தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஞாநி எழுதும் மாலுவின் டைரி (12) - கண்டுபிடி!

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (12) - கண்டுபிடி!

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (12) - கண்டுபிடி!


PUBLISHED ON : ஏப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

பாலுவுக்கு அவ்வப்போது ஒரு பைத்தியம் பிடிக்கும். அதற்கு நான் 'இன்வென்ஷன்மேனியா' என்று பெயர் வைத்திருக்கிறேன். புதிதாக ஏதாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று முயற்சி செய்துகொண்டே இருப்பான். பழைய செல்போன், ரேடியோ, மிக்சி என்று வீட்டில் குப்பையில் தூக்கிப் போட்டதை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு, அதை பார்ட் பார்ட்டாகப் பிரித்து அந்த பாகங்களில் இருந்து புதிதாக எதையாவது செய்ய முயற்சித்துக் கொண்டே இருப்பான்.

இந்த வேலையில் அவனுக்கு முக்கியமான அடியாள் வாலுதான். பாலுவை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கும். பழைய விஞ்ஞானிகள் கதை எதையாவது சொல்லி அவனுக்கு தெம்பு ஊட்டிக் கொண்டே இருக்கும்.

“இந்தக் கம்பியை எப்பிடி நாலா வளைக்கறதுன்னே தெரியலியே” என்று பாலு கையில் ஒரு சின்ன கம்பியை வைத்துக் கொண்டு புலம்பிக் கொண்டிருந்தபோது வாலு சொல்லிற்று. “இப்பிடி என்ன செய்யறதுன்னு தெரியாம 'வால்டர் ஹன்ட் (Walter Hunt)' கம்பியை வளைச்சுகிட்டிருந்தப்பதான் ஒரு பெரிய கண்டுபிடிப்பே உலகத்துக்குக் கிடைச்சுது.”

ஹன்ட் (1796 - 1859) அமெரிக்காவில் நியூயார்க்கில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தார். நிஜமாவே பெரீ………ய்ய குடும்பம். மொத்தம் 14 குழந்தைகள். எல்லாருக்கும் மூத்தவர் ஹன்ட். சின்ன வயசுலருந்தே எதையாவது பாலு மாதிரி குடைஞ்சு ஆராய்ச்சி செய்யறதுதான் ஹன்ட்டோட வழக்கம். வசதி இல்லாதவர். நிறைய கடன் தொல்லை. ஒரு தடவை கடன்காரர் வந்து பணம் கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டே கையில் இருந்த கம்பியை விதவிதமாக வளைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி வளைத்த கம்பிதான் இப்போது நாம் எல்லாரும் நிறையவே பயன்படுத்தும் 'ஊக்கு' என்கிற சேஃப்டி பின். குண்டூசி மாதிரி கையில் குத்தாமல் பத்திரமாக போடக் கூடிய ஊக்கை இன்று பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது.

ஆனால், அந்த ஊக்கைக் கண்டுபிடித்ததில் ஹன்ட்டுக்கு பெரிய லாபம் எதுவும் கிடைக்கவில்லை. கடன் வாங்கியவர் வந்து பணம் கேட்டதும், அந்தப் பணத்துக்கு பதிலாக இந்த ஊக்கை தயாரிக்கும் உரிமையைக் கொடுத்துவிட்டார். வெறும் 15 டாலருக்கு! அந்த உரிமை பெற்ற கம்பெனி லட்சக்கணக்கில் அதில் பணம் சம்பாதித்திருக்கிறது.

ஹன்ட் நிறைய கண்டுபிடித்திருக்கிறார். மசி ஊற்றி எழுதும் பேனாவில் ஒரு வகை, தெரு பெருக்குவதற்கான இயந்திரம், தையல் மெஷின், குதிரை வண்டிக்கு மணி, ஆணி அடிக்கும் மெஷின், கயிறு திரிக்கும் இயந்திரம், நீரில் பனிக்கட்டிகளை உடைத்து படகுகளுக்கு வழி ஏற்படுத்தும் பொறி என்று நிறைய கண்டுபிடித்தார். ஆனால் அது எதையும் தனக்கு பணம் சம்பாதிக்கப் பெரிதாக அவர் பயன்படுத்தவே இல்லை. பலவற்றுக்கு அவர் சட்டப்படி உரிமை கூட வாங்கிக் கொள்ளவில்லை. தையல் மெஷினை நிறைய தயாரித்தால் தையல் வேலை செய்து பிழைக்கும் ஏழைப்பெண்கள் பலருக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதால் ஆரம்பத்தில் தன் மெஷினை அவர் தயாரித்து விற்பதற்கு தயங்கியிருக்கிறார்.

அவர் காலத்தில் மோட்டார் கார்கள் வரவில்லை. எல்லாம் குதிரை வண்டிகள்தான். அந்த வண்டிகளில் ஹார்ன் கிடையாது. வண்டி ஓட்டி ஒரு கையில் குதிரையின் லகானைப் பிடித்துக் கொண்டு மறு கையில் மணி எடுத்து அடித்தால்தான் தெருவில் போகிறவர்கள் வழி விடுவார்கள். அப்படி ஒரு குதிரை வண்டியில் குறுக்கே வந்த சிறுவனை எச்சரிக்க மணி அடிக்காததால், அவன் வண்டியில் சிக்கிக் கொண்டதை ஹன்ட் நேரில் பார்த்தார். இது அவரை மிகவும் பாதித்தது. குதிரை வண்டி ஓட்டி, மணியை கையில் எடுக்க அவசியமில்லாமல், தன் காலை அழுத்தினால் மணி ஒலிப்பது போன்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். இந்தக் கண்டுபிடிப்பை எல்லா குதிரை வண்டிகளிலும் பொருத்தினார்கள். ஹன்ட் இதற்கான உரிமையையும் மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டார்.

“நானும் இந்த மாதிரி ஏதாவது பயனுள்ளதா கண்டுபிடிச்சு அதை இலவசமா நாட்டுக்குக் கொடுக்கணும்னுதான் முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். எதுவும் சீக்கிரமா நடக்க மாட்டேங்குது” என்றான் கவலையுடன் பாலு.

“ரொம்பக் கவலைப்பட்டா உடம்புக்கு நல்லது இல்லே.” என்ற படி உள்ளே வந்தார் ஞாநி மாமா.

“ஏற்கனவே இந்தியாவுல சுமார் பத்து கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருக்கு. நீயும் கவலைப்பட்டு அந்த கூட்டத்துல சேர்ந்துடாதே.” என்றார்.

“ஸ்வீட் நிறைய சாப்பிட்டாதானே நீரிழிவு வரும்? இன்சுலின் உடம்புல குறைஞ்சாதானே ரத்தத்துல சர்க்கரை அதிகமா சேர ஆரம்பிக்கும்? கவலைக்கும் ஷுகருக்கும் என்ன சம்பந்தம்?” என்றேன்.

“கவலைங்கறது மன அழுத்தம். ஸ்ட்ரெஸ். அது அதிகமானா, நம்முடைய அன்றாட ஒழுங்கு எல்லாமே பாதிக்கப்படும். ஒண்ணு நிறைய அளவுக்கு மீறி சாப்பிடுவோம். இல்லாட்டி ரொம்பக் குறைச்சலா சாப்பிடுவோம். கார்ட்டிசால் ஹார்மோன் அதிகமா சுரந்து ரத்தத்துல ஏறினா உடம்புக்கு பாதிப்பு. ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, நீரீழிவு எல்லாமே அடுத்தடுத்து வரும். அதனால் எதுக்கும் கவலைப்படாம இருக்கறது முக்கியம். அப்படி இருந்தா எந்த நோயையும் வெல்லலாம். இந்த வருடம் உலக சுகாதார தின முழக்கமே நீரிழிவை வெல்வோம் என்பதுதான்.”

உடனே வாலு, “நாங்கள் வெல்லுவோம், நாங்கள் வெல்லுவோம்” என்று 'ஹோங்கே காமியாப்' மெட்டில் பாட ஆரம்பித்தது.

“இந்தப் பாட்டை ஆங்கிலத்தில் எழுதியது யார் தெரியுமா?” என்று கேட்டார் மாமா.

“ஓ, தெரியுமே, 'வீ ஷல் ஓவர்கம்' என்ற அந்தப் பாட்டு நிறவெறிக்கு எதிராப் போராடின தலைவர் மார்ட்டின் லூதர் கிங் 1963ல வாஷிங்டன்ல நடத்தின பிரம்மாண்டமான

ஊர்வலத்துல பாடின பாட்டு. அன்னிக்குதான் அவர் எழுதி வெச்ச பேச்சுல இல்லாத புது விஷயமா 'ஐ ஹேவ் எ டிரீம்'னு தன்னோட கனவைப் பத்திப் பேசினார்.”

“எல்லாம் சரி. ஆனா அந்தப் பாட்டை அவர் எழுதல. அதை யார் எழுதினாங்கன்னு இன்னி வரைக்கும் தெரியாது. ஆனா உலகத்துல பலபேர் பல மொழில அதைப் பாடறாங்க.” என்றார் மாமா.

“ஹண்ட் கண்டுபிடிச்சுட்டு ரைட்ஸ் கேக்காம விட்டுட்ட விஷயம் மாதிரியே இருக்கு இதுவும்!” என்றான் பாலு.

“ நீ பெரியவனானதும் இந்த எலக்ட்ரானிக் ஆராய்ச்சியெல்லாம் விட்டுடு பாலு. வேற ஒரு ஆராய்ச்சி பண்ணு. பிறக்கும்போதே ஒரு மனுஷன் பின்னால நிற வெறி சாதி வெறி மதவெறி எதுவும் இல்லாத ஆளா உருவாகறதுக்கு டி.என்.ஏ.வுல ஏதாவது மாத்தி வைக்க முடியுமான்னு கண்டுபிடி.” என்றார் மாமா.

“அதுக்கு வழி கண்டுபிடிச்சாச்சே” என்றது வாலு.

“என்ன?” என்றோம் மூவரும் ஆவலுடன்.

“அன்புதான்!” என்றது வாலு !

வாலுபீடியா 1:

* 347 மில்லியன் - உலகில் நீரிழிவு உள்ள மக்கள் எண்ணிக்கை

* 50% - நீரிழிவால் ஏற்படும் உயிர் இழப்பு அடுத்த 10 ஆண்டுகளில் உயரக்கூடிய விகிதம்.

* 7 - உயிரிழப்பு ஏற்படுத்தும் நோய்களில் 2030ஆம் ஆண்டில், நீரிழிவு வகிக்க இருக்கும் இடம்.

* 1.5 மில்லியன் - நீரிழிவால் 2012ல் ஏற்பட்ட உயிர் இழப்புகள்

* 80% - குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நீரிழிவால் ஏற்படும் உயிர் இழப்பு விகிதம்

வாலுபீடியா 2: மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்ட நினைவு தினம்: ஏப்ரல் 4, 1968

வாலுபீடியா 3:

வீ ஷல் ஓவர்கம் பாட்டு தமிழில்:

நாங்கள் வெல்லுவோம்

நாங்கள் வெல்லுவோம்

நாங்கள் வெல்லுவோம் ஒரு நாள்

ஓஹோ மனதில் நம்பிக்கை பூரண நம்பிக்கை

எனவே நிச்சயம் வெல்லுவோம் ஒரு நாள்.

நாம் ஒன்றாய்ப் போகலாம் இனி ஒன்றாய்ப் போகலாம்.

நாம் நிச்சயம் வெல்லுவோம் ஒரு நாள்.

இன்று அச்சம் இல்லையே நெஞ்சில் அயர்வும் இல்லையே எனவே நிச்சயம் வெல்லுவோம் ஒரு நாள்

நாங்கள் வெல்லுவோம்.

நமக்கு வேண்டாம் வேஷங்கள் இனிமேல் தேவை நேசங்கள் அன்பால் உலகை வெல்லுவோம் ஓர் நாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us