PUBLISHED ON : ஜூலை 04, 2016

'மா' என்றால் மா மரத்தையும் பெரிய என்பதன் அர்த்தத்தையும் குறிக்கும். கூடவே, ஒரு குறிப்பிட்ட விலங்கின் பெயரையும் குறிக்கும்! அந்த விலங்கு யானை. காட்டிலும் நாட்டிலும் வசிக்கும் யானைக்குப் பழங்காலத்தில் நிறைய்ய்ய்ய்ய.... பெயர்கள் இருந்தன!
அத்தி, அறுகு, ஆம்பல், இபம், இம்மடி, உம்பல், உவா, எறும்பி, ஒருத்தல், ஓங்கல், கடிவை, கயம், கரிணி, கரேணு, களபம், கள்வன், கறையடி, குஞ்சரம், கும்பி, கைப்புலி, சிந்துரம், சுண்டாலி, சூகை, தந்தாவளம், தந்தி, தாமம், திண்டி, தும்பி, தூங்கல், தெள்ளி, தோல் நாகம், நால்வாய், நூழில்... உஸ்ஸ்ஸ்... மூச்சு வாங்குதா, இருங்க... இன்னும் இருக்கு!
பகடு, புகர் முகம், புழைக்கை, பூட்கை, பெருமா, பொங்கடி, போதகம், வயமா, வல்விலங்கு, வழுவை, வாரணம்,விரமலி, வேதண்டம், உம்பல், ஒருத்தல், தகர், பகடு, மதகயம், மதமொய், மதாவளம், மந்தமா, மருண்மா, மறமலி, மாதிரம், மொய், கைம்மா.
இத்தனை பெயர்கள் கொண்ட யானை சிறப்புகள் பல பெற்றதாய் இருந்தது! அரசர்கள் காலத்தில் போருக்குப் பயன்பட்டது. அதன் பெயரில் ஒரு படையே இருந்தது. புலவர்களுக்குப் பரிசாகவும் தரப்பட்டிருக்கிறது. 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழி அதன் மதிப்பைக் காட்டுகிறது.
பெண் யானையை அத்தினி, கரிணி, பிடி, வடவை என்று குறிப்பிடுவார்கள்.
அதன் கன்றுகளை கயந்தலை, கயமுனி, முனி, துடியடி போதகம், கரிசரம், வனசரம், குழவி என்றும் சொல்வார்கள்.
கரிய நிறம் கொண்ட யானை வேழம், கரி, களிறு என்றும் அழைக்கப்படுகிறது. அதைப் பற்றி இன்னும் சில தகவல்கள்...
யானை நிற்கும் இடத்திற்கு (கூடம்) வாரி, ஆலயம், ஒளி என்று பெயர். அது திரியும் காடு கரிகாடு.
யானைக் கூட்டத்தை கடகம், கடம், யூதம் என்று அழைத்தார்கள். அதனுடைய கொம்பு, எயிறு, கோடு, தந்தம், கரீரம். யானை உறங்கும் இடம் சேவகம். யானைச்செல்லும் வழி தண்டம். யானைச் செவி கன்னம், தாலம் என்று சொல்லப்பட்டது. யானை நோய் பாகலம். யானைக்கு கட்டும் மணியின் பெயர் கண்டை. யானை மதம் பிடிப்பது கடம், கடாரம், தானம் என்றார்கள். யானை முதுகை 'மஞ்சு' என்று சொன்னார்கள். யானையின் முன் கால் காத்திரம். பின் கால் அபரம். யானை உண்ணும் உணவு அங்கதம். யானை வால் தாலவட்டம், வாலதி. யானைத் துதிக்கை நீர் விலாழி என்று சொல்லப்பட்டது.
இவ்வளவு பெரிய யானைக்கு, 'யானை' என்று இரண்டெழுத்தில் பெயர் இருக்கும்போதே சந்தேகம் வந்தது. பெரிய விலங்கிற்கு எப்படி சிறிய பெயர் வைத்திருப்பர்கள் என்று. இதைப் படித்த பிறகு புரிகிறது யானையின் எடைக்குச் சமமாக இருக்கும் அளவிற்கு எத்தனை பெயர்கள்!
