sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நாலடியார் பிறந்த கதை

/

நாலடியார் பிறந்த கதை

நாலடியார் பிறந்த கதை

நாலடியார் பிறந்த கதை


PUBLISHED ON : ஆக 07, 2017

Google News

PUBLISHED ON : ஆக 07, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அரசே, ஒரு விண்ணப்பம்'' என்றார் அந்தச் சமண முனிவர்.

''என்ன முனிவரே? சொல்லுங்கள், எதுவானாலும் உடனே தீர்த்துவைக்கிறேன்'' என்று பணிந்தான் பாண்டிய அரசன்.

முனிவர் சற்றே தயங்கினார். பிறகு, சொல்லத் தொடங்கினார், ''அரசே, தங்கள் நாட்டில் என்னைப்போல் எட்டாயிரம் சமண முனிவர்கள் இருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்னால், எங்களுடைய சொந்த நாடுகளில் பஞ்சம் ஏற்பட்டதால், நாங்கள் இங்கு வந்தோம். வந்த பிறகு இங்கு சிறப்பாகவே வாழ்கிறோம்.''

''நீங்கள் எல்லாரும் இங்கே வந்தது எங்களுக்குப் பெருமை'' என்றான் அரசன். ''மக்களுக்கு நல்ல போதனைகளைச் சொல்லி வழிநடத்தும் உங்களைக் காக்கவேண்டியது எங்கள் கடமை.''

''அது சரிதான் அரசே! ஆனால், இதற்குமேலும் நாங்கள் இங்கே தங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.''

''ஏன் என்னாச்சு?'' என்று அதிர்ந்தான் அரசன்.

''இங்கே உங்களுக்கு என்ன குறை?'' என்றான்.

''எந்தக் குறையும் இல்லை. ஆனால், எங்கள் நாடுகளில் பஞ்சம் தீர்ந்துவிட்டதாக அறிகிறோம். ஆகவே, ஊர் திரும்ப விரும்புகிறோம். அரசர் இதைப் புரிந்துகொண்டு, எங்களை வழியனுப்பி வைக்க வேண்டும்.''

அரசனுக்கு அவர்களுடைய விருப்பம் புரிந்தது. ஆனால், அவர்களை அனுப்ப மனமில்லை. முனிவர்கள் தங்கள் நாட்டில் இருப்பது தனக்குப் பெருமையைச் சேர்க்கும் என்று அவன் கருதினான். ஆகையால், ''அப்புறம் பார்க்கலாம்'' என்று தள்ளிப்போட்டான்.

பல நாட்களாகிய பிறகும், அரசன் விடை தரவில்லை. ஆகவே, சமண முனிவர்கள் தாங்களே புறப்பட்டுச்செல்லத் தீர்மானித்துவிட்டார்கள்.

ஒருநாள், அவர்கள் எல்லாரும் ஆளுக்கொரு பாடல் எழுதினார்கள். தாங்கள் அதுவரை தங்கிய இடத்தில் வைத்தார்கள். தங்களுடைய நாட்டுக்குக் கிளம்பிவிட்டார்கள்.

அடுத்தநாள் காலை, ஒருவர் அரசனிடம் ஓடினார். ''அரசே, நம் நாட்டில் தங்கியிருந்த சமண முனிவர்கள் எல்லாரும் தங்கள் நாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.''

இதைக்கேட்ட அரசன் மிகவும் வருந்தினான். தன் நாட்டுக்கு வழிகாட்டிய அம்முனிவர்களைப் பிரிந்து வாடினான்.

''அரசே, அவர்கள் நமக்காகச் சில பாடல்களை எழுதி வைத்திருக்கிறார்கள்''என்றான் வந்தவன்.

''முனிவர்களே இல்லை, பாடல்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது?'' என்று கோபப்பட்டான் அரசன்.

''எல்லாப் பாடல்களையும் வைகையாற்றில் வீசிவிடுங்கள்.''

அரசன் சொன்னபடி அந்த எட்டாயிரம் பாடல்களும் வைகை ஆற்றில் வீசப்பட்டன. ஆனால், அவற்றில் 400 பாடல்கள் மட்டும் திரும்பிவந்தன.

இதைக்கண்ட அரசன் வியந்தான். அந்த நானூறு பாடல்களையும் தொகுக்கச்செய்தான். அதற்கு 'நாலடி நானூறு' (நான்கு அடிகளைக்கொண்ட நானூறு பாடல்கள்) அதாவது, 'நாலடியார்' என்று பெயர் சூட்டினான்.

சங்க இலக்கியத்தின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான 'நாலடியார்' நூலின் தோற்றத்தைப்பற்றிச் சொல்லப்படும் பழங்கதை இது. பின்வரும் பழம்பாடலில் அதனைக் காணலாம்:

மன்னன் வழுதியர்கோன் வையைப் பேராற்றின்

எண்ணி இருநான்கோடு ஆயிரவர் உன்னி

எழுதி இடு மேட்டில் எதிரே நடந்த

பழுது இலா நாலடியைப் பார்

- என். சொக்கன்






      Dinamalar
      Follow us