PUBLISHED ON : ஜூன் 25, 2018

அன்று நான் பள்ளிக்கு மிகவும் சீக்கிரமே வந்துவிட்டேன். கணித ஆசிரியருடைய ஸ்பெஷல் கிளாஸ். காலையில் படித்தால்தான் கணிதம் நன்கு விளங்கும் என்பது அவரது எண்ணம். எந்தச் சந்தடியும் இல்லாமல், வகுப்புகள் அமைதியாக இருக்கும்போது பாடம் படிக்கவேண்டுமாம். அதனால், எங்களையெல்லாம் சீக்கிரம் வரச் சொல்லியிருந்தார்.
பள்ளிக்குள் நுழைந்தால், உமா மிஸ். சுற்றிலும் அவரது வகுப்பு மாணவர்கள், மாணவிகள். ஓடுவதும், ஆடுவதும், கோ-கோ விளையாடுவதும், ஸ்கிப்பிங் செய்வதும்… என்று கும்பல் கும்பலாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
நான் நின்றுவிட்டேன். வகுப்புக்கே போகத் தோன்றவில்லை. ஒரே கொண்டாட்டம். பயங்கர உற்சாகம். ஒருவரை ஒருவர் துரத்தித் துரத்திப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். பந்துகளை வீசியடித்து 'கேட்ச்' விளையாட்டு. உமா மிஸ் ஒட்டுமொத்தமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, பல புதிய பெண்கள், பல விளையாட்டுகளில் உதவியபடி. அவர்கள் எல்லாம், அப்பிள்ளைகளின் அம்மாக்களாக இருக்க வேண்டும்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். வேர்க்க, விறுவிறுக்க அப்படியொரு விளையாட்டு. சிரிப்பு. உரத்த கத்தல், பேச்சு. விசில். பள்ளிக்கூடத்தின் மைதானத்துக்கே கைகால் முளைத்துவிட்டதோ என்று தோன்றியது.
இவ்வளவு காலையில் இவர்களையெல்லாம் யார் கூப்பிட்டிருப்பார்கள்? நேரே வகுப்புகளுக்குப் போகாமல் யார் விளையாட அனுமதித்தார்கள்? உமா மிஸ்ஸைத் தவிர வேறு யாரும் அங்கே தென்படவில்லை. இதெல்லாம் அவருடைய திட்டமாகத்தான் இருக்கவேண்டும்.
இவ்வளவு ஆட்டம் போட்டுவிட்டு வகுப்பறைக்குப் போனால், சோர்ந்து போகமாட்டார்களோ? உடம்பெல்லாம் வலியெடுக்காதோ? வியர்க்காதோ? எப்படிப் படிக்க முடியும்?
மதியம் உணவு இடைவேளையின்போது, இந்தக் கேள்விகளை உமா மிஸ்ஸிடமே கேட்டேன்.
“நிச்சயம் வலிக்காது. மனசும் உடம்பும் மூளையும் புத்துணர்ச்சியோட இருக்கும். இன்னும் சொல்லப் போனால், இதனால, மாணவர்களோட கவனம் குவியுது, ஆர்வம் பெருகுது, வளர்ச்சி அதிகமாகுதுன்னு பல ஆய்வுகள் சொல்லுது. இதுக்குப் பெயரே 'பாக்ஸ்' (BOKS). அதாவது பில்ட் அவர் கிட்ஸ் சக்சஸ் (Build Our Kids' Success - BOKS) அப்படின்னு பேரு…”
2009இல் மசாசூசெட்ஸில் உள்ள நான்கு தாய்மார்களின் ஆர்வத்தில் உருவானது 'பாக்ஸ்'. சிறுவர்களுக்குப் போதிய உடற்பயிற்சி இல்லை, அதனால், அவர்கள் எல்லோரும் உடற்பருமனால் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஆரோக்கிய உடலே, ஆரோக்கிய மனத்துக்கு அடிப்படை. அது இல்லாமல் பல மாணவர்கள் அவதிப்படுகிறார்கள். இதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் 'பாக்ஸ்'.
மேலும், பள்ளிக்குச் செல்வதற்கான அடிப்படையே 'மகிழ்ச்சி'தான். பெரும்பாலான மாணவர்களுக்குப் பள்ளி என்றாலே பெரும்சுமை. அங்கே மகிழ்ச்சிக்கு இடமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
இதையெல்லாம் எப்படி மாற்றுவது என்று யோசித்த அம்மாக்களின் சிந்தனையில் உதித்தது தான் 'பாக்ஸ்.' அதாவது, பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பே, மாணவர்கள் அனைவரையும் ஓடியாடி விளையாட விட்டு, அவர்களைக் கொண்டாட அனுமதித்தால், எண்ணற்ற நன்மைகள் விளையும் என்று கருதினார், 'பாக்ஸ்'ஸைத் தொடங்கிய கேத்லீன் டுல்லீ (Kathleen Tullie).
அவரது எண்ணம் பலித்தது. இன்று உலகெங்கும் சுமார் 3,000 பள்ளிகளில் 'பாக்ஸ்' பயிற்சிமுறை நடைமுறையில் உள்ளது. பல்வேறு மருத்துவ ஆய்வுகள், இதனால் ஏற்பட்டுள்ள பலன்களைப் பட்டியலிட்டுள்ளன.
“இதை 12 வாரங்கள் பின்பற்றணும். வாரத்துக்கு மூன்று நாள் விளையாட அனுமதிச்சா போதும். ரெண்டு நாள்கூட பரவாயில்லை. மூன்று நாட்கள் விளையாடிவிட்டு வகுப்பறைக்குப்போன மாணவர்களுடைய உற்சாகத்துக்கும் புத்துணர்ச்சிக்கும் அளவே இல்லை. சோர்வோ, துக்கமோ, மனக்கவலையோ அவர்களுக்கு அறவே இருப்பதில்லை.
பல மாணவர்களுக்கு விடிகாலையில் எழுந்துகொள்ளும் பழக்கம் ஏற்படும். ஸ்கூலுக்குப் போகணும்ங்கற ஆசை ஏற்படும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வாயைத் திறந்து சொல்லவும், அதற்கு உதவிகள் கேட்கவும் தோணும். நம்பிக்கை நல்லா வளரும்.
எல்லாத்துக்கும் மேலே, மகிழ்ச்சி தான் இதுல முக்கியமானது. விளையாட்டு அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்குது. அது போதாதா?” என்று விளக்கினார் உமா மிஸ்.
படிப்பு, மார்க், போட்டி என்று எங்களையெல்லாம் போட்டு வதைப்பதன் பலன், விளையாட்டு எப்படி இருக்கும்னே மறந்துபோச்சு. எல்லா விளையாட்டும் கம்ப்யூட்டரிலும் அலைபேசியிலும்தான்.
அதை மாற்றி, மீண்டும் மைதானத்தில் ஓடி, ஆடி விளையாட ஆரம்பிச்சா, ஏன் குதூகலம் வராது? இனி நானும் என் நண்பர்களோடு காலையிலேயே பள்ளிக்கு வந்து விளையாடவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
