PUBLISHED ON : ஜூலை 24, 2023
First person - 'தன்மை'
ஆங்கிலத்தில் First person என்பது, தமிழில் 'தன்மை' எனப்படுவது உங்களுக்குத் தெரியும்.
நான், யான், நாம், யாம், எனது, எமது, நமது போன்றவை தன்மைக்கு உரியன.
முன்னால் இருப்பதைக் குறிப்பது, 'முன்னிலை' (Second person).
நீ, நீர், நீவிர், உன், உனது, உமது, நுமது போன்றவை முன்னிலைக்கு உரியன.
நானும் இல்லாமல், எதிரில் நிற்கும் நீங்களும் இல்லாமல், மூன்றாம் இடத்தில் இருப்பவர், அல்லது இருப்பவை (Third person) 'படர்க்கை' எனப்படும்.
அவன், அவள், அவர், கம்பர், ஔவையார், தான், தாம், தமது, தங்கள் போன்றவை படர்க்கைக்கு உரியன.
தங்கள், தாங்கள் என்பன போன்ற சில படர்க்கைச் சொற்கள், மரியாதைக்காக முன்னிலையில் வருவதும் உண்டு.
பெயரைச் சொல்லிப் பேசுவது படர்க்கை என்றாலும், முன்னால் உள்ள நபர்களை நீ என்றோ, நீங்கள் என்றோ குறிப்பிடாமல், தாங்கள் என்று கூறுவதுபோல, ஆசிரியர் என்றோ, அதிகாரி என்றோ பதவிப் பெயர்களால் குறிப்பிடுவதும் மரபுதான்.
