PUBLISHED ON : டிச 11, 2017

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 1911ஆம் ஆண்டு எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது இந்த மம்மி. அப்போதே இதுவும் இதனுடன் கண்டுபிடிக்கப்பட்ட பிற மம்மிக்களும், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திற்கு கொண்டுவரப்பட்டு, கண்காட்சியிலும் வைக்கப்பட்டன.
வழக்கமான மம்மிகள் போன்று இது இல்லை. பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடலுடன் அச்சிறுமியின் முகம் வரையப்பட்ட படம் இதில் வைக்கப்பட்டுள்ளது. இப்படிப் படங்களுடன் இருக்கும் 100 மம்மிக்களில் இதுவும் ஒன்று என்கின்றனர் தற்போதைய ஆய்வாளர்கள். இந்த மம்மியில் இருக்கும் சிறுமியின் உடல், சுமார் 1900 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சி.டி.ஸ்கேன் போன்ற உயர்தன்மைகொண்ட எக்ஸ்ரே மூலம் மம்மியை ஆய்வு செய்வது இதுவே முதல்முறை.
மலேரியா, அம்மை போன்ற நோய்களின் காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அந்த மம்மியின் எலும்பு திசு மற்றும் பற்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போது, இன்னும் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றும் நார்த்வெஸ்டனின் ஆய்வுப் பேராசிரியர் மார்க் வால்டன் தெரிவித்துள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், பல்வேறு நோய்த்தொற்று காரணமாக பல குழந்தைகள் 10 வயதைத் தாண்டி வாழவில்லை. அப்படி இறந்த குழந்தைகளில் இது ஒன்றாக இருக்கலாம் என்று அதே பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் டெர்பஸ்ட்ரா தெரிவித்துள்ளார்.
