PUBLISHED ON : அக் 18, 2016

'என் வாழ்க்கைதான் என் செய்தி” (my life is my messsage) என்று சொன்னவர் காந்தி. அவர் வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கும் சில செய்திகள் இவை.
காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்ப முடிவு செய்திருந்தார். அவர் வழக்கறிஞர் என்பதால், 'நேட்டால்' நகரில் உள்ள வழக்கறிஞர்கள், 'பிரிவு உபசார விழா' நடத்தினார்கள். நிறைய பரிசு பொருட்களை கொடுத்தார்கள். காந்தி மறுப்பு சொல்லாமல் வீட்டிற்கு எடுத்து வந்தார்.
அதில், வைர மோதிரம், தங்க நெக்லஸ், வைர ஊசி, வைர கை கடிகாரம் ஆகியவை இருந்தன. நேட்டால் இந்திய காங்கிரசை சேர்ந்த பார்ஸி ருஸ்தம்ஜி என்பவரை வீட்டிற்கு வரவழைத்தார் காந்தி. அந்தப் பரிசுப் பொருட்களை எடுத்துப்போகச் சொன்னார். அவற்றை அங்குள்ள இந்திய காங்கிரசுக்கான நிதியாக, வைத்துக்கொள்ளுமாறு கூறினார்.
காந்தியின் முடிவு, அவரது மனைவி கஸ்தூரி பாய்க்குப் பிடிக்கவில்லை. ”அந்தப் பொருட்கள் எனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என் பிள்ளைகளுக்கு அது உதவும்” என்றார்.
காந்தி அதற்கு மறுப்பு தெரிவித்தார். காந்தியைப் போலவே அவரது பிள்ளைகளான பதிமூன்று வயது ஹரிலாலும், ஒன்பது வயதான மணிலாலும் மறுப்புத் தெரிவித்தனர். நடந்ததைப் பார்த்து, ருஸ்தம்ஜி அந்தப் பொருட்களை எடுத்துப்போக மறுத்தார். ஆனால் காந்திஜி, வற்புறுத்தி அதை கொடுத்தனுப்பினார்.
தொழு நோயாளி ஒருவர், காந்தியிடம் வந்து பிச்சை கேட்டார். உடனே காந்தி, அந்த நோயாளியை அழைத்து, அவருடைய புண்ணை சுத்தம் செய்து மருந்திட்டு, சில நாட்கள் வீட்டிலேயே தங்க வைத்தார். அவருடைய புண் கொஞ்சம் சரியானதும் அவரை அனுப்பி வைத்தார். ஏழைகளுக்காக ஒரு மருத்துவமனையை நிறுவினார். டாக்டர் பூத் நோயாளிகளைக் கவனித்து, நோய்க்கு தகுந்தபடி மருந்துகள் எழுதிக் கொடுப்பார். காந்திஜி, அதன்படி மருந்துகளைக் கலக்கித் தரும் வேலையை செய்தார்.
* தன்னுடைய துணிகளைத் தானே துவைத்துக் கொள்வார். சில நேரம் தன் தலைமுடியை தானே வெட்டிக் கொள்ளவும் செய்தார்.
* காந்திஜி சபர்மதி ஆசிரமத்தில் இருக்கும்போது, வேப்பிலை துளிரை அரைத்து தினமும் சிறிது சாப்பிடுவார். அங்குள்ளவர்களுக்கும் கொடுப்பார். வேப்பிலையின் மருத்துவ குணம் கருதியே இதைச் செய்தார்.
* குளிர் காலங்களில், கம்பளித் துணியை தலையில் சுற்றிக்கொள்வார். நாளடைவில் அது கிழிந்து போனது. புதிய கம்பளியை கொடுத்தார் ஆசிரமத்தில் இருந்தவர். ஆனால் காந்தி கிழிந்த அந்த கம்பளியை தூக்கிப்போடாமல் தானே ஊசி கொண்டு தைத்து, மேலும் சில நாட்களுக்குப் பயன்படுத்தினார்.
1901-ஆம் ஆண்டில், இந்திய காங்கிரஸ் மகாசபை, கொல்கத்தாவில் நடைபெற்றது. அதற்கு காந்திஜியும் சென்றிருந்தார். அந்த இடம் ஒரே குப்பையாக இருந்தது. 'இங்குள்ள குப்பைகளை பெருக்கி அள்ள வேண்டும்' என்றார் காந்தி. அதற்கு அந்தத் தொண்டர் 'நாம் குப்பை அள்ளுபவர் அல்ல' என்றார். உடனே காந்தி, 'நாம் இருக்கும் இடத்தை நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும்' என்று கூறி துடைப்பத்தை எடுத்து கூட்ட ஆரம்பித்தார்.
இப்படி, காந்தியடிகள் வாழ்க்கையில் பின்பற்றிய அன்றாடப் பழக்கங்கள் பலவும் நமக்கான பாடங்களாக இருக்கின்றன.
