PUBLISHED ON : ஜூலை 11, 2016

முன்னா: “அரம் செய்ய விரும்பு... ஆறாவது சினம்...”
ஷங்கர்: “டேய் முன்னா… என்னடா சொல்லிட்டு இருக்க?”
முன்னா: “ஆத்திசூடியை நாளைக்கு ஒப்பிக்கணும்டா… அதான் மனப்பாடம் பண்ணிட்டு இருக்கேன்.”
ஷங்கர்: “அடேய்… உன்னை அரத்தால அடிக்க... அது 'அறம் செய விரும்பு, ஆறுவது சினம்… ஏண்டா இப்படித் தமிழைக் கொலை பண்றே…”
முன்னா: “ஓ... அறம்னு சொல்லணுமா? அரம்னு சொன்னா இப்ப என்ன கெட்டுப்போச்சு… வந்துட்டான் பெரிய இவனாட்டம்...”
ஷங்கர்: “அர்த்தமே மாறிடும்டா... அறம்னா ஒழுக்கம், நீதின்னு அர்த்தம். அரம்னா இரும்பைத் தேய்க்கற கருவி. நீ படிக்கிற ஆத்திசூடி, ஔவையார் எழுதின நீதி நூல்.”
முன்னா: “கோர்ட்லதானே நீதி சொல்வாங்க?”
ஷங்கர்: “சரிதான். நீதிமன்றங்கள்தான் வழக்குகளுக்கான நீதியை வழங்குது. சிவில், குற்றவியல்னு ரெண்டு வகையான வழக்குகள் இருக்கு.”
முன்னா: “நீ ஒரு அறிவுச் சுரங்கம்டா…”
ஷங்கர்: “விஷயத்தைக் கேளு… ஜூலை 17ஆம் தேதி 'சர்வதேச உலக நீதி தினம்' (World Day for International Justice). அதைப்பத்திதான் சொல்ல வந்தேன்.”
முன்னா: “அது ஏன் 'சர்வதேச உலக நீதி தினம்'னு தனியா ஒண்ணு?”
ஷங்கர்: “முழுசாக் கேளு! சர்வதேசக் குற்றச் செயல்களை விசாரிக்க 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்' செயல்படுது. இது நெதர்லாந்தில இருக்கற ஹேக் (Hague) நகரில் இருக்கு.”
முன்னா: “அட, அப்படியொரு நீதிமன்றம் இருக்கா?.”
ஷங்கர்: “ஆமாம்டா… பெண்களுக்கு எதிரான வன்முறைகள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற சர்வதேச குற்றச் செயல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தறதுக்காக 'சர்வதேச உலக நீதி தினம்' 2010ல இருந்து கொண்டாடப்படுது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கிய ஒப்பந்தத்தோட அடிப்படையில இந்த தினம் ஏற்படுத்தப்பட்டது.”
முன்னா: “உலக நீதி தினம் உருவாக்கப்பட்டது ஓகே. குற்றங்கள் உருவாகாம இருந்தா டபுள் ஓகே...
