ஞாநி எழுதும் மாலுவின் டைரி (29) - மாலு ஏன் 'எ'ய்ரி 'ட'ழுத வேண்டும்?
ஞாநி எழுதும் மாலுவின் டைரி (29) - மாலு ஏன் 'எ'ய்ரி 'ட'ழுத வேண்டும்?
PUBLISHED ON : ஆக 01, 2016

மாமாவை திடீரென்று மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் செய்தி வந்ததும் உடனே நானும் பாலுவும் வாலுவும் வடபழனி 100 அடி சாலையில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கே போய் மாமாவைப் பார்த்தபோது, “வாங்க திரிமூர்த்திகளா” என்று உற்சாகமாக அழைத்தார். அப்புறம் எதற்கு மருத்துவமனைக்கு வந்தார் என்று குழப்பமாக இருந்தது.
“ஞாநி, இவ்வளவு உற்சாகமாப் பேசறீங்க, எதுக்கு இங்க வந்தீங்க?” என்று வாலு கேட்டது. உடனே மாமா, “இப்போ பரவாயில்லை, நேத்து ராத்திரி நீங்க என்னை பார்த்து இருக்கணும், ராத்திரி முழுக்கத் தூங்காம கட்டிலில எழுந்து, எழுந்து உட்கார்ந்திட்டு இருந்தேன். கை,கால் எல்லாம் ஆடியிருக்கு. பாட்டு எல்லாம் பாடியிருக்கேன். எனக்குப் பாடவே வராது. நிறையப் பேசியிருக்கேன்” உடனே பாலு “நீங்கதான் எப்பவும் நிறையப் பேசுவீங்களே, பாடினதுதான் ஆச்சரியம்” என்றான்.
“இதுவேற மாதிரிப் பேச்சு, தண்ணி அடிச்ச ஆள் மாதிரி ஒரே குழறலாப் பேசிட்டு இருந்தேன்” என்றார் மாமா. அப்போது ஒரு நர்ஸ் மாமாவைப் பார்த்து வணக்கம் சொன்னார். “வணக்கம் சிஸ்டர் ரேஷ்மி, இவங்கள மீட் பண்ணுங்க. இது என் மீஸ் நாலு, இது என் பெவ்யூ நாலு, இவன் ரொம்ப நாளா என் ஃப்ரெண்ட் வாலு“ நர்ஸ் எல்லாருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு வாலுவை மட்டும் கொஞ்சம் ஒரு மாதிரி பார்த்துவிட்டுப் போனார்.
“ஏன் மாமா என்னை மீஸ் நாலு, இவனை பெவ்யூ நாலு, என அறிமுகம் பண்ணீங்க? நாங்க கோட் லாங்குவேஜ் (Code language) பேசற மாதிரி நீங்களும் இதுக்கு வந்துட்டீங்களா” என்று கேட்டேன். அதற்கு மாமா “நேத்து ராத்திரி முழுக்க என்னை அறியாம இந்த சங்கேத மொழியிலதான் பேசியிருக்கேன். ஆனா, என்னோடது கோட் லாங்குவேஜ் இல்லை ஸ்பூனரிசம் (Spoonerism)” என்றார்.
“அப்படின்னா என்ன?” என்றான் பாலு. “வில்லியம் ஸ்பூனர் ஆக்ஸ்போர்டுல புதுக் கல்லூரியோட வார்டனா இருந்தார். அவர் 70 வயசைத் தாண்டியதும், ஒரு வாக்கியத்துல உயிர், மெய், இடைச்சொல், முன்னொட்டு, பின்னொட்டு இருந்தா அதை ஒண்ணோடு ஒண்ணு ஒலியை மாத்தி உச்சரிச்சு அவரை அறியாம, ஒரு தேவாலயத்துல பிரசங்கத்தின் போது பேசியிருக்கார். அவர் மாணவர்கள் இதைக் கேட்டுட்டு இதை மாதிரி தங்களுக்குள்ள நிறைய பேசிக்க ஆரம்பிச்சாங்க. இதை 1921ல ஒரு பத்திரிகை வெளியிட்டு ஸ்பூனரிசம்ன்னு பேர் வைச்சது. அது இப்ப, ஆக்ஸ்ஃபோர்டு மேற்கோள் அகராதியில கூட இடம்பிடிச்சுடுச்சு” என்றார் மாமா.
“அப்ப நீங்க எங்கள நீஸ் மாலு, நெவ்யூ பாலு என சொல்றதை அப்படி மாத்திச் சொல்லியிருக்கீங்க. ராத்திரி பூரா அப்படிப் பேசிட்டு இருந்தீங்களா? வீட்டுல இருக்கறவங்க பாவம் மாமா” என்றேன்.
“ஆமா, இந்த ஸ்பூனரிசம் இலக்கியத்துல, கவிதையில, கதையில, நாவல்ல, அப்பறம் டிவியில, திரைப்படத்துல எல்லாம் பயன்படுத்தி இருக்காங்க. மெல் பூரூக்ஸோட ராபின் ஹூட் படத்துல, டிஸ்னியோட ஸ்னோ ஒயிட் படத்துல பாத்திரங்கள் சிலர் பேசியிருக்காங்க. மேற்கே, இசை உலகத்துல கூட ஸ்பூனரிசம் உண்டு. ஆறேழு குழுக்கள்ல இதைவச்சுப் பாட்டு செஞ்சுருக்காங்க. ஒரு இசைக் கலைஞர், நடிகர் டாம் க்ரூஸ் பேரை ஸ்பூனரிசம் பண்ணி, காம் ட்ரூஸ்ன்னு தன் பெயரை வச்சுக்கிட்டார். இன்னொருத்தர் ஸ்டீவ் வொண்டர் பேரை தனக்கு வீவ் ஸொண்டர்ன்னு ஆக்கிட்டார்” என்றார் மாமா.
“நம்ம தமிழ் சினிமாக்காரங்க இந்தவாரம் 'பட்டம்' படிச்சாங்கன்னா நிச்சயம் இதைப் பயன்படுத்திடுவாங்க” என்றான் பாலு. “இதுலாம் கூட உன் டைரியில எழுதுவியா?” என்றார் மாமா. “நான் டைரி எல்லாம் எழுதவே மாட்டேன். என்னைப் பொருத்தமட்டும் டைரி எழுதறது வேஸ்ட்” என்றான் கிண்டலாக பாலு. உடனே மாமா “ நீ கண்டிப்பா டைரி எழுதணும். என்னைக்கோ ஒருநாள் இவளோட டைரி, ஆன் ஃபிராங்க் டைரி மாதிரி ஏதோ ஒரு முக்கிய வரலாற்றுக் காரணத்துக்காக உலகம் முழுக்க பேசப்படலாம்” என்றார்.
“ஆன் ஃபிராங்க் 16 வயசு ஜெர்மன் பொண்ணுதானே? ஹிட்லர் சித்திரவதை முகாம்ல செத்துப் போன யூதர்கள்ல ஒருத்தி” என்றது வாலு. “ஆமா, அவளேதான். அவளோட குடும்பம் முதல்ல ஜெர்மனியில் இருந்து ரகசியமா தப்பிச்சுப் போய் ஆம்ஸ்டர்டாம்ல வாழ்ந்துட்டு இருந்தாங்க. ஆனா ஹிட்லர் அந்த நாட்டையும் கைப்பற்றி அங்க இருந்த யூதர்களையும் ஜெர்மன் முகாமுக்கு அனுப்பினப்ப அவளும் அதுல மாட்டிக்கிட்டா. ஆனும், கொஞ்சம் குழந்தைகளும் முதல்ல கொல்லப்படல. இவங்கள, அவங்க அம்மாக்களோட கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்பினாங்க. யுத்தத்துல ஹிட்லரை முறியடிச்சு இந்த முகாமை பிரிட்டிஷ் ராணுவம் விடுவிச்ச போது, ஏற்கெனவே முகாமுல பல குழந்தைகள் நச்சுக் காய்ச்சல்ல செத்துப் போயிருந்தாங்க. அதுல, ஆனும் ஒருத்தி” என்றார் மாமா.
“எப்ப அவ டைரி எழுதினா, அதுல என்ன எழுதினா?” என்று கேட்டேன். “ஆனின் குடும்பம் ஆம்ஸ்டர்டாம் போன போது, அங்க அவங்களோட குழந்தைகளை மட்டும் அழைச்சுட்டுப்போய் ஹிட்லர் உளவுப்படைக்கு சிக்காம, 2 வருஷம் மியப்சிஸ் என்ற 33 வயது டச்சு நாட்டு கல்லூரி மாணவி ரகசியமா தங்க ஏற்பாடு செஞ்சு உதவினார். அப்படி ரகசியமா தங்கியிருந்தப்ப நடத்தின வாழ்க்கையை அதுக்கு உதவினவங்க பேரை மட்டும் மாத்திப்போட்டு ஆன் கதை மாதிரி டைரியை எழுதியிருந்தா. இந்த டைரியை, மாணவி மியப் கண்டுபிடிச்சு ஹிட்லர் கொடுமையிலிருந்து தப்பிச்சு வந்த ஆனோட அப்பாகிட்ட கொடுத்தா. குடும்பத்துல மீதி எல்லாரும் செத்துப் போயிட்டாங்க. இந்த டைரியை அவர், ஒரு புத்தக கம்பெனிகிட்ட கொடுத்து வெளியிடவச்சார். அது வெளியானதும் நூரம்பெர்க் விசாரணையில வெளியான ஹிட்லர் கொடுமைகளைவிட இன்னும் முக்கியமானது இதுன்னு ஒரு பத்திரிகை எழுதிச்சு. அப்பறம் இது உலகத்துல 60 மொழிகள்ல மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமா வந்திருக்கு. இதை வச்சு சினிமா எடுத்து இருக்காங்க. நாடகம் நடத்தியிருக்காங்க” என்றார் மாமா.
“தமிழ்ல இது வந்திருக்கா?” என்று கேட்டேன். மாமா, தனக்குத் தெரிந்தவரை இல்லை என்றதும் பாலு, “நான் மொழிபெயர்க்கப் போறேன்” என்றான். “மகிழ்ச்சி. அதுக்கு முதல்ல நீ ஹிட்லரோட வரலாறு படிக்கணும், தவிர மொழிபெயர்ப்பு செய்யறது அசலாகவே தமிழ்ல எழுதின மாதிரி இருக்கணும். அதுக்கு என்ன செய்யணும்ன்னு சொல்றேன்”என்றார் மாமா.
“அத இன்னொரு நாள் சொல்லுங்க. நீங்க ரெஸ்ட் எடுக்கணும்” என்றபடி வந்தார் சிஸ்டர் ரேஷ்மி. “சார், ரொம்பநேரம் பேசிட்டார்” என்று எங்களைப் பார்த்துச் சொன்னார். “உண்மையில மாமாவுக்குப் பேச்சும் ஒரு முக்கியமான மருந்து” என்றேன். “அப்பறம் நாங்க எதுக்கு இருக்கோம்” என்றார் சிஸ்டர். உடனே மாமா”
இது மாற்று மருத்துவம் இல்லை, Additional medicine” என்றார்.
எல்லாரும் புன்னகைத்தோம்.
வாலுபீடியா 1: ஆன் ஃப்ராங்க் ரகசியமாகத் தங்கிய வீடு, இப்போது அவர் பெயரில் மியூசியமாக உள்ளது. வருடத்திற்கு ஒரு லட்சம் பேர் இதை வந்து பார்க்கிறார்கள்.
வாலுபீடியா 2: ஸ்பூனரிசத்தைப் பின்பற்றி டக்ளஸ் ஹாஸ்டாடர் என்ற அமெரிக்க பேராசிரியர் இரண்டு அசைச் சொற்களை (Syllable) உயிரெழுத்து ஒலியை மட்டும் மாற்றி அமைத்து செய்தார். நைஃப்ரிசம், ஃபோர்க்கரிசம் என்று இரண்டு மொழி விளையாட்டுகளை உருவாக்கியிருக்கிறார். எடுத்துக்காட்டு, டியூக் அண்டு டச்சஸ் ஆஃப் விண்ட்சர் என்பதை டக் அண்டு டியூச்சஸ் ஆஃப் விண்ட்சர் என்று மாற்றினார்.
