PUBLISHED ON : செப் 12, 2016

சங்கர்: முன்னா... நீ யோசிச்சுக்கிட்டு இருக்கிறதப் பாத்தா என்னமோ பெருசா நடந்துருக்குபோல.
முன்னா: பெருசா ஒண்ணும் இல்லடா. நம்ம கணக்கு வாத்தியாருக்கும் எனக்கும் பிரச்னை.
ச: ஓ...! அவர்கூட என்னடா பிரச்னை?
மு: என்கிட்ட ஒரு கணக்குக் கேட்டாரு. கரெக்ட்டா நான் பதில் சொன்னதுக்குத் தலையில கொட்டிட்டாரு.
ச: கரெக்ட்டா சொன்னதுக்குக் கொட்டினாரா? அப்படின்னா பெரிய பிரச்னைதான். என்ன கேள்விடா அது?
மு: “உன்கிட்ட இருக்குற 4 ஆப்பிள் பழங்களப் பாதியாப் பிரிச்சு உன் நண்பனுக்குக் கொடுத்தா மீதம் உன்னிடம் எத்தனை பழங்கள் இருக்கும்?”ன்னு ஒரு கேள்வி கேட்டாரு.
ச: சரி. அதுக்கு நீ என்ன பதில் சொன்ன?
மு: “மீதம் நாலு பழம் இருக்கும்”ன்னு சொன்னேன்.
ச: அதெப்படி 4 பழம் இருக்கும்?
மு: சொல்றேன் கேளு. “உனக்கு, கணக்குத் தெரியுமா, தெரியாதா?”ன்னு அவர் கோவமாக் கேட்க, “ஸார் உங்களுக்கு என்னயப் பத்தித் தெரியுமா, தெரியாதா?”ன்னு நான் கேட்க, நறுக்குன்னு கொட்டிட்டாரு.
ச: உன்கிட்டபோய் திங்குற கணக்குக் கேட்டாரு பாரு, அவர்தான் பாவம். நீ சாப்பிடுறதெல்லாம் காந்தி கணக்குடா.
மு: நான் ஏமாத்தி சாப்பிடுறதைச் சொல்றியா? இல்ல, காந்தித் தாத்தா கணக்கு இன்னும் இருக்கா?
ச: அது ஒரு கதை. காந்தித் தாத்தா உப்பு சத்தியாகிரகம் போனப்போ, வியாபாரிகள் எல்லாருமே அவருக்கு ஆதரவு கொடுத்தாங்க.
மு: வெறும் ஆதரவு மட்டுமா கொடுத்தாங்க? அத வச்சு என்ன பண்றது?
ச: “எங்களால இந்தப் போராட்டத்துல கலந்துக்க முடியாது. ஆனா, உங்க தொண்டர்கள் வாங்குற பொருட்களுக்குப் பணம் ஏதும் நாங்க வாங்க மாட்டோம்”ன்னு வியாபாரிகள் சொல்லிட்டாங்க.
மு: அப்படின்னா ஊர்ல இருக்குற எல்லாருமே கடை முன்னாடி நின்னுருப்பாங்களே!
ச: உன்னமாதிரி புத்திசாலிகள சமாளிக்கத்தான், 'காந்தி கணக்கு' அப்படிங்குற கோட்வேர்டு சொல்றவங்ககிட்ட மட்டும் பணம் வாங்கல அந்த வியாபாரிகள்!
மு: 'சங்கர் கணக்கு'ன்னு ஒண்ணு ஆரம்பிச்சு, நீ எனக்கு ஆதரவு கொடுத்தா என்ன?!

