
அதிராம்பட்டினம் ஒரு சிற்றூர்
அலைகடலோரம் நிற்கும் ஊர்
குதிரைகள் உலவிய காலம்அது
குளுகுளு மரங்கள் ஆடினவாம்
மரங்கள் சூழ்ந்த திடல்ஒன்று
மறுநாள் சந்தை கூடும்என்று
கறிகள் காய்கனி மூட்டைகள்
பரிமேல் வந்து குவிந்ததன்று
மிளகாய்ப் பழங்கள் சிலமூட்டை
மிளகு, லவங்கம் மசால்பட்டை
இளநீர், தலையில் ஓர்ஓட்டை!
இளைப்பை ஆற்றக் குவிந்தனவாம்
உருளைக் கிழங்கு உருள்கிறது
சர்க்கரை வள்ளி சிரிக்கிறது
கருணைக் கிழங்கின் அன்புக்கு
சேனை, படையுடன் வருகிறது
ரத்தச் சிவப்புத் தக்காளி
கோபம் இல்லை, இனிக்கிறது
பித்தம் தீர்க்கும் இஞ்சியுமே
பிறிதொரு இடத்தில் கிடக்கிறது
வாழச் சொல்லி வலியுறுத்தும்
வாழைக் காய்ஒரு பக்கத்தில்
ஏழைக்கும் ஆப்பிள் சத்துதர
நெல்லிக் காயும் கிட்டத்தில்
ஈரம் இருந்தால் மீன்என்பார்
காய்ந்தால் பாவம், கருவாடு
இரண்டும் பக்கம் பக்கத்தில்
எதையோ உணர்த்தும் எண்ணத்தில்
சேராப் பொருட்கள் சேர்ந்தாலே
விந்தை என்பார் பொதுவாக
இங்கே பொருட்கள் சேர்ந்தஇடம்
சந்தை என்போம் சரியாக!
ரமேச்சு

