PUBLISHED ON : மார் 05, 2018

ஜேக் ரேஃபர்டி(Jake Rafferty) என்ற சிறுவன், முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டவன். 2 ஆண்டுகளுக்கு முன்பே இனி சிகிச்சையளிக்க எதுவுமில்லை என மருத்துவர்களால் முழுமையாகக் கைவிடப்பட்டவன். பெற்றோர் துயரத்தோடு தங்கள் மகனை வீட்டுக்கு அழைத்துப் போயினர்.
சில மணிநேரங்களில் மரணம் என்று கெடு விதிக்கப்பட்ட அச்சிறுவன் இரண்டாண்டுகளாக உயிரோடு இருக்கிறான். இப்போது அவனை சக்கர நாற்காலியில் முடக்கிய கட்டியும் கரையத் தொடங்கியுள்ளது. மருத்துவர்களையே அதிசயிக்க வைத்துள்ள இந்த முன்னேற்றத்தால் ஜேக்கின் பெற்றோர் உற்சாகத்தில் திளைக்கின்றனர்.
ஜேக்கின் 12வது வயதில் அவனது தண்டுவடத்தில் 8 கட்டிகள் கண்டறியப்பட்டன. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பல சிகிச்சைகளும் பயன் தராத நிலையில், சிக்கலான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விளைவு, ஜேக்கின் இடுப்புக்கு கீழ் பகுதி செயலற்றுப் போனது. சக்கர நாற்காலியில் மட்டுமே நகர முடியும் என்ற நிலைக்கு ஜோக் ஆளானான். இதற்கு மேல் சிகிச்சை எதுவும் பலனளிக்காது என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்தனர்.
ஜேக்கின் பெற்றோர் மகனை வீட்டுக்கு கொண்டு வந்த பின்னர், மருத்துவர்களின் ஆலோசனையை மீறி மகனுக்கு ஊட்டச்சத்து மிகுந்த இயற்கை உணவுகளை மட்டுமே அளிப்பது என்ற முடிவுக்கு வந்தனர். கூடவே பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பிவிட முடியும் என்று அவனிடம் நம்பிக்கை தரும் வார்த்தைகளையும் கூறி வந்தனர்.
இரண்டு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. ஜேக்கின் கட்டிகள் இப்போது கரையத் தொடங்கி இருப்பதால் சில தசைகளை அவனால் அசைக்கவும் முடிகிறது. வீட்டிலேயே பிசியோதெரப்பி, ஆக்குபேஷனல் தெரப்பி பயிற்சிகளை பெற்றுவரும் ஜேக், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே விளையாடக் கூடிய விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டுள்ளான். விரைவில் அவன் அதில் சாதிப்பான் என்று பெற்றோர் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.
ஜேக்கின் முன்னேற்றம் இயற்கை உணவுகளால் மட்டும்தான் என்று ஆராய்ச்சிபூர்வமாக நிறுவப்படவில்லை என்றாலும் அவன் பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக ஆர்கானிக் உணவுகளே இருக்கின்றன.
