தில்தான் வால், சாதி, மொழி, மாதிரி வித்தியாசங்கள் எல்லாம் வரும் போலிருக்கிறது!

இப்படி நாம் உருவான கதை, பல லட்சம் வருடங்கள் முன்னால் மெள்ள மெள்ள நடந்திருக்கிறது. இதைத்தான் அறிஞர் டார்வின் பரிணாம வளர்ச்சி என்று சொல்லி இருக்கிறார். ஒவ்வொரு உயிரும் சூழ்நிலைக்கேற்ப தன் தனித்தன்மையை தானே மெள்ள மெள்ளத் தேர்வு செய்துகொள்வதுதான் இயற்கையில் இருக்கும் நியதி என்று டார்வின் கண்டுபிடித்தார். இதன்படி காலப் போக்கில் அதிலிருந்து இன்னொரு புது வகை கூட உருவாக முடியும். இப்படித்தான் உலகத்தில் எல்லா உயிரினங்களும் தோன்றியிருக்கின்றன. ஒரே நேரத்தில் எல்லா உயிரினங்களையும் யாரும் படைத்து இங்கே வைத்துவிடவில்லை என்பதுதான் டார்வின் முடிவு.

இதை அவர் எப்படிக் கண்டுபிடித்தார்?

பீகிள் (Beagle) என்ற ஒரு ஆராய்ச்சிக் கப்பலில் அவர் ஐந்து வருடங்கள் உலகத்தின் பல பகுதிகளுக்குப் போனார். அங்கெல்லாம் இருக்கும் பூச்சிகள், வண்டுகள், கூழாங்கல், மண்ணாங்கட்டி, விலங்குகள், பறவைகள் என்று விதவிதமாக சேகரித்து அவற்றை ஆராய்ச்சி செய்தார். இதையெல்லாம் செய்தபோது அவருக்கு வயது 22 தான்! 30 வயதுக்குள்ளாகவே டார்வின் உலகத்தில் முக்கியமான அறிஞராக கருதப்பட்டார்.

இனி டார்வின் மாதிரி விஞ்ஞானிகளின் படங்களை புத்தகங்களில் வெளியிடுகிறவர்கள், அவர்களுடைய சின்ன வயசுப் படங்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும். (வெளியிட்டுவிட்டோம், மாலு! - ஆசிரியர்).

டார்வின் 12.02.1809 - 19.04.1882

வாலுபீடியா

* ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம். ஆறு சைபர் போடவேண்டும். ஒரு பில்லியன் என்பது ஆயிரம் மில்லியன். அதாவது நூறு கோடி. இதற்கு ஒன்பது சைபர். ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு பில்லியன் பில்லியன். இதற்கு பதினெட்டு சைபர் ! எழுதிப்பாருங்க….

* டார்வின் சிறுவனாக இருந்தபோது பூச்செடிகளைப் பார்த்தார். வெவ்வேறு செடியின் பூவும் வெவ்வேறு வண்ணம். எப்படி இது நடக்கிறது? அந்தந்த கலரில் தண்ணீர் தயார் செய்து செடிக்கு ஊற்றினால் பூவும் அந்தந்த கலரில் பூக்கும் என்று அவர் நினைத்தார். தன் நண்பர்களிடமும் அதை சீரியசாக சொன்னார் ! இப்படித்தான் டார்வினின் அறிவியல் ஆராய்ச்சி மனம் இயங்க ஆரம்பித்தது.

* டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சிக் கருத்தை இங்கிலாந்து கிறித்துவ திருச்சபை ஏற்கவில்லை. அதைக் கண்டித்தது. இன்றும் கூட சில நாடுகளில் அதைப் பாடமாக வைப்பதை மதவாதிகள் எதிர்க்கிறார்கள். ஆனால் டார்வின் இறந்து 200 வருடம் கழித்து இங்கிலாந்து திருச்சபை அவர் கருத்தை நிராகரித்ததற்காக மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது ! டார்வின் ஒரு பாதிரியாக வேண்டும் என்பதுதான் அவருடைய அப்பாவின் ஆசை. ஆனால் அவருக்கு அறிவியலில் ஆர்வம் இருந்ததால், பெரும் தடைகளை மீறி விஞ்ஞானம் படிக்கப் போய்விட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us