ஞாநி எழுதும் மாலுவின் டயரி (31) - ஆடுவோமே, பள்ளுபாடுவோமே
ஞாநி எழுதும் மாலுவின் டயரி (31) - ஆடுவோமே, பள்ளுபாடுவோமே
PUBLISHED ON : ஆக 15, 2016

“பாலு, நீ ஆன் ஃபிராங்கோட டயரியை மொழிபெயர்க்க வேண்டியதில்லை. ஏற்கனவே தமிழ்ல வந்தாச்சு” என்றபடி ஞாநி மாமா, கையில் ஒரு புத்தகத்துடன் வந்தார்.
“நண்பர் சுகா இதை அனுப்பி வச்சிருக்காரு. உஷாதரன் மொழிபெயர்ப்புல பொள்ளாச்சி எதிர் பதிப்பகம் வெளியிட்டிருக்காங்க” என்றபடி புத்தகத்தை பாலுவிடம் கொடுத்தார்.
“ச்ச்சே. நான் மொழிபெயர்ப்பாளன் ஆகறது இப்படி ஆரம்பத்துலயே அம்பேல் ஆயிருச்சே. வேற ஏதாவது செய்யணும். பேசாம நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டு இன்னும் பத்து வருஷத்துல ஒலிம்பிக்ஸ்ல கலந்துக்கணும்” என்றான் பாலு. உடனே வாலு சிரித்தது.
“அதுவும் நல்ல ஐடியாதான். மாலு, அஸ்வின் பொன்னப்பா மாதிரி ஷட்டில் ப்ளேயர் ஆகலாம். நீ அபிநவ் பிந்த்ரா மாதிரி ரைஃபிள் சுடலாம். இல்லன்னா அதெலடிக்கா ஓட்டப் பந்தயங்கள்ல கலந்துக்கலாம். ஆனா, இதுக்கெல்லாம் முதல்ல உங்க அப்பா அம்மா ஒத்துக்கணும். டி.வி.யில ஒலிம்பிக் பார்த்தா போதும். டாக்டரா, என்ஜினியரா ஆகற வழியைப் பாருங்கன்னு சொல்லிடுவாங்க” என்றார் மாமா.
ஒலிம்பிக்கில் நாம் ஏன் அதிகமாக மெடல் வாங்குவதில்லை என்று கேட்க இருந்தவள், கேட்கவில்லை. காரணம் புரிய ஆரம்பித்துவிட்டது. பெற்றோர் ஊக்குவிக்காமல் யாரும் முழு நேர விளையாட்டு வீரராகவே முடியாது. என்னைப் போன்ற மிடில் க்ளாஸ் குடும்ப பெற்றோருக்கெல்லாம் படிப்புதான் முக்கியம். பாலு கபடி விளையாடுவதே பல சமயம் திருட்டுத்தனமாகத்தான் விளையாடுகிறான். கை எலும்பில் விரிசல் ஏற்பட்டதும் அதுவும் நின்றுவிட்டது.
“ஏன் மாமா, எந்தப் பெற்றோரும், நீ பி.டி உஷா மாதிரி வரணும்னு குழந்தைங்ககிட்ட சொல்ல மாட்டேங்கறாங்க?” என்று கேட்டேன்.
“தங்களோட குழந்தைங்க நல்லாப் படிச்சு, நாளைக்கு நல்ல வேலைக்குப் போய் நிறைய சம்பாதிச்சு வாழ்க்கையில சுகமா இருக்கணும்னுதான் எல்லா பெற்றோரும் ஆசைப்படுவாங்க. விளையாட்டு வீரரானா அப்படி ஒரு வாழ்க்கை இருக்க முடியாம போயிடும்னு அவங்களுக்குப் பயம் இருக்கு. அதான் காரணம்” என்றார் மாமா.
“ஏன் சச்சின் டெண்டுல்கர்லாம் பெரிய கோடீஸ்வரராதானே இருக்காரு?” என்றான் பாலு. “ இந்தியால கிரிக்கெட் மட்டும்தான் பெரிய பணம் புழங்ககற விளையாட்டா ஆக்கப்பட்டிருக்கு. வேற எந்த விளையாட்டுலயும் அதுல பத்து பர்செண்ட் பணம் கூட கிடையாது” என்றார் மாமா.
“ஆனா ஒலிம்பிக்ல கிரிக்கெட் கிடையாது இல்ல?”. “கிரிக்கெட்டும் இல்லை. நம்ம நாட்டுல அடுத்தபடியா அதிகம் ஆடற செஸ்சும் இல்லை”. “ மீதி விளையாட்டெல்லாம் ஏன் இங்கே அதிகம் கவனிக்கப்படாம இருக்கு?” என்றேன். “அதுக்கு அரசாங்கம், பள்ளிக் கூடம், பெற்றோர்ன்னு எல்லாருமே காரணம். வசதியுள்ளவங்க பெரும்பாலும் நகரத்துல இருக்காங்க. அவங்களுக்கு ஓரளவு விளையாட்டு மைதானம் கருவிகள் எல்லாம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கு. ஆனா அவங்க தங்களோட குழந்தைங்க படிப்புல மட்டும் கவனம் செலுத்தறதைத்தான் விரும்பறாங்க. வசதியில்லாதவங்க அதிகமா கிராமப்புறங்கள்ல இருக்காங்க. அவங்க தங்களோட குழந்தை சுமாரா படிச்சாலும், ஏதாவது விளையாட்டுல திறமையோட இருந்தா, சப்போர்ட் பண்ணுவாங்க. ஆனா அங்கே போதுமான வாய்ப்புகளோ வசதிகளோ கிடையாது. இந்த இடைவெளிதான் முக்கியமான பிரச்னை” என்றார் மாமா.
இதை சரி செய்ய முடியாதா என்று யோசித்தேன். “படிப்பை விட விளையாட்டு நன்றாக வரக்கூடிய மாணவர்களுக்கு எதற்கு அத்தனை பாடங்களையும் கட்டாயப்படுத்தி படிக்க வைக்க வேண்டும்? அடிப்படை கணக்கு, கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் வரலாறு, தமிழ், ஆங்கிலத்தில் நல்ல பயிற்சி கொடுத்தால் போதுமென்று தோன்றியது. பாதி நாள் இதற்குப் போதும். மீதி நேரம் முழுக்க அவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தலாம். அதற்கு தனி மதிப்பெண் கொடுக்கலாம். இப்படியெல்லாம் செய்தால் என்ன?” என்று மாமாவைக் கேட்டேன்.
“செய்யலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமப் பகுதியை எடுத்துக்கொண்டு அங்கே விளையாட்டு வீரர்களான மாணவர்கள் தங்கிப் படிக்க தனிப் பள்ளியே அமைக்கலாம். அரசாங்கம் நினைத்தால் எளிதாகச் செய்யமுடியும். அப்படிப்பட்ட வாய்ப்புகள் உருவாகும்போது, இப்போது வேறு திறமை உள்ளவர்களுக்கு படிப்பும் சுமையாகி, வேறு திறமையையும் வளர்த்துக் கொள்ள முடியாமல் வீணாவதை நிச்சயம் தடுக்க முடியும்” என்றார் மாமா.
“நான் அமைச்சரானதும் நிச்சயம் இதற்கு ஏற்பாடு செய்வேன்” என்றான் பாலு. எனக்கு ஒரே சிரிப்பு. பாலு நாளைக்கு என்னதான் ஆகப் போகிறான் என்றே புரியவில்லை. ஒவ்வொரு புது விஷயம் கேட்டதும் அதில் ஈடுபடும் ஆசை அவனுக்கு வந்துவிடும்.
“பாலு சொல்வது சரி. இப்படி யோசிக்கிறவர்கள் எல்லாரும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால்தான், இந்த மாதிரி சில மாற்றங்களையாவது செய்யமுடியும். இப்ப நடக்கற அரசியல்ல, சாந்தி மாதிரி வருடக் கணக்காப் போராடிகிட்டுதான் இருக்க வேண்டியிருக்கு” என்றார் மாமா.
“இதுக்குத்தான் எங்கப்பா அடிக்கடி சுதந்திரம் வாங்கினதே தப்புன்னு சொல்லிகிட்டிருக்காரு. தாத்தாவுக்கும் அவருக்கும் இப்ப கூட சண்டை. தாத்தா ஒவ்வொரு வருஷமும் சுதந்திர தினத்தன்னிக்கு மொட்டை மாடில கம்பு நட்டு கொடி ஏத்துவாரு. இப்ப உடம்பு முடியல. அப்பாவை செஞ்சு தர சொன்னார். அப்பா முணுமுணுத்துகிட்டிருக்காரு” என்றான் பாலு.
“நீ தாத்தாவுக்கு ஹெல்ப் பண்ணவேண்டியதுதானே” என்ற மாமா, “பிரச்னை சுதந்திரம் வாங்கினதுல இல்ல. அந்த சுதந்திரத்தோட சிறப்பை எல்லாரும் உணராம இருக்கறதுதான்.”
“உண்மையில சுதந்திரம்னா என்ன மாமா?” என்றேன்.
“நாம் விரும்பறதை இன்னொருத்தருக்குப் பாதிப்பு இல்லாம செய்ற உரிமை சுதந்திரம். அப்படி செய்றப்ப அதனால ஏற்படற எல்லா விளைவுகளுக்கும் நாமே பொறுப்புன்னு தெரிஞ்சு செய்றதுதான் சுதந்திரம். இது வீட்டுக்கும் பொருந்தும். நாட்டுக்கும் பொருந்தும்.” என்றார் மாமா.
“அமெரிக்கால சுதந்திர தினம்னா பெரிய பண்டிகை மாதிரி எல்லா ஜனங்களும் கொண்டாடறாங்க. இங்கே ஏன் அப்படி இல்லை?” என்று கேட்டேன். “இந்த சுதந்திரத்துனால என்னோட அன்றாட வாழ்க்கையில் எனக்கு என்னல்லாம் நல்லது நடந்திருக்குன்னு ஒவ்வொருத்தரும் யோசிச்சு உணர்ந்தால்தான் அதைக் கொண்டாடற ஆசையும் வரும். அப்படி யோசிக்கற நிலைமையில பல பேர் இல்ல. இன்னும் கொஞ்ச பேர் சுதந்திரம்கறது, தாங்க நினைக்கறபடி தப்பு பண்ண, லஞ்சம் வாங்க, ஏமாத்த கிடைச்ச உரிமைன்னு நினைச்சுகிட்டிருக்காங்க. இந்த ரெண்டையும் நீங்க பெரியவங்களா ஆகுறபோதாவது மாத்தினா, நம்ம நாட்டுலயும் சுதந்திர தினம் அமெரிக்காவை விட பிரமாதமா கொண்டாடற நாள் வரும்” என்றார் மாமா.
“நாம இப்பவே பிரமாதமாக் கொண்டாடலாமே!” என்றபடி வாலு
மூவர்ணக் கொடிகளோடு வந்தது. எல்லாரும் ஆளுக்கொன்று வாங்கிக் கொண்டு புறப்பட்டோம்.
வாலுபீடியா 1:
70 வருட சாதனைகள்:
சராசரி ஆயுட்காலம்: 32 வயது 1947ல்.
இப்போது 65 வயது.
எழுத்தறிவு: 16% - 1951ல்.
இப்போது 76 %
உலகத்திலேயே அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் நாடுகளில் 8ஆவது இடம். இன்டர்நெட் பயன்பாட்டில் 5ஆவது இடம்.
வாலுபீடியா 2
ஒலிம்பிக் போட்டிகளில் 1920 முதல் இடைவிடாமல் பங்கேற்று வருகிறது இந்தியா. இந்த வருடம்தான் மிக அதிக வீரர்களை அனுப்பியது. மொத்தம் 120 பேர்.
