நைச்சி ஒன்று சுவரின் மீது அமர்ந்திருந்தது. வீட்டிலிருந்து ஓர் அம்மா, சாப்பிட அடம் பிடிக்கும் தன் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி வெளியில் வந்தாள்.
''இதப் பார், நீ சாப்பிடாட்டி எல்லா சோற்றையும் நைச்சிக்கு போட்டு விடுவேன்'' என்று மிரட்டினாள்.
அதுவோ சுட்டிக்குழந்தையாக இருந்தது. ''சரி வச்சிடு'' என்று இடுப்பில் இருந்தபடியே முகத்தை திருப்பிக் கொண்டது. அம்மாவின் கையையும் தட்டிவிட்டது.
'குழந்தைக்கு ஏன் சோறு பிடிக்கவில்லை?' என்பதுதான் அம்மாவின் கவலையாக இருந்ததே ஒழிய, அது கையைத் தள்ளி விட்டது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
அவள் அந்த நைச்சி அமர்ந்திருக்கும் சுவர் அருகே சென்றாள். அதற்கு கிண்ணத்தில் இருந்து சிறிது சோற்றை எடுத்து வைத்தாள்.
அவ்வளவுதான். அந்த நைச்சி, 'கா...கா... என்று கரைய, எங்கிருந்தோ நான்கைந்து நைச்சிகள் பறந்து வந்தன. அவை அந்த கொஞ்சம் சோற்றை, பகிர்ந்து உண்ண ஆரம்பித்தன.
நைச்சிகள் அலகால் கொத்திக் கொத்தி சாப்பிடுவதைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது குழந்தை. அம்மா அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, குழந்தைக்கு சாதம் ஊட்ட, அது அடம் பிடிக்காமல் சாப்பிட ஆரம்பித்தது. பின் வந்த நாட்களிலும் அம்மா அந்த நைச்சிப் பறவைகளுக்கு சோறு வைத்தாள். தன் குழந்தைக்கும் ஊட்டினாள். அந்தப் பறவைகளைப் பற்றி தினம் ஒரு கதையாக சொல்லத் தொடங்கினாள்.
அது சரி, இந்தக் கதையில் வரும் நைச்சி பறவை 'காகம்' என்று அம்மா சுவரில் சோறு வைக்கும்போதே கண்டு பிடித்து விட்டீர்கள்தானே! நைச்சி என்பதற்கு பாம்பு என்றொரு பொருளும் உண்டு.

