PUBLISHED ON : டிச 19, 2016
வர்தா புயல் குறித்த தகவலை சரியாக கொடுத்து, பெரும் சேதத்தை தடுக்க உதவிய, இஸ்ரோ செயற்கைக்கோள் பற்றி, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கக்கடலில் உருவான வர்தா புயல், கடந்த திங்களன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், கடும் சேதத்தை ஏற்படுத்தியது. முன்கூட்டியே புயல் குறித்த எச்சரிக்கை விடப்பட்டதால், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. புயல் மழைக்கு முன், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டனர். இதற்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இஸ்ரோ ஏவிய இன்சாட் 3 டிஆர் (INSAT-3DR), ஸ்காட்சேட் -1 (SCATSAT-1) ஆகிய நவீன செயற்கைக்கோள்கள் அளித்த தகவல்கள், பெரும் உதவியாக அமைந்தன. பருவநிலையை கணிக்கும் செயற்கைக்கோளான இன்சாட்
3 டிஆர், கடந்த செப்டம்பர் 8ம் தேதி ஏவப்பட்டது. ஸ்காட்சாட் -1 செயற்கைக்கோள், கடந்த செப்டம்பர் 26ம் தேதி ஏவப்பட்டது. இவை, புயல் நகர்ந்து சென்ற திசை குறித்து, துல்லியமாக தகவல் அளித்தததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
