தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அமேசானுக்கு மட்டுமல்ல; அகிலத்துக்கே!

அமேசானுக்கு மட்டுமல்ல; அகிலத்துக்கே!

அமேசானுக்கு மட்டுமல்ல; அகிலத்துக்கே!


PUBLISHED ON : செப் 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரங்களும் தாவரங்களும் அடர்ந்தது அமேசான் காடுகள்! கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கி ஆக்சிஜனை வெளிவிடுகிறது என்ற கருத்தில் இதன் முக்கியத்துவத்தை உணர்த்த, 'பூமியின் நுரையீரல்' என பலரும் கூறுகிறார்கள். அறிவியல் பார்வையில் இது பிழை.

காடுகளில் உள்ள தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது, கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளிவிடும். மரங்களும் விலங்குகளும் சுவாசிக்கும்போது, ஆக்சிஜனை உள்வாங்கி கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடும்.

மேலும் மடிந்த தாவரமும் மரமும் ஆக்சிஜனை உள்வாங்கி கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடும். இவ்வகையில் உலக காலநிலை சமநிலைக்கு அமேசான் காடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

* பூமி வெப்பம் அடைந்துவிடாமல் சற்றே குளிர்விக்கிறது.

* இந்தக் காடுகள் அழிந்தால் ஆற்றல் மற்றும் நீர்ச் சுற்றில் பெரும் மாற்றம் உண்டாகி, உலகக் காலநிலை அமைப்பில் தாக்கம் ஏற்படும்.

மழைப் பொழிவு

தென்அமெரிக்கப் பகுதியின் மழைப் பொழிவுக்கு அமேசான் காடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மரங்களின் இலைகளில் ஆவியாகும் நீராவியே மழையாகப் பொழிகிறது.

காடுகள் இல்லையென்றால் எங்கே, எப்போது, எவ்வளவு மழை பொழியும் என்பது மாறிவிடும். இது தென் அமெரிக்காவை மட்டுமல்ல; உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும்.

வளிமண்டலப் பாதிப்பு

காடு எரிந்து வளிமண்டலத்தில் புகும் தூசு, புகை போன்றவை மேகங்கள் உருவாவதைப் பாதிக்கும். வளிமண்டலக் காற்றுச் சுழற்சியால், இந்தப் புகை தூசு, உலகம் முழுவதும் பரவும். எனவே, உலகின் பல இடங்களில் மேகங்கள் உருவாகும் இயல்புப் போக்கைச் சில ஆண்டுகளுக்காவது மாற்றி அமைத்துவிடும்.

கார்பன் அளவு

காடுகள் எரிந்து போவதால், அதன் மரங்கள், தாவரங்களில் பொதிந்திருந்த கார்பன் வெளியேறும். அதாவது வளிமண்டலத்தில் கார்பன் அளவு கூடும். அமேசான் காடுகளில் புதிதாக முளைக்கும் மரங்கள், தாவரங்கள் வளிமண்டல கார்பனை உறிஞ்சியே வளர்கிறது.

அதாவது வளிமண்டலத்தில் இருந்து கார்பனை நீக்கும் ஓர் அமைப்பாக அமேசான் காடுகள் திகழ்கின்றன. காடுகள் அழிந்து விட்டால் புதிய மரம், தாவரங்கள் வளராமல் புல்வெளியே உருவாகும். புல்வெளியால் அவ்வளவு கார்பனை உறிஞ்சி தக்கவைக்க முடியாது.

அதாவது வளிமண்டலத்தைச் சுத்தப்படுத்தும் அமைப்பு சிதைந்து, வளிமண்டலத்தில் கார்பன் அளவு கூடும். இந்த அளவு கூடினால், சராசரி வெப்பம் உயர்ந்து புவி வெப்பமடைதல் மேலும் தீவிரமாகும்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் அமேசான் காடுகள் அழிந்த அளவுக்கு, இந்த ஒருமுறையில் அழிந்துள்ளது.

-த.வி.வெங்கடேஸ்வரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us