PUBLISHED ON : ஜூலை 11, 2016

“மெளவல் தெரியுமா?” என்று கேட்டால் நம்மில் சிலர் விழிப்போம். அது என்ன பூ? எப்படி இருக்கும்? நம் தோட்டத்திலேயும், சாலையோர மரங்களிலும் மலர்ந்து சிரிக்கும் மரமல்லிக்குத்தான் 'மெளவல்' என்று பெயர் . இந்தப் பூவிற்கு 'வஞ்சகம்' என்றொரு பெயரும் இருக்கிறது.
இப்பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். மிகுந்த வாசனை உடையது. உதிரும் பூக்களை, குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாய் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உண்டு. பூவின் காம்பை சிறிது கிள்ளி எறிந்து விட்டு வாயில் வைத்து ஊதினால் குட்டி நாதஸ்வரம் போல் இசை வரும். பன்னீர்ப்பூக்கள் என்ற பெயரும் இதற்கு உண்டு.
தெற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இந்தியன் கார்க் ட்ரீ (Indian Cork Tree) என்று ஆங்கிலத்திலும், ஆகாஷ் மல்லிகே (Akash Mallige) என்று கன்னடத்திலும், மினி ஷாமேலி (Mini Chameli) என்று இந்தியிலும், ஆகாஷ் மல்லீ (Akash Mallee) என்று ஒரிய மொழியிலும் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் மில்லிங்டோனியா ஹார்டென்சிஸ் (Millingtonia hortensis).
இனி, சாலை ஓரத்தில் மரமல்லியைப் பார்த்தால் 'மெளவல்' என்ற சொல் நினைவுக்கு வரும்தானே!
